Hosur News, ஓசூர் செய்திகள் - அருவாளால் வெட்டப்பட்ட ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?

அருவாளால் வெட்டப்பட்ட ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? வழக்கறிஞர் கண்ணன், உடன் பணியாற்றிய பெண் வழக்கறிஞர் சத்யாவதி என்பவரது கணவர், ஆனந்தகுமார் என்பவரால், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வைத்து, கொடூரமான முறையில் வீச்சருவாளால், கடந்த நவம்பர் 20 ஆம் நாள் பிற்பகல் ஒரு மணி அளவில் வெட்டப்பட்டார். 

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வழக்கறிஞர் கண்ணனை, ஆம்புலன்ஸ் வருகைக்காக பொறுத்து இருக்காமல், உடன் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  சற்று நேரத்தில், அங்கிருந்து மேல் மருத்துவத்திற்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள, தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

அங்குள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர் கண்ணனுக்கான மருத்துவ தேவையை, ஒரு சவாலாக ஏற்று, தொடர் கண்காணிப்புடன் கூடிய, சிறப்பான மருத்துவ உதவி வழங்கி வருகின்றனர். 

அவருக்கு அளிக்கப்பட்டு வரும், மருத்துவம் மற்றும் அவரது உடல்நிலை குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் குறிப்பிடும்பொழுது, கண்ணன் நன்றாக உடல்நிலை தேறி வருகிறார்.  அவருக்கு ஏற்பட்ட வெட்டுக் காயங்கள் விரைவாக குணமடைந்து வருகின்றன.  மருத்துவர்கள் எதிர்பார்ப்பை காட்டிலும் விரைவாக, மூளை பகுதியில் ஏற்பட்ட காயங்கள், நலம் பெற்று வருகிறது. 

கண்ணன் தாமாக சில செயல்களை செய்ய முயற்சி செய்கிறார்.  நன்றாக மூச்சு விடுகிறார்.  படுக்கையில் தாமாக, உட்காருவதற்கும், படுக்கையை விட்டு இறங்கி நாற்காலியில் அமர்வதற்கும் விரும்புவதால், மருத்துவர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கொண்டு, சற்று நேரம், உட்கார இயல்கிறது. 

தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து, அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்.  உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனிக்கிறார். 

காவேரி மருத்துவமனை மருத்துவர்களின், சிறந்த மருத்துவம் வழங்கும் ஆற்றலால், கண்ணன் உடல்நிலை தேறி வருகிறார் என்று சொன்னால் அது மிகை ஆகாது.  விரைவில் அவர் குணம் பெற்று வீடு திரும்ப, வாழ்த்துகிறோம், எனக் கூறினார். 

வழக்கறிஞர் கண்ணன் உடல்நலம் பெற்று, மீண்டும் தனது பணியை சிறப்பிடம் தொடர ஓசூர் ஆன்லைன் சார்பில் வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: