ஓசூரில் ஒருபுறம் மனிதர்களுக்கு யானைகளிடம் பகை, மறுபுறம் யானையை கொஞ்சி மகிழும் மனிதர்கள்! மனிதர்கள் தங்களது குடியிருப்பை, யானைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதைகளின் குறுக்கே அமைத்துக் கொண்டதால், யானைகள் வழக்கமாக பயணிக்கும் பாதைகளில், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக உழவர் பெருமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், காடுகள் நிறைந்த பகுதிகளாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக, யானைகள் இப்பகுதி காடுகளை தங்களது வாழ்விடமாக அமைத்து வாழ்ந்து வருகின்றன. ஆண்டுதோறும், பல நூறு கிலோ மீட்டர் பயணிக்கும் தன்மை கொண்டவை யானைகள். ஒவ்வொரு ஆண்டும், கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா காட்டுப்பகுதியில் இருந்து, கூட்டம் கூட்டமாக யானைகள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரைச் சுற்றியுள்ள உள்ள காட்டுப்பகுதிகளில் நடமாடுவது வழக்கம்.
யானைகளும், மனிதர்களும், மோதிக் கொள்ளாத படி, மின் வேலிகள் அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், வனத்துறையினர் இது குறித்து முழுமையான நடவடிக்கை எடுக்காததால், யானைகளின் தாக்குதலால் மனிதர்கள் உயிரிழப்பதும், மனிதர்களின் தாக்குதலால் யானைகள் உயிரிழப்பதும், ஆண்டுதோறும் வாடிக்கையாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பயிர்கள் மற்றும் உயிரிழக்கும் பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உழவர்களும், பொதுமக்களும், நுாற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து, இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ஜெக்கேரி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட தலைவர் கணேஷ், விவசாயி சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு, காட்டு யானைகளால் உழவர்கள் படும் இன்னல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
யானைகளால் சேதமாகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாயும், உயிர் சேதம் ஏற்பட்டால் 50 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். இறந்த நபரின் வாரிசு ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். விளை நிலங்களுக்கு யானைகள் வராமல் தடுக்க வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். அந்த மனுவை துணை வட்டாட்சியர் சுபாஷினி பெற்றுக்கொண்டு உயர் அலுவலர்களுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.