பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்தால் பிரபலம் அடைந்த ஓசூர் பெரியார் சதுக்கம்! கடந்த பல ஆண்டுகளாக, முனீஸ்வரன் நகர் சர்கிள் என்று பெரும்பாலும் அறியப்பட்ட, முனீஸ்வரன் நகர், வ உ சி நகர், ஓசூர் உள் வட்டச் சாலை சந்திப்பு பகுதி, இன்று, நடைபெறாத ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததால், பெரியார் சதுக்கம் என்று அந்த சந்திப்பிற்கு பெயர் சூட்டப்பட்ட தகவல், ஓசூர் முழுவதும் பரவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் மாநகராட்சியின் சார்பில், பெரியார் சதுக்கம் என்று அந்த சந்திப்பிற்கு பெயர் பலகை வைக்கப்பட்டாலும், அந்த பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலான மக்களுக்கே, அத்தகைய பெயர் பலகை வைக்கப்பட்டது குறித்து தெரியாமல் இருந்த நிலையில், நடைபெறாத ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து, அந்த சந்திப்பிற்கான பெயரை பகுதி முழுவதும் பரவ செய்து விட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஓசூர் பகுதி முழுவதிலும் இருந்து குவிந்திருந்த நிலையில், பகுதி பொதுமக்களின் பங்கேற்பு மிக குறைவாக இருந்தது. கூடியிருந்த பாஜகவினர், ஆர்ப்பாட்டம் எதுவும் நடைபெறவில்லை என்ற அறிவித்துவிட்டு, சட்டப்படியாக சந்திக்க இருப்பதாக கூறி கலைந்து சென்றனர். பாதுகாப்பிற்கு, மாவட்டம் முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்த ஏராளமான காவல்துறையினரும், அனுமதி மறுப்பை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் கைது செய்து ஏற்றிச் செல்ல நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளும், பணி செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் கலைந்து சென்றனர்.
குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் இது குறித்து கருத்து கூறும் போது, பத்து ஆண்டுகளாக, பெரியார் சதுக்கம் என்ற பெயர் பலகை வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மக்களுக்கு இப்போது எவ்வகையிலும் பயனற்ற ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்தது தேவையற்ற செயல் என குறிப்பிட்டார்.