Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் 5 துப்பாக்கிகள் பறிமுதல். குற்றவாளிகளுக்கு Body Guard, இந்திய ராணுவ முன்னாள் வீரர்கள்?

ஓசூரில் ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல்.  குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக, தனியார் ஏஜென்சி மூலமாக, இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் பணியமர்த்தப்பட்டார்களா?  ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், இன்று காலை 11 மணியளவில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன், கொலை குற்றவாளிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களில், கொலை குற்றவாளியும், அவருக்கு பாதுகாப்பாக ஏராளமான துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும், ஓசூர் நீதிமன்ற வளாகம் நோக்கி வந்ததால், அரசு மருத்துவமனை சந்திப்பு முதல், நீதிமன்ற வளாகம் அருகே உள்ள அண்ணா சிலை வரையிலான பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 


ஓசூர் அடுத்த கொளதாசபுரம் எனும் ஊரில், கடந்த செப்டம்பர் 18 ஆம் நாள், மதுபான கடை அருகே, வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  வழக்கு தொடர்பாக பாகலூர் காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு கிடந்தவர், கர்நாடக மாநிலம் சூளகுண்டா பகுதியைச் சேர்ந்த, இருபத்து ஆறு வயதுடைய ரேவந்த் குமார் என்பது தெரிய வந்தது. 

இந்த கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரேவண்ணா என்பவரை பாகலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.  விநாயகர் சிலை வைப்பது தொடர்பான மோதலில், கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  இவ்வழக்கு ஓசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில், கடந்த நாள் ரேவண்ணாவிற்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், கையொப்பமிடுவதற்காக, ஓசூர் நீதிமன்ற வளாகத்திற்கு, ரேவண்ணா, பாதுகாவலர்களுடன் காரில் வந்துள்ளார். 

அங்கிருந்த பாகலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரகாஷ், ஓசூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர், காரை ஆய்வு செய்தனர்.  அப்போது, காரினுள் சுமார் ஐந்து துப்பாக்கிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்த தகவலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களிடம் தெரிவித்தனர். அவர் நேரில் வந்து, ஓசூர் நகர் காவல் நிலையத்தில் வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டார். 

துப்பாக்கிகள், கர்நாடக மாநிலத்தில் அனுமதி பெற்றவை என்றாலும், தமிழ்நாடு காவல்துறைக்கு, முறையான தகவல் வழங்காமல் மற்றும் அனுமதியோ பெறாமல், தமிழக எல்லைக்கு அத்தகைய ஆயுதங்களை கொண்டு வந்ததுடன், நீதிமன்ற வளாகத்தின் உள்ளும், நுழைய முற்பட்டதால், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், துப்பாக்கிகள், தனிப்பட்ட நபர்களின் பயன்பாட்டிற்காக உரிமம் பெறப்பட்டது என்பதால், அதை பிறரின் பாதுகாப்பிற்காக கொண்டு வந்ததும் குற்றச் செயலாகவே கருதப்படுகிறது.  இது குறித்து ஐந்து நபர்களிடம், காவல்துறையினர் தொடர்பு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: