ஓசூர் அருகே, நாயை கட்டி போடச் சொன்னவரின் மண்டையை உடைத்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்! சுமார் இருபதற்கும் மேற்பட்டவர்கள், தம்மை வளைத்து வளைத்து, தர்ம அடி போட்டதாக, பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேதனையுடன் கூறினார்.
43 வயதுடைய வேணுகோபால், ஓசூரை அடுத்த பாகலூர் ராஜீவ் காந்தி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த நாள் காலை 10 மணியளவில், அதிமுகவை சேர்ந்தவரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான, 57 வயதுடைய ஜெயராம் என்பவரது வீட்டை, தனது, மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வண்டியில், கடந்து சென்றுள்ளார்.
ஜெயராமன் வீட்டில் வளர்க்கும் நாய், கட்டி வைக்கப்படாமல், சாலை அருகே அவிழ்த்து விடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அந்த நாய், வேணுகோபாலை கடிக்க விரட்டிச் சென்றுள்ளது. அச்சத்தில், நிலை தடுமாறிய வேணுகோபால், இருசக்கர வண்டியுடன் தரையில் கீழே விழுந்துள்ளார்.
இந்த நிகழ்வை, ஜெயராமனின் மனைவி ஆனந்தம்மா, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதாக கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற வேணுகோபால், நாயை கட்டி வைக்காமல், கடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது சரியா, என கேள்வி எழுப்பியதுடன், கட்டி வைக்கும்படி அறிவுரை கூறியுள்ளார்.
தனது நாய் விரட்டியதை வேடிக்கை பார்த்த ஆனந்தம்மாவிற்கு, வேணுகோபாலின் கேள்விகள் எரிச்சலை ஏற்படுத்தி, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமுற்ற வேணுகோபால், ஆனந்தம்மாவின் கைபேசியை பிடுங்கி எறிந்ததாகவும், நாற்காலியை தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்தகவலை, ஜெயராமனின் மனைவி ஆனந்தமா, தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். மாலை சுமார் ஐந்து மணி அளவிற்கு வீடு வந்த ஜெயராமன், தனது வீட்டின் C C T V காட்சிகளை ஆராய்ந்து, நடந்த நிகழ்வை தெரிந்து கொண்டார். ஆத்திரமுற்ற அவர், ராஜீவ் காந்தி நகரில் உள்ள வேணுகோபாலின் கடைக்கு சென்று, கடையில் இருந்த பொருட்களை சூறையாடி, வேணுகோபாலுக்கு தர்ம அடி கொடுத்துள்ளார். அவருடன், அவரது மகனும் உடன் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் இருபதற்கும் மேற்பட்டவர்கள், தம்மை தாக்கியதால் நிலைகுலைந்த வேணுகோபால், ஓசூர் அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேணுகோபாலை அடித்த அடியில் கை வீங்கிய ஜெயராமன், அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பியுள்ளார்.
பாகலூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து வினவி வருகின்றனர்.