ஓசூர் தக்காளியும், பெண் பிள்ளைகள் பூப்பெய்தலும்! பிராய்லர் கோழி சாப்பிடுவதால், சிறு வயதிலேயே பெண் பிள்ளைகள் பூப்பெய்வதாக, பரவலாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில், தக்காளி உள்ளிட்ட பிற காய்கறிகளை உண்பதாலும், இத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரிவிக்கின்றனர் தன்னார்வலர்கள். காய்கறி உற்பத்தி செய்யும் உழவர்களை பொருத்தவரை, தங்களது விளை பொருட்களுக்கு பெரும்பாலான நேரங்களில், சரியான விலை கிடைப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டை வைக்கின்றனர். அரசு தங்களுக்கும் முறையாக உதவுவது இல்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அன்றாடம் நாம் காணும் காட்சிகளில் ஒன்று, விளைந்த காய்கறி கனிகளை, விலை கட்டுப்படியாகவில்லை என்பதால், உற்பத்தியாளர்கள், அவற்றை ஆடு மாடுகள் மேய விடுவது அல்லது அவற்றை நிலத்தில் உழுது விடுவது! கடந்த நாள் இத்தகைய செய்தி ஒன்று நமக்கு கிடைத்ததன் அடிப்படையில், உழவர் பெருமக்களை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிந்து கொள்ள முயன்றோம்.
பாகலூர் பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் என்கிற விளைபொருள் உற்பத்தியாளர் ஓசூர் ஆன்லைனிடம் தமது கருத்தை பகிர்ந்த பொழுது, காய்கறி உற்பத்தியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் உதவுவது இல்லை என்றும், பெரும்பாலான நேரங்களில், காய்கறி உற்பத்தியாளர்கள், தங்களது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல், நொடிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, நாம் ஆராய்ந்த போது, தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் கீழ், சுமார் எட்டு துணை துறைகள் உழவர்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது என்ற தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை அலுவலரை தொடர்பு கொண்டு வினவினோம். அவர் விளை பொருட்களுக்கு முறையான விலை கிடைக்காதது குறித்து குறிப்பிடும் பொழுது, தோட்டக்கலை சார்பில் உற்பத்தியாளர்கள் அவர்களது நிலத்தில் ஒரே நேரத்தில், ஒரே ஒரு வகை காய்கறி கனிகளை பயிரிடாமல், மூன்று அல்லது நான்காக பிரித்து, வெவ்வேறு பயிர்களை பயிரிடும்படி, தமது துறையின் களப்பணி அலுவலர்களைக் கொண்டு அறிவுரை கூறுவதாகவும், ஆனால் உழவர்கள், அறிவுரைகளுக்கு செவி சாய்ப்பது இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பாக, வேளாண்மை தொழிலை தமது குடும்ப தொழிலாக கொண்ட வேளாண்மைத் துறையில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத அலுவலர் ஒருவரை தொடர்பு கொண்டு நாம் வினவிய போது, அவர் ஓசூர் ஆன்லைன் இடம், பெரும்பாலான உழவர்கள், சந்தையின் இன்றைய காய்கறி விலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, பயிர் செய்ய துவங்கி விடுகின்றனர். எடுத்துக்காட்டாக, தக்காளி கிலோ 100 ரூபாய் என்கிற விலையில் இன்று விற்கிறது என்றால், பகுதி உழவர்கள் அனைவரும், தக்காளியை பயிரிட துவங்கி விடுகின்றனர். இதனால் அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்குப் பின், தேவைக்கு அதிகமான அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டு, வாங்குவதற்கு ஆளின்றி, உற்பத்தியாளர்களுக்கு நொடிப்பு ஏற்படுத்துகிறது. இவ்வாறு தவறுதலாக, பெரும்பாலான உழவர்கள் ஒரே நேரத்தில் ஒரே பொருளை உற்பத்தி செய்திருந்தாலும், அவர்களுக்கு நொடிப்பு ஏற்படக்கூடாது என்கிற நோக்கத்தில், ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் காய்கறிகளை பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் சேமித்து, விலை கிடைக்கும் பொழுது சந்தைப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழ்நாடு அரசு தம்மால் ஆன பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எடுத்துக்காட்டாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், அதாவது Farmers Producers Organisation என்கிற, பகுதி விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களைப் பங்குதாரர்களாக கொண்டு, வரையறுக்கப்பட்ட நிறுவனமாக, அதாவது Unlisted share holding company அமைத்து, மானியத்துடன் கூடிய கடனுதவி மற்றும் பொருளாதார உதவி வழங்கி, அரசு முயற்சிகள் மேற்கொண்டது. Grant மற்றும் மானியங்களைப் பெற்றுக் கொண்ட அத்தகைய உழவர் நிறுவனங்கள், பெற்றுக்கொண்ட பணத்துடன் செயல்படாமல் முடங்கி விட்டனர். அரசு அலுவலர்களின் தொடரும் முயற்சியும் எவ்வித பயனையும் கொடுக்கவில்லை.
ஓசூர் பகுதியைச் சேர்ந்த உழவர் ஒருவர் இது குறித்து, தமது கருத்தை பதிவு செய்த போது, காய்கறிகளை உற்பத்தி செய்பவர்கள், பெரும்பாலும் தங்களால் ஆன அனைத்து வகை குறுக்கு வழிகளையும், காய்கறி உற்பத்தியை பெருக்கிக் கொள்வதற்காக பின்பற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக, தக்காளி செடி அதன் பூக்கும் பருவம் எய்துவதற்கு முன்பே, அவை பூத்து கனிகள் வழங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான வேதிப்பொருள் மருந்துகளை செடிகளுக்கு கொடுக்கின்றனர். இத்தகைய மருந்துகள், உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதுடன், உற்பத்தியாளருக்கும் அதை வாங்கி உண்பவர்களுக்கும் நீண்ட நாட்கள் பயன்பாட்டின் போது பக்கவளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.
மேலும் குறிப்பிட்ட அவர், ஓசூரை பொருத்தவரை, பெங்களூர் கழிவுநீர் சாக்கடை, தென்பெண்ணை ஆற்றில் கலந்து நுரையுடன் வருவதால், உற்பத்தியாகும் காய்கறிகளில் பெரும்பாலும் heavy metals எனப்படும் Cadmium, Chromium, Copper, Nickel, Lead மற்றும் Zinc இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலம், பெல்லந்தூர் ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இவற்றை உறுதி செய்கின்றன. Heavy metals, மனிதர்களுக்கு ஏற்புடையது இல்லை என்பதால், அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தி, உற்பத்தியாகும் காய்கறிகளில் இவை கலப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
வேறொரு காய்கறி உற்பத்தியாளர், காய்கறி உற்பத்தி முறை குறித்து குறிப்பிடும் பொழுது, தக்காளி பயிரிடுபவர்களில் பெரும்பாலானவர்கள், கழைகளை முழுவதுமாக உழுது உரமாக மாற்றுவதற்கு பதில், Pendimethalin, Alachlor, Metribuzin, Fluchloralin போன்ற மனிதர்களுக்கு கடும் பக்க விளைவு ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களை, தக்காளி செடி நடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நிலத்தில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய வேதிப்பொருட்களை தக்காளி செடி உள்ளேற்றி, தக்காளி மூலம் மனிதர்கள் உண்ணும் நிலை ஏற்பட்டால், எத்தகைய தீங்குகளை மனித சமூகத்திற்கு ஏற்படுத்தும் என்பதை பட்டியலிட இயலாது.
மேலும் குறிப்பிட்ட அவர், முறையான வேளாண்மையை இயற்கை சார்ந்து மேற்கொள்ளாமல், வேதிப்பொருட்களுக்கும், மீண்டும் விதை உற்பத்தி செய்யும் திறனற்ற கலப்பின விதைகளுக்கும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஏராளமான பணம் மற்றும் பொருட்செலவுகளை, உழவர்கள் மேற்கொள்வதால், இழப்புகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மனித குலத்திற்கு தீங்கிழைக்கும் என்று அறிந்தாலும், அத்தகைய வழிகளை பின்பற்ற துணிந்து, செலவீனங்களை மேற்கொள்வதாலும், பல நேரங்களில் செலவிட்ட தொகை, கிடைக்கும் வருமானத்திற்கு நொடிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்று மனம் நொந்து குறிப்பிட்டார்.