Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Airport Only Rumour? ஓசூர் விமான நிலையம், வெற்று புரளி?

ஓசூர் விமான நிலையம், வெற்று புரளி என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ் தெளிவுரை.  ஒருபுறம், பெங்களூரு விமான நிலைய மேலாண்மையினர், ஓசூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஓசூர் பகுதி நில உரிமையாளர்கள், நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு தங்களது தீவிரமான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த நாள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த S முதுகானபள்ளியைச் சார்ந்த நில உரிமையாளர்கள், நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று மனு அளித்தனர்.  

ஓசூர் விமான நிலையம் வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசு இதில் முனைப்பு காட்டி வருகிறது.  கிடைக்கும் தரவுகளின் படி, நாள் ஒன்றுக்கு சுமார், ஓசூரைச் சார்ந்த இரண்டாயிரம் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தை பயன்படுத்தி, தங்களது விமான பயணத்தை மேற்கொள்கின்றனர்.  ஓசூரில் விமான நிலையம் ஒன்று அமைந்தால், விமானத்தை பயன்படுத்தி பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும் என்று இது குறித்து அறிந்தவர்கள், ஓசூர் ஆன்லைனிடம் கூறினர்.  

எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாடு அரசு, ஓசூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், தீவிர முனைப்பு காட்டுவது, ஓசூரில் தொழில் முனைவோருக்கு, ஓசூர் விமான நிலையம் அமையும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. 

கிடைக்கும் நம்பகமான தகவல்களின்படி, தமிழ்நாடு அரசு, இரண்டு இடங்களை ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்துள்ளது.  அதில் ஏதாவது ஒன்றில் விமான நிலையம் அமைவது உறுதி.  முதலாவது வாய்ப்பாக, Taneja Aerospace and Aviation Limited என்கிற தனியார் விமான ஒக்கிடு பணிமனை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்த வாய்ப்பாக, சூளகிரி அருகே, உலகம் என்கிற ஊர் அருகே, மற்றொரு இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது. 

ஓசூர் விமான நிலையம், சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் என்று கூறப்படுகிறது.  இந்த விமான நிலையத்தில், இரண்டு ஓடு தளங்கள் இருக்கும் என்று திட்ட வரைவு குறிப்பிடுகிறது.  தமிழ்நாடு அரசு தேர்வு செய்திருக்கும் இந்த இரண்டு இடங்களும், சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளன. 

இதற்கிடையே, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ் அவர்கள் தலைமையில், ஓசூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்களிடம் குறைகளை கேட்கும் குறைதீர் கூட்டத்தில், S முதுகானபள்ளி ஊரைச் சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.  மனுவைப் பெற்றுக் கொண்ட ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மக்களிடம் பேசும் பொழுது, ஓசூர் விமான நிலையம் குறிப்பிட்ட இடத்தில் தான் அமையும் என்று கூறுவது வீண் புரளி. யாரும் அத்தகைய புரளிகளை நம்ப வேண்டாம். உழவர்களுக்கும் விளைநில உரிமையாளர்களுக்கும் எதிராக இந்த அரசு எவ்விதத்திலும் செயல்படாது என எடுத்துக் கூறினார். 

மேலும் பேசிய அவர், சட்டமன்றத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பில், ஓசூர் பகுதிகளில், சந்தை விலையை, ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாயாக மதிப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: