பங்குச் சந்தையில் முதலீடு செய்து பெருமளவு வருவாய் ஈட்டலாம், என ஆசை வார்த்தை கூறி, ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம், ரூ. 5.30 லட்சம் மோசடி செய்தது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர் வினவி வருகின்றனர்.
ஒசூா், பாகலூா் சாலை பகுதியைச் சோ்ந்த, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரது கைப்பேசிக்கு, வாட்ஸ்ஆப் மூலம் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் தகவல் வந்தது. அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், பெருமளவு வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பதிவை உண்மையென நம்பியவா், சிறிய தொகையை முதலீடு செய்தாா். முதலீடுக்கு ஏற்ப பெரிய அளவிலான வருவாய் கிடைத்ததால், தன்னிடமிருந்த ரூபாய் ஐந்தரை லட்சத்தை, மா்ம நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு செலுத்தினார்.
இதன் பிறகு, மர்ம நபா்களிடமிருந்து எந்த தகவலும் வராததோடு, முதலீட்டுக்கு வருவாய் ஏதும் கிடைக்காததால், ஐயமடைந்தவர், மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தவர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள இணைய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து வினவி வருகின்றனர்.
காவல்துறையினர், ஓசூர் பாகலூர் சாலையை சேர்ந்தவர், ரூபாய் ஐந்தரை லட்சம் செலுத்திய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், ஒரு வங்கி கணக்கில், ரூபாய் 79 ஆயிரத்து நானூத்தி எழுவத்தி நாலு இருப்பதை அறிந்து, அந்த வங்கிக் கணக்கை முடக்கினர். மற்ற வங்கிக் கணக்குகள் குறித்தும், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக வினவி வருகின்றனர்.