ஓசூரில் 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குடியிருப்பு பகுதி மக்களின் இடர்பாட்டை, 60 நிமிடங்களில் தீர்வு கண்டு, முடித்துக் கொடுத்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர். கைத்தட்டி, விசில் அடித்து மக்கள் ஆரவாரம். ஓசூர் தொடர்வண்டி நிலையம் பின்புறம் அமைந்துள்ளது, ஜனக்குபுரி லேஅவுட் குடியிருப்பு பகுதி. இந்த குடியிருப்பு பகுதி, ஓசூர் புதுநகர் வளர்ச்சி ஆணையத்தின், அதாவது, H N T D A வின் முறைப்படியான அனுமதி பெற்று அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியாகும். இதன் அருகே, மேற்கொண்டு பல புதிய குடியிருப்பு பகுதிகளும் புதிதாக தோன்றியுள்ளது.
மொத்தம் சுமார் 1000 வீடுகளுக்கு மேல் இப்பகுதியில் உள்ள நிலையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். 300க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் இப்பகுதியில் வாழ்கிறார்கள்.
H N T D A அனுமதிக்கான வரைபடத்தின் படி, ஓசூர் தொடர் வண்டி நிலையம் அருகே, லெவல் கிராசிங் 102 வழியாக, தின்னூர் அருகே, தேன்கனிக்கோட்டை சாலையை அடையும்படியான சாலை வசதி உள்ளது. அகல இருப்புப் பாதை அமைப்பதாக கூறி, அந்த சாலையை இடைக்காலமாக அடைத்துள்ளனர். அகல இருப்புப் பாதை அமைந்த உடன் தங்களுக்கு மீண்டும் அவ்வழியாக பாதை கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில், 2014 ஆம் ஆண்டு வரை, அப்பகுதி மக்கள் பொறுமையுடன் இருந்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தங்களுக்கு அந்த பாதையை மீட்டுத் தரும்படி, பல்வேறு கட்ட போராட்டங்களையும், பல்வேறு அரசு அலுவலகங்களிலும், அரசியல் கட்சி தலைவர்களிடம், தொடர்ந்து மனு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அவர்களது கோரிக்கை, கேட்கப்படாமலேயே விடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நாள், ஓசூர் தொடர்வண்டி நிலையம் அருகே, இவர்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்த, லெவல் கிராசிங் நூத்தி இரண்டு, முழுமையாக அடைக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டு விட்டது.
மன உளைச்சலுக்கு உள்ளான பகுதி மக்கள், இது தொடர்பாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களை தொடர்பு கொண்டு, உதவ வேண்டினர். இன்று காலை அவர் அப்பகுதிக்கு நேரில் வந்து, கள ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக, தென்மேற்கு ரயில்வேயின் உயர்மட்ட அலுவலர்களை, நேரில் தான் ஆய்வு செய்யும் இடத்திற்கு வரவழைத்து, நிலைமையை, எடுத்துக் கூறினார். அதோடு விட்டுவிடாமல், மாநகராட்சி ஆணையாளரையும், நேரில் நிகழ்விடத்திற்கு அழைத்து, ஆய்வு மேற்கொள்ள பணித்தார்.
உயர்மட்ட அலுவலர்களின் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களின் சார்பில் குரல் கொடுத்தார். ரயில்வே துறை உயர் அதிகாரிகள், கீழ்வழி பாலம் அமைப்பதற்கு, வரும் பிப்ரவரி ஒன்றாம் நாளிற்குள், திட்ட வரைவு ஏற்படுத்தி, ஓசூர் மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், உயர் மட்ட நடை பாலம், அமைப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.
இவ்வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடி இடைக்கால தீர்வு வழங்கும் படி, அலுவலர்களை கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, இடைக்காலமாக, ரயில்வே நிலையத்தின் வழியாக, தடுப்புகள் அமைக்கப்பட்டு இருசக்கர வண்டி சென்று வரும் அளவிற்கு பாதை அமைத்து தருவதாகவும், மக்கள் அதை பயன்படுத்தும் அதே வேளையில், நிரந்தர தீர்வுக்கான வழிவகைகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தனர்.
ரயில்வே துறையினரை பொறுத்தவரை, பாலம் அமைப்பதாக இருப்பின், ரயில்வே துறை 50 விழுக்காடு அளவிற்கு பணம் செலவழிக்கும் என்றும், மீத தொகையை, மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி ஆணையாளர், அத்தகைய செலவினங்களை ஏற்றுக் கொள்வதாக, பொதுமக்கள் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி கொடுத்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத, பொதுப் பாதை தொடர்பான இடர்பாடு, இடைக்கால தீர்வு எட்டப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால், முழுமையான தீர்வு கிடைப்பதற்கு, இன்று வழிவகை ஏற்பட்டது.
கூடியிருந்த மக்கள், விசில் அடித்து, கைதட்டி, ஆர்ப்பரித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.