Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில், அரசு ஆவணங்களில் காணாமல் போன ஊர்! பல கோடி ரூபாய் ஊழல் என குற்றச்சாட்டு!

ஓசூர் மாநகராட்சியில் ஒரு முழு ஊரையே கணக்கில் கொண்டு வராமல் வரி ஏய்ப்பு?  தல அஜித் நடித்து, இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படம், அத்திப்பட்டி என்னும் ஒரு ஊர் அரசின் ஆவணங்களிலிருந்து மாயமாகி இருப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.  ஓசூரில் ஒரு முழு ஊர், மாநகராட்சி ஆவணங்களில் இல்லாமல் போய் உள்ளது.  அங்கே சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கடந்த 14 ஆண்டுகளாக வரி கட்டாமல், பல நூறு கோடி ரூபாய், மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்த அதிர்ச்சி தகவல்களை, ஓசூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், விளக்கிக் கூறிய மாமன்ற உறுப்பினர் N S மாதேஸ்வரன், சிட்டிசன் படத்தை போல் ஓசூர் மாநகராட்சியில் உள்ள அனுமேப்பள்ளி அக்ரஹாரமே வருவாய்த்துறை ஆவணத்தில் இல்லை. அங்குள்ள 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு கடந்த 14 ஆண்டுகளாக வரி விதிக்கவில்லை. மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையாக விளங்கும், 35 ஆண்டுகளாக இதே மாநகராட்சியில் பணியாற்றும், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மீது ஏன் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 

தகுதியில்லாத சுரேஷ், சிறப்பு வருவாய் ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் தொழிற்சாலை பக்கமே செல்வதில்லை. சொத்து வரி விதிக்க சொன்னால், பல லட்சம் ரூபாய் செலவாகும் என கூறி, தங்களை கவனி என கேட்கின்றனர். 5,000, 50,000 என கையூட்டு வாங்கியுள்ளனர். ஆணையாளர் நல்லவராக இருப்பதால் அவரை ஏமாற்றுகின்றனர். இதை ஆணையாளர் வேடிக்கை பார்க்க கூடாது. ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், கழிவறைகள் பாழடைந்த நிலையில் இருப்பதாக, 3 ஆண்டுகளாக புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. 

வணிக வளாகங்களின் மின் இணைப்பு தரவுகள் பட்டியலை மின்வாரியத்தில் கேட்டு பெற்றதை போல, தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பட்டியலை கேட்டு பெற்றிருந்தால், பல கோடி ரூபாய் இழப்பு, ஓசூர் மாநகராட்சிக்கு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். அதை ஏன் மாநகராட்சி மேலாண்மை செய்யவில்லை. 

ஓசூர் பேருந்து நிலையத்தில், பேருந்துகளுக்கு நுழைவு கட்டண வசூல் ஏலம் எடுத்தவர், அதற்கான தொகையை மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. கடந்த 6 திங்கள்களாக பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்காமல் உள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய், ஓசூர் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி வரைபடமே, ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் இல்லை. 

என்பன உள்ளிட்ட ஏராளமான தகவல்களை, விளக்கி கூறினார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: