ஓசூர் தேர் பேட்டையில் தம்பி, அண்ணன் என அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொலை! கையில் ஆறு விரல்கள் கொண்டதால், ஆறு என்று நட்பு பெயருடன் அழைக்கப்பட்டவர் 32 வயதுடைய சிவக்குமார். ஓசூர் தேர்பேட்டை பகுதியில், சிவக்குமார், தனது மனைவி நந்தினி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். டாட்டா ஏஸ் போன்ற வண்டிகளுக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிவக்குமாரின் தம்பி, அவரது நண்பர்களுடனான வாய் தகராறில், படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக சிவக்குமார் திகழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நாள் இரவு 8 மணி அளவில், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சிவகுமாரை, இருசக்கர வண்டியில் வந்த இருவர், அருவாளால் வெட்ட முயன்றுள்ளனர். தம்மை வெட்ட முயல்வதை அறிந்த சிவக்குமார் தப்பி ஓடிய நிலையில், சுடுகாட்டு பாதையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இரு சக்கர வண்டியில் வந்தவர்கள், அவரது கை மற்றும் கழுத்து பின்புறத்தில் கொலைவெறி கொண்டு வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து கிடந்த சிவக்குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், அவரை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள காவேரி மருத்துவமனை என்கிற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிவக்குமாரை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் தகவலின் படி, சிவக்குமாரின் மனைவியின் சகோதரர் நவீன் என்றும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, குடும்பப் பகை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நவீன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓசூர் நகர் காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று, குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள், ஓசூர் நீதிமன்றத்தில் சரணடைவார்கள் என்கிற ஒரு புரளி ஓசூரில் நிலவியது. ஆனால் அப்படி யாரும் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல் இல்லை. இதற்கிடையே, விரைவில், குற்றவாளிகளை, காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.