ஓசூரில் இறுக்கமாக கட்டிப்பிடித்து பைக்கில் பயணம் செய்த இணையர்கள் கைது. நெருங்கி இருக்கமாக பைக்கில் பயணிப்பது குற்றமா? 31 வயதுடைய தொழிலாளி ஆனந்தன் மற்றும் அவரது துணைவி 32 வயதுடைய ராணி ஆகியோரை கைது செய்து, அவர்கள் பயணித்த இருசக்கர வண்டியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்செய்தி, ஓசூரை அடுத்த, கெலமங்கலம் மற்றும் பைரமங்கலம் ஆகிய பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர், ஓசூர் கெலமங்கலம் சாலையின், பைரமங்கலம் பிரிவு சாலையில், வண்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வண்டியில் பயணித்த இணையர், நெருக்கமாகவும், இறுக்கமாகவும், கட்டி அணைத்தபடி வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் பயணித்த இருசக்கர வண்டியை ஆய்வுக்கு உட்படுத்திய போது, இருக்கைக்கு கீழ், பெரிய பொட்டலம் ஒன்று இருந்துள்ளது.
அது குறித்து காவல்துறையினர் வினவியதற்கு, இணையர்கள், முன்னுக்குப் பின் முரணாக தகவல் கொடுத்துள்ளனர். ஐயமடைந்த காவலர்கள், பொட்டலத்தை பிரித்து பார்த்த பொழுது, அதனுள், சுமார் எட்டு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இணையர்கள் இருவரும், தாசரிபள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கெலமங்கலம் அருகே A செட்டிபள்ளி எனும் ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து, கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவலர்கள், இணையர்களை கைது செய்ததோடு, இரு சக்கர வண்டியையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு, சுமார் எண்பதாயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.