ஓசூரில் பட்டாசு விற்பனை கடைகள் நிரந்தர உரிமம் பெற்றும் ஆண்டு முழுவதும் இயங்கி வரும் சூழலில், தீபாவளியை ஒட்டி புற்றீசல் போல குறுகிய நாட்களுக்கான உரிமம் பெற்ற ஆயிரக்கணக்கான பட்டாசு கடைகள் ஓசூர் நகர் முழுவதும் அமைக்கப்படுகின்றன.
ஓசூர் நகர் மட்டுமல்லாது, பெங்களூருவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளிலும் குறுகிய நாட்களுக்கு உரிமம் பெற்ற ஏராளமான பட்டாசு கடைகள் அமைக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து இத்தகைய கடைகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து தங்களுக்கு தேவையான தரமான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
இப்படி குறுகிய நாட்களுக்கு உரிமம் பெறும் கடைக்காரர்கள், தாங்கள் அனுமதி பெற்ற பட்டாசுகளை சேமித்து வைக்கும் அளவை காட்டிலும் பல மடங்கு பட்டாசுகளை சேமித்து வைப்பதால், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடுகிறது.
ஓசூர் பகுதி காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர கண்காணிப்பையும், புலனாய்வையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நாள் தனிப்படை காவல்துறையினருக்கு, ஒரு பட்டாசு குடோனில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பெருமளவு பட்டாசு சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கமுக்கமான தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை காவலர்கள், நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது, குடோனில் ஒன்றரை Ton பட்டாசுகள் இருப்பு வைப்பதற்கு அனுமதி வாங்கி, 33 Ton பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குடோனில் வைக்கப்பட்டிருந்த 33 Ton பட்டாசுகளை பறிமுதல் செய்த காவலர்கள், அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.