Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் தொடர்வண்டி நிலையம் அருகே, பொதுப் பாதையை மறித்த ஓசூர் ரயில்வே நிர்வாகம்!

மருத்துவமனை, கல்விக்கூடங்கள், பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றிற்கு, ஓசூர் தொடர் வண்டி நிலையம் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த, சுமார் 1000 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த, அரசின் அனுமதியுடன் கூடிய பொதுப் பாதையை, ஊப்ளியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஓசூர் ரயில்வே நிர்வாகம், குழிப்பறித்து தடை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதி மக்களிடையே, அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூர் தின்னூர் பகுதி மக்கள், நூற்றாண்டுகளாக, இடுகாடு மற்றும் சுடுகாடு செல்வதற்கு இந்த பொதுப் பாதையை தான் பயன்படுத்தி வந்துள்ளனர். 

ரயில்வேயின், Level Crossing எண் நூற்று இரண்டு, என்று இருந்த பொதுமக்களின் வழித்தடத்தை, அகல இருப்புப் பாதை அமைத்து, அதற்கு மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதை அமைத்து தருவதாக கூறி இடைக்காலமாக தடுத்துள்ளனர். 

ரயில்வே நிர்வாகத்தின் உறுதி மொழியை, உண்மை என நம்பிய பொதுமக்கள், தடுப்பதற்கு அனுமதி கொடுத்த நிலையில், இருப்புப் பாதையின் இரு மருங்கிலும், சாலைகள் அமைந்துள்ள நிலையில், இருப்புப் பாதையை கடப்பதற்கு மட்டும், முறையான வழித்தடம் ரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்படாமல் உள்ளது.

பாதையை மீண்டும் அமைத்துத் தரும்படி, பாதையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், ஓசூர் ரயில்வே நிர்வாகத்திடம் வேண்டிய போது, பெங்களூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.  பெங்களூர் சென்று, அங்கே மனு கொடுத்தால், பொதுமக்களை,  தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் தலைமையகமான, ஊப்ளி சென்று, அங்குள்ள, உயர் அலுவலர்களை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் எனக் கூறி, பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கு ரயில்வே நிர்வாகம், பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக, பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக, ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், பலமுறை மனு கொடுத்தும், ரயில்வே நிர்வாகம் சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஓசூர் மாநகராட்சி இடம் ஒப்படைக்கப்பட்ட சாலை பகுதியையும் குழி தோண்டி, சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இடைக்காலமாக இருப்புப் பாதை மேல் சென்ற, Level Crossing எண் நூற்று இரண்டு, சாலையை மறிப்பதற்கு, ஓசூர், உள்ளூர் அலுவலர்களை வைத்து, பொதுமக்களிடம் அனுமதி பெற்ற ரயில்வே நிர்வாகம், அதேபோன்று, சாலையை மீண்டும் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் பொழுது, பொறுப்பை தட்டிக் கழிக்காமல், உள்ளூர் அலுவலர்களைக் கொண்டே தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இதில் தலையிட்டு, தங்களுக்காக ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, ஏற்புடைய தீர்வை பெற்றுத் தரும்படி பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: