ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலசநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் சப்தகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர் நன்நாளாம் பொங்கல் விழா, வரும் 14-ம் நாள், உலகமெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக, கல்வி நிலையங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழரின் தொன்மையை நினைவூட்டும் விதமாக, பள்ளியின் மாணாக்கர்களுடன், ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்று, புது பானையில் பொங்கலிட்டு பொங்கலோ... பொங்கல்...என கூவி பொங்கலை வரவேற்றனர்.
முன்னதாக, பள்ளியில் தமிழர் மரபை எடுத்துரைக்கும் விதமாக, வண்ண கோலமிட்டு, கரும்புகள் வைத்து, அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
இதன் அருகே தீண்டாமை, மூட நம்பிக்கையை தீயில் இட்டு கொளுத்துதல் போன்ற, கருத்துமிக்க செய்முறையுடன் குடில்கள் அமைத்து, உழவர் பெருமக்களை பெருமைப்படுத்தும் விதமாக, மாட்டு வண்டிகளுடன் மாடுகள், போன்ற, உண்மைக்கு நிகரான வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி மேயர் S A சத்யா பங்கேற்று மாணவ மாணவிகளின் கலை திறமைகளை வெளிப்படுத்திய நாட்டுப்புறப் பாடல் நடன நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
மேலும், இந்த கொண்டாட்டங்களில் ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்று பொங்கல் நன்நாளை வரவேற்று மகிழ்ந்தனர்.