ஓசூர் விமான நிலையம், இரண்டாயிரம் ஏக்கர் விளை நிலங்களை வீணாக்குமா? பயன் தருமா? உதான் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விமான நிலையங்கள் தோல்வியுற்றுள்ள சூழலில், ஓசூர் ஆன்லைனிடம் கிடைக்கப்பெறும் தரவுகளை பொருத்தவரை, ஓசூரில் விமான நிலையம் அமைத்தால், பிற மூன்றாம் வரிசை நகரங்களை காட்டிலும், ஓசூர் விமான நிலையம் உறுதியாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றே தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஒன்றிய அரசின் கனவு திட்டங்களில் ஒன்று, இப்போது இருக்கும் 157 விமான நிலையங்களை வரும் 2047 ஆம் ஆண்டிற்குள், இரண்டு மடங்கிற்கும் சற்று கூடுதலாக, அதாவது 350 விமான நிலையங்களை, இந்தியா முழுவதும் அமைப்பது என்பதாகும்.
விமான நிலையங்களும், அதன் எண்ணிக்கைகளும், கேட்பதற்கு இனிமையாகவும், வளர்ச்சி பாதையின் ஒரு அங்கமாகவும் வெளிப்போக்கான நிலையில் தோன்றினாலும், தரவுகளை ஆழ்ந்து அலசினோம் என்றால், அது வேறு வகை தகவலை வெளி கொணர்கிறது.
விமான நிலையம் அமைத்து விட்டாலே, அதைத் தேடி ஏராளமான மக்கள் பயணம் செய்ய வந்து விடுவார்கள், என்று கற்பனை செய்வது மாயை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன, புதிதாக அமைக்கப்பட்ட விமான நிலையங்கள் பல. எடுத்துக்காட்டாக, புதுச்சேரி விமான நிலையம். ஏராளமான வட இந்தியர்களும், வெளிநாட்டினரும், அலைகடலென, கடற்கரை நகரமான புதுச்சேரி நோக்கி வந்த வண்ணம் இருந்தாலும், விமான நிலைய திட்டம், அந்நகரை பொருத்தவரை தோல்வியடைந்த நிலையில் உள்ளது.
அடுத்த எடுத்துக்காட்டாக, நாம் உத்தரப்பிரதேச மாநிலம், குசி நகர் விமான நிலையத்தை எடுத்துக் கொள்ளலாம். உலக அளவில் இருந்து, ஏராளமான பௌத்த துறவிகளும், பௌத்தர்களும், அந்த விமான நிலையத்தை பயன்படுத்தி, அருகே அமைந்துள்ள பீகாரின் பௌத்த மடங்களுக்கு வருகை புரிவார்கள், என எதிர்பார்த்து அமைக்கப்பட்ட விமான நிலையம், இன்று பயனற்ற நிலையில் உள்ளது.
மூன்றாவதாக, மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சிந்து துற்கு விமான நிலையம். ஏராளமான பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், இன்று பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
ஓசூரை பொறுத்தவரை, அனைத்து Taxi உரிமையாளர்களின் கணக்கின்படி, நாள் ஒன்றிற்கு, சராசரியாக 300 பயணிகள், பெங்களூரு விமான நிலையத்தை, ஓசூரில் இருந்து, தனியாக Cab ஏற்பாடு செய்து பயன்படுத்தி பயணிக்கிறார்கள். ஓசூரில் உள்ள நிறுவனங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் Taxi Cab, கணக்கில் எடுத்துக் கொண்டால், பெங்களூரு விமான நிலையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மேற்கொண்டு 400 பயணிகள் எனலாம். Taxi மட்டுமில்லாமல், தனி நபர்கள், தங்களது வண்டிகளில், ஓசூரில் இருந்து பெங்களூர் விமான நிலையம் சென்றடைப்பவர்களும் ஏராளம். பேருந்துகள் மற்றும் பிற வாய்ப்புகள் மூலம் பயணித்து, ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை பயன்படுத்தி பறப்பவர்கள் ஏராளம் என தெரிவிக்கின்றனர் பயணிகள்.
புதிதாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்ட, விமான நிலையங்கள் தோல்வி அடைவதற்கான அடிப்படையாக அமைவது பயணிகளின் எண்ணிக்கை இல்லாமை. ஆனால் ஓசூரை பொறுத்தவரை, இந்த பயணிகளின் எண்ணிக்கை தரவுகளை கணக்கில் கொண்டோம் என்றால், இந்திய ஒன்றிய அரசு, பிற நகரங்களில் விமான நிலையம் அமைப்பதில் காட்டும் முனைப்பை, ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு காட்டினால், ஓசூர் விமான நிலையம், இந்தியாவின் மற்றொரு முழுமையாக, வெற்றிகரமாக செயல்படும் விமான நிலையமாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க இயலாது.
ஓசூர் விமான நிலையம் அமைந்தால், அதை பயன்படுத்தவரின் எண்ணிக்கை மேற்கொண்டு பெருகுவதோடு, ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தின் தொழில் வளர்ச்சி, மேம்படும் என்கின்றனர் தன்னார்வலர்கள். அதனால் இந்திய ஒன்றிய அரசிற்கு வரி வருவாய் பெருகும்.