இந்திய நாட்டின் முதல் முதன்மை அமைச்சர், ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை, நாடு முழுவதும், குழந்தைகள் நாளாக கொண்டாடுகின்றனர். ஓசூரில், பெரும்பாலான பள்ளிகளில், குழந்தைகள் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளிகளைப் பொறுத்தவரை, செப்டம்பர் 5, ஆசிரியர் நாள் அன்று, மாணவர்கள் ஆசிரியர்களை சிறப்பிப்பர். மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி, ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து, அந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவர்.
நவம்பர் 14, குழந்தைகள் நாளை பொருத்தவரை, ஆசிரியர்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, மானாக்கர்களை மகிழ்விப்பர்!
ஓசூரில், காலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் காந்தி சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர்.
-------------------
ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில், Shanthi நகரில் அமைந்துள்ள, புனித ஜான்போஸ்கோ பள்ளியில், துவக்கப்பள்ளி ஆசிரியைகள், பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடி, மாணாக்கர்களை மகிழ்வித்தனர்.
தொடர்ந்து, மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள், நகைச்சுவை நாடகம் மூலமாக, மாணாக்கர்கள், கல்வி பயில வேண்டிய நேரத்தில், கைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.
அதே பள்ளியின் ஆசிரியர்கள், நடனமாடி மாணவர்களை மகிழ்வித்தனர். துவக்கப்பள்ளி தலைமை பொறுப்பு ஆசிரியர் திரு நாகராஜ், பாட்டு பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.
மாணாக்கர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
----------------------
ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, குழந்தைகள் நாள் விழாவையொட்டி, பள்ளி கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
நம் பள்ளி, நம் பெருமை! திட்டத்தை முன்னிட்டு, குழந்தைகள் நாள் விழாவில், பெற்றோர்கள், பள்ளிக்கு தேவையான கல்வி சீர் பொருட்கள் வழங்கலாம், என்று பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி பேடரப்பள்ளி பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும், பெற்றோர்களும், பள்ளிக்கு தேவையான குடை, பாத்திரங்கள், உடல்நலன் பொருட்கள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தங்களது குழந்தைகளுடன் எடுத்து கொண்டு, பேரணியாக பள்ளிக்கு வந்து கொடுத்தனர்.
இந்த பேரணியை பள்ளி கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஓசூர் மாமன்ற 3 வது வார்டு கவுன்சிலர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன் நாகேஷ் அனைவரையும் வரவேற்றார்.
--------------------------------
ஓசூர் சூசூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜவஹர்லால் நேருவின் 136 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அவரது படத்திற்கு மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிறிதர் பங்களிப்புடன், பள்ளியில் படிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு, சுடச்சுட பிற்பகல் உணவு வழங்கப்பட்டது. கேசரி, வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், ஆகிய உணவுகளை, பள்ளி மாணாக்கர்களுக்கு, ஆசிரியர்கள் பரிமாறினர். மகிழ்ச்சியோடு மாணவ மாணவியர்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.
-----
குழந்தைகள் நாளை சிறப்பிக்கும் விதமாக, ஓசூரின் பெரும்பாலான பள்ளிகளில், இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகள், இன்று நடைபெற்றது.