தேன்கனிக்கோட்டை சாலை திறப்பது எப்போது

தேன்கனிக்கோட்டை சாலை திறப்பது எப்போது

கடந்த ஆறு திங்கங்களுக்கு மேலாக, தேன்கனிக்கோட்டை சாலையில் பொது போக்குவரத்திற்கு, மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டு மக்கள் அல்ல படும் நிலை தொடர்கிறது. 

மாற்று வழிகள் எதுவும் திட்டமிடப்படாமல், தளிச்சாலையையும் மேம்படுத்தாமல், வட்டாட்சியர் அலுவலகம் - தொடர்வண்டி நிலையம் இணைக்கும் சாலையில் அமைந்துள்ள கீழ்பாலத்தையும் மேம்படுத்தாமல்,  தன்னிச்சையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர்களால் போக்குவரத்திற்கு தேன்கனிக்கோட்டை சாலை மூடப்பட்டதால், எத்தனை அப்பாவி உயிர்கள், மருத்துவ தேவை உடனடியாக கிடைக்காமல் மரணித்துப் போனது என்பது யாம் அறியோம்! 

2024 பிப்ரவரி கடைசியில் சாலை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்று அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், ஓசூர் சாராட்சியரும் HOFARWA-விடம் உறுதி மொழிகள் கொடுத்ததை இப்போது மீண்டும் நினைவு கூற வேண்டியுள்ளது.

தொடர்வண்டி பாதை கட்டுமான பணிகள் நடப்பதாக கூறப்படும் பகுதியை உற்று நோக்கினோம் என்றால், கடந்த இரண்டு திங்கள்காக - சுமார் 60 நாட்களாக அங்கே மேற்கொண்டு எவ்வித பணிகளும் நடைபெறாமல், மண்குவியல்கள் மட்டும் ஒரு பகுதியில் அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியும், மற்றொரு பகுதியில் இரவு நேரங்களில் பேருந்து உள்ளிட்ட அனைத்து வண்டிகளுக்கும் போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. 

பணிகள் எதுவும் கடந்த அறுபது நாட்களாக மேற்கொள்ளப்படாமல், இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு ஒரு பகுதி சாலையை மட்டும் அனுமதி கொடுத்து வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பகல் வேலைகளில், பயன்பாட்டிற்கு திறந்து விடவில்லை.  

மாவட்டத்தின் ஆட்சியாளர்கள் இதில் உடனடியாக தலையிட்டு சாலையை திறக்க தயக்கம் காட்டுவது ஏன்?  இதனால் ஆட்சியாளர்களுக்கு என்ன தனிப்பட்ட பயன்? போன்ற கேள்விகளை பொதுமக்கள் மனம் வெதும்பி புலம்பத் துவங்கி விட்டனர். 

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மனநிலை, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்துவதில் எதிரொலிக்கும் என்பதை மாவட்டத்தின் அரசு அலுவலர்கள் புலனாய்வு பிரிவுகள் மூலம் நன்கு அறிந்திருக்கும் வாய்ப்பிருந்தும், இந்தச் சாலையை போக்குவரத்திற்கு திறந்து விடாமல், உள்ளாட்சி மற்றும் மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் மனநிலை அமைவதை அறிந்தும் மௌனம் ஏன் காக்கின்றனர் என்று ஓசூர் தன்னார்வலர்கள் ஐயப்படுகின்றனர். 

ஒரு லிட்டர் டீசலுக்கு சரக்குந்து மற்றும் பேருந்துகள் சுமார் 6 கிலோ மீட்டர் பயணிக்கும் என கணக்கிட்டுக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு, அத்தகைய வண்டிகள் சுமார் 3000 க்கு மேல், சாலை மூடப்பட்டுள்ளதால் 6 கிலோ மீட்டர் சுற்றிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  பண மதிப்பில், இது சுமார் Rs 88 x 3000 = 2,64,000.  அப்படியானால் கடந்த ஆறு திங்கள்களில் விரயமாக டீசலுக்கான செலவினங்கள் மட்டும் Rs 47,52,000.  இவையல்லாம், ஆயிரக்கணக்கான இருசக்கர வண்டிகளும் பிற நான்கு சக்கர வண்டிகளும் இவ்வாறு சுற்றிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு டீஸல் மற்றும் பெட்ரோல் எரிக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் எரிக்கப்பட்டால், அதன் மூலம் சுமார் 2.6 கிலோ கரிவளி – (கரிம காற்று - கார்பன் டையாக்சைடு) வெளியிடப்படுகிறது.  3000 லிட்டர் டீசல் மற்றும் அதே அளவிலான பெட்ரோல் என்று கணக்கிட்டோம் என்றால், ஓசூருக்கு இந்த சாலை முடக்கத்தால் ஏற்படும் காற்று மாசு மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய் நொடிகள், அதனால் ஏற்படும் மனவேதனையும் துன்பமும் துயரமும் கணக்கில் அடங்காது.

குழந்தைகளும், பெண்களும், வயது முதிர்ந்தவர்களும் இப்போது ஓசூரில் மூச்சுத் திணறல் நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு அடிப்படையாக அமைந்திருக்கலாம் என்று தன்னார்வலர்கள் அச்சப்படுகின்றனர். 

பொறுப்பாளர்கள் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் மக்களின் துன்ப நிலை குறித்து எடுத்துரைத்து, தேன்கனிக்கோட்டை சாலையை உடனடியாக போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆவண செய்ய வேண்டும் என தன்னார்வலர்களும் ஓசூர் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: