Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Railway station இருந்து கிருட்டிணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரை - அரசியல் குறுக்கீடுகள்?

Hosur Railway station - ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து கிருட்டிணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரை, ரயில்வே பாதை அமைக்கப்படுமா? கேள்விக்கான விடை தேடி, ஓசூர் ஆன்லைன், 1942ம் ஆண்டு முதலான வரலாற்றை உங்களுக்காக வழங்குகிறது! 

உற்பத்தி மற்றும் வரி வருவாயில், கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக, ஓசூர் விளங்கி வரும் சூழலில், ஓசூரை சென்னையுடன் இணைக்கும், தொன்மை மிக்க, இந்த ரயில்வே வழித்தடம் மீட்டெடுக்கப்பட்டால், தொழில் வளர்ச்சி ஏற்படுவதால் அரசுகளுக்கு கூடுதல் வரி வருவாயும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், சரக்கு போக்குவரத்திற்கு எளிதான சூழலையும் ஏற்படுத்தும் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு வரை, ஓசூரில் இருந்து,  ராயக்கோட்டை, கிருட்டிணகிரி, கந்திகுப்பம், பர்கூர், பெரிய கந்திலி, பெரிய அக்ரகாரம் வழியாக, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வரை இருப்புப் பாதை பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்டு, தொடர்வண்டி போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு, அதாவது, சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன், அந்த இருப்புப் பாதை பிரித்து எடுக்கப்பட்டு, வேறு ஏதோ ஒரு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  

அதன் பின், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்றாம் ஆண்டு வாக்கில், இருப்புப் பாதை இருந்த வழித்தட நிலங்கள், தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.  ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டாம் ஆண்டில், அவை பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தண்டவாளப் பயன்பாட்டை நிறுத்தி நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், அப்போது அமைக்கப்பட்ட கட்டுமானங்களில், மனிதர்கள் அகற்றியதை தவிர்த்து மீதமுள்ள பகுதிகள், சிறிதளவும் இயற்கையாக சிதிலமடையாமல் காட்சியளிக்கின்றன.  

ஓசூரில் இருந்து, கிருட்டிணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரை, இருப்புப் பாதை அமைத்து தர வேண்டும் என, கடந்த ஐம்பது ஆண்டுகளாக பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  கடந்த இரண்டாயிரம் ஆண்டு வாக்கில், கோரிக்கை வலுப்பெற்றது. இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு, நூற்றியோரு கிலோமீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதை அமைப்பதற்கு, ஐந்நூற்று ஐம்பத்தொன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்ட வரைவை, ரயில்வே வாரியத்தின் இயக்குனர்,  அப்போதைய ஒன்றிய அரசிற்கு சமர்ப்பித்தார்.

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு, திட்ட வரைவை ஆய்வு செய்த ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம், திட்டம்வருவாய் ஈட்டக் கூடியதாக இல்லை எனக் கூறி, கிடப்பில் போட்டது.

ஒவ்வொரு கிருட்டிணகிரி நாடாளுமன்ற தேர்தலின் போதும், வேட்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவ்வப்போது வந்து செல்லும் ஒன்றிய அமைச்சர்கள், என அனைவரும், இருப்புப் பாதை அமைத்து தரப்படும் என வாயால் உறுதியளிப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்த இருப்புப் பாதை குறித்த வரலாற்றை தெரிந்தவர்கள், ஓசூர் ஆன்லைனிடம் கூறும் பொழுது, ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு முதல், இதுவரை, சுமார் பதினோரு முறை, இருப்புப் பாதையை மீண்டும் அமைப்பதற்கான கள ஆய்வுகளும், வரைவு திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தி ஒன்பதாம் ஆண்டு வழங்கப்பட்ட வரைவு திட்டத்தின் படி, இருப்புப் பாதை அமைப்பதற்கு, நூற்று நாற்பத்தி ஏழு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.  இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வரைவு திட்டத்தின் படி, செலவினம் இருநூற்று இருபத்தைந்து கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.  இரெண்டாயிரத்து ஆறாம் ஆண்டில், செலவினம் ஐந்நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.  மீண்டும், இரெண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டில், திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று, அதுவும், வருவாய் ஈட்டுவதற்கான வழி இல்லை என சொல்லி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து, மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தைந்து லட்சம் செலவில், மீண்டும் ஒரு வரைவு திட்டம், இரெண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில், சுமார் ஏழே முக்கால் கிலோ மீட்டர் தொலைவிற்கு, மலைகளை குடைந்து குகை பாதையாக அமைக்க திட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அப்போது இதற்கான செலவினம், ஆயிரத்து நானூற்று அறுவது கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டது.

இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் கடந்துள்ள நிலையில், திட்டம், வரைவு திட்டமாகவே, கிடப்பில் உள்ளது.  

கடந்த நவம்பரில், தனியார் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்திருந்த ஒன்றிய இணை அமைச்சர் ரவனித் சிங் பிட்டு, இந்த இருப்புப் பாதை திட்டம் விரைவு படுத்தப்படும் எனக் கூறி, மீண்டும் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு நினைவூட்டி சென்றார். 

நவம்பர் இரண்டாயிரத்து இருபத்து மூன்றில்,  ஓசூர் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டிற்கான வரைவுத் திட்டத்தைக் வெளியிட்ட ஒன்றிய இருப்புப் பாதை துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஓசூர் பிரிவில், தொழில்துறைக்கு தளவாட ஆதரவை வழங்க பல்நோக்கு சரக்கு முனையம் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.  ஓசூர் ஜோலார்பேட்டை இடையேயான வழித்தடம் விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

கிருட்டிணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த ரயில்வே வழித்தடம் குறித்து, ரயில்வே துறை மண்டல அலுவலர்களிடம், நேரடியாக அவர்களது அலுவலகத்திற்கு சென்று உரையாடினார்.  அப்போது, ஓசூர் ரயில்வே வழித்தடம் மேம்படுத்துதல் குறித்துப் பேசிய மண்டல அலுவலர், ஓசூரில் இருந்து. ஓமலூர் வரையிலான இரட்டை வழித்தடம் அமைப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதல் கட்டமாக ஓசூரில் இருந்து பையணப்பள்ளி வரை, இரட்டை வழித்தடம் அமைப்பதற்கு, பணிகள் விரைவில் துவங்கும் என கூறினார். 

கிருட்டிணகிரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், ஓசூர் ஆன்லைனிடம் தமது கருத்தை பதிவு செய்த போது, ஓசூர், கிருட்டிணகிரி, ஜோலார்பேட்டை இடையேயான இருப்புப் பாதை, ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் நிலத்தின் வழியாக அமைவதால், அந்த திட்டத்தை முடக்கும் அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.  அவருக்கு ஏதுவாக சில அரசியல் தலைவர்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட திட்டத்திற்கு மாற்றாக, வேப்பனபள்ளி உள்ளிட்ட வேறு பாதைகளில் திட்டத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், என்றார். 

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள திட்டம், மக்களுக்கு பயனுள்ள திட்டமாகவும், ரயில்வே துறைக்கு செலவினங்களை கட்டுக்குள் வைக்கும் விதத்திலும் இருப்பதால், அதையே நடைமுறைப்படுத்த, ஓசூர் மற்றும் கிருட்டிணகிரி, தொழில் வளர்ச்சியில் மேலும் வலுப்பெறும் என்று பகுதி மக்களும், தன்னார்வலர்களும், தொழில் முனைவோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: