Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Butterfly Flyover and Hosur Under construction New Bus Stand News. Hosur Corporation News.

ஓசூரின் வளர்ச்சியில் ஓசூர் பேருந்து நிலையம் குறித்த ஒரு பார்வை! 800 ஆண்டுகளுக்கு முன்பு, செவிட நாடு, முரசு நாடு இரு வேறு நாடுகளாக, ஓசூர் திகழ்ந்துள்ளது.  பிரிட்டிஷாரின் ஆட்சியில், சேலம் மாவட்டத்தின் தலைநகரமாக திகழ்ந்துள்ளது. தொழில் புரட்சிக்கு பின், ஓசூர், தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது.

ஓசூரின் முதல் பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே இருந்தது.  பேருந்துகள், எம் ஜி சாலை, பழைய பெங்களூர் சாலை வழியாக சென்று வந்தன. ஓசூர் நகரின் வளர்ச்சியை தொடர்ந்து, "அப்பாவும் பிள்ளை பேருந்து நிலையம்" செயல்பட தொடங்கியது.  நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, பேருந்து நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு இல்லாததால், கடந்த 2010 ஆம் ஆண்டு, ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை அகற்றி விட்டு, சுமார் 11 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டுமானங்களுடனான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி சார்பில் முறையான மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மேற்கு தமிழக பகுதியில் தூய்மையற்ற பேருந்து நிலையம் என்ற சிறப்பு நிலையுடன் ஓசூர் பேருந்து நிலையம் தனது தரத்தை தாழ்த்தி நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

ஓசூர் பேருந்து நிலையத்தை, நாளொன்றுக்கு சுமார் 50,000 பயணிகள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.  விழாக்கால விடுமுறை என்று வந்துவிட்டால், ஓசூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து சென்று விடுகிறது.  ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் வண்டிகள் பயணிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்களில், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக திகழ்கிறது.

ஓசூர் வளர்ச்சியை கணக்கில் எடுத்து, தமிழ்நாடு அரசு, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முன்னெடுப்பை எடுத்தது.  சென்னையில் இருந்து I A S அதிகாரிகளின் தலைமையிலான ஒரு குழு, ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஓசூர் பகுதியில் செயல்படும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் துணைகொண்டு, பேருந்து நிலையத்திற்கான இடத்தை தேடி உள்ளனர்.  ஓரிரு நாள் தேடி, ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அட்கோ காவல் நிலையம் அருகே, பன்னிரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டு, எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல், அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசியல் தலைவர்களின் கருத்தை கேட்காமலேயே, அந்த இடத்தில், பத்து ஏக்கர் பரப்பளவில், முப்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி, புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள், விரைவாக நடைபெற்று வருகிறது என்று, இதுகுறித்து நன்கறிந்த தன்னார்வலர் ஒருவர் ஓசூர் ஆன்லைன் இடம் கூறினார்.

கட்டுமானப் பணி துவங்கிய நாளிலிருந்து, பொதுமக்களின் கேள்வியாக இருப்பது என்னவென்றால், பேருந்துகள் எவ்வாறு உள்நுளையும், எவ்வாறு வெளியேறும் என்பதாகும்.  ஏனெனில், ஏற்கனவே இருக்கும் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே, பாலத்தின் கீழ் பகுதியில், ஏராளமான பேருந்துகள் நின்று செல்லும் வகையில் இடம் இருப்பினும், அவற்றை ஓசூர் மாநகராட்சி முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, புதிய பேருந்து நிலையத்தை, எவ்வித முன் திட்டமிடுதலும் இன்றி துவங்கியிருப்பதாகவே தன்னார்வலர்கள் கருதுகின்றனர்.

அத்திப்பள்ளியில் இருந்து அதியமான் கல்லூரி வரையிலான இடைப்பட்ட பத்து கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் எட்டு மேம்பாலங்கள் அமைந்துள்ளன.  ஓசூர் பேருந்து நிலையம் அருகில் மட்டும், மூன்று மேம்பாலங்கள் அடுத்தடுத்த அமைந்துள்ளன. மேம்பாலங்கள் பல, மக்களின் தேவையை கருதி, அதற்கான இடத்தில், அதற்கான வடிவமைப்பில் கட்டப்படாமல், அரசியல் தலையீடுகளாலும், தன்னலம் மிக்கவர்களின் குறுக்கீடுகளாலும், கட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பத்தலபள்ளி அருகே வரவேண்டிய மேம்பாலம், சுமார் ஐந்நூறு மீட்டர் நகர்த்தப்பட்டு அமைந்துள்ளது என்று தன்னார்வலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த புதிய பேருந்து நிலையத்தில், எண்பத்தி ஒன்று  பேருந்துகள் நின்று செல்லும் வகையில் கட்டப்படுகிறது. தொண்ணூற்று ஒன்பது இரண்டு சக்கர வண்டிகள், பதினைந்து ஆட்டோக்கள், நாற்பத்தைந்து நான்கு சக்கர வண்டிகள் நிறுத்துவதற்கான இடம் கொடுக்கப்படுகிறது.  தரைத்தளம் மற்றும் முதல் மாடி என இரண்டு அடுக்காக கடைகளுக்கான கட்டிடம் கட்டப்படுகிறது.   பஸ் டெர்மினல் கட்டிடம், இரண்டு அடுக்காகவும், மொத்த பரப்பளவு மூவாயிரத்து இருநூறு சதுர மீட்டர் அமைகிறது. இவற்றில் எழுபத்தேழு கடைகள் இருக்கும். தரைத்தளத்தில் ஒன்று, முதல் மாடியில் ஒன்று என இரண்டு உணவகம் செயல்படும்.

கழிவறைகள், தரைத்தளத்தில் ஐந்து ஆண்கள் கழிவரையும் 5 பெண்களுக்கான கழிவறையும் இருக்கும். 10 ஆண்களுக்கான சிறுநீர் கழிவறையில் இருக்கும்.  இதே போன்ற கழிவறைகள் அமைப்பு, முதல் மாடியிலும் இருக்கும்.  ஊனமுற்றோருக்கு என்று ஒவ்வொரு தளத்திலும் ஒரு கழிவறை செயல்படும்.

புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டிட வேலை சுமார் எழுபது விழுக்காடு முடிந்துள்ள நிலையில், ஒப்பந்ததாரர் வரும் ஜூன் திங்களில் கட்டுமான பணிகளை முடித்து, ஓசூர் மாநகராட்சியிடம் பேருந்து நிலையத்தை ஒப்படைப்பார் என தகவல்கள் கிடைக்கின்றன.  பேருந்து நிலையம் ஆயத்தமானாலும், பேருந்துகள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும், தேசிய நெடுஞ்சாலை இதுவரை எவ்வித ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. பேருந்து நிலைய கட்டுமான வேலை முடிந்தபின், அதே வளாகத்தில், ஏழு அடுக்குகளுடன், ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் சதுர அடியில், காம்ப்ளக்ஸ், பதினெட்டு கோடி செலவில் கட்டப்பட இருக்கிறதாம்.  இதற்கென்று தனியாக வண்டி நிறுத்துவதற்கான இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பத்தலபள்ளி பகுதியை சேர்ந்த, அரசியல் தலைவர்களும், பொதுமக்களும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, அந்த பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றுள்ளனர். தனிநபராக, பத்தலபள்ளியைச் சேர்ந்த மென்பொறியாளர் B K R ராஜா, டெல்லி வரை சென்று, கட்டப்பட இருக்கும் மேம்பாலத்தை, மக்களின் தேவைக்கு ஏற்ப, வடிவமைப்பை மாற்றி அமைத்து, தம்மால் இயன்ற மக்கள் பணி செய்துள்ளார்.  அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள். தேசிய நெடுஞ்சாலை துறை அதற்கான ஒப்பந்த கோரிக்கையையும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு, ஒப்பந்ததாரரை முடிவெடுக்கும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் ஓசூர் மாநகராட்சி, திடீரென விழித்துக் கொண்டு, அப்பகுதியில், Butterfly மேம்பாலம் வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ள தகவல், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தது.  தனிநபர் ஒருவரால், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க முடியும் எனில், ஓசூர் மாநகராட்சி, இத்தனை நாட்கள் மெத்தனப் போக்கு காட்டியது ஏன் என, தன்னார்வலர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

ஓசூர் மாநகராட்சியின் முயற்சியை பொறுத்து, அப்பகுதியில் பொதுமக்களுக்கு Butterfly மேம்பாலம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: