Hosur Real Estate and The Future with the Airport. ஓசூர் விமான நிலையம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்த ஒரு பார்வை.
ஓசூர், படுவேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்று என கருதப்பட்டாலும், அதற்கும் இரண்டு குறைகள் உண்டு. ஒன்று, ஓசூரில் இருந்து மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு தொடர்வண்டி இணைப்பு கிடையாது. மற்றொன்று, பயணிகள் விமான போக்குவரத்து கிடையாது.
இந்தச் சூழலில், ஓசூர் விமான நிலையம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்துப் பார்க்கலாம். நாளொன்றுக்கு, ஓசூரில் இருந்து மட்டும், பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்தி, பயணிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம் என நம்பகமான தரவுகள் தெரிவிக்கின்றன.
ரியல் எஸ்டேட் என்றாலே, நிலங்களின் விலை உயர்வு என, பெரும்பாலான மக்கள் ஒரு மாய கற்பனையில் திழைக்கின்றனர். நிலங்களின் விலையை கூட்டிச்சொல்வது, ரியல் எஸ்டேட் துரையின் வளர்ச்சி என கருதக்கூடாது. ஓசூரில் பயணிகள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கு, ஒரு விமான நிலையம் அமைக்காமல், அரசு தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கி தருவதால் மட்டுமே ரியல் எஸ்டேட் வளர்ந்து விட்டதாக கருத முடியாது. இப்படியான ஒரு சூழலில், நிலங்களின் விலை ஏறினாலும், விலை உயர்வில் ஒரு மந்த நிலையை எட்டுவதற்கான வாய்ப்பு எழலாம். அது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு, சிறந்ததாக அமையாது.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை, ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு, இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அதில் ஒன்றில் விமான நிலையம் அமையும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலாவது வாய்ப்பாக, Taneja Aerospace and Aviation Limited என்கிற தனியார் விமான ஒக்கிடு பணிமனை அமைந்துள்ள இடத்தை, தமிழக அரசு கையகப்படுத்தி, விமான நிலையம் அமைப்பது. மற்றொரு இடம், சூளகிரி அருகே, உலகம் என்கிற ஊர் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களை பொருத்தவரை, இரண்டாவது இடமாக கருதப்படும், சூளகிரி அருகே அமைந்துள்ள இடம் சிறந்த இடமாக இருக்கும் என கருதுகின்றனர். தமிழ்நாடு அரசை பொருத்தவரை, நிலம் கையகப்படுத்துவதற்கு எளிதான இடமாக கருதுவது, முதலாவது வாய்ப்பாக கருதப்படும் இடம்.
Taneja Aerospace and Aviation Limited இருக்கும் பகுதியில் விமான நிலையம் அமைந்தால், சூசூவாடி, ஓசூர் உள் வட்டச் சாலை பகுதிகள், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, மத்திகிரி, ஓசூர் நகர் பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பல மடங்காக உயரும். குறிப்பாக, புதிதாக அமைக்கப்படும் அத்திப்பள்ளி கெலமங்கலம் நான்கு வழி சாலை பகுதியில் அமைந்துள்ள இடங்கள்.
உலகம், என்கிற ஊர், சூளகிரி ராயக்கோட்டை இடையேயான பகுதியில் அமைந்துள்ளது. ஓசூரில் இருந்து, சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியை சென்றடைய வேண்டுமானால், சூளகிரி சென்று, அங்கிருந்து ராயக்கோட்டை சாலையை பயன்படுத்தி, செல்லலாம். அல்லது, தேசிய நெடுஞ்சாலை எண்ணூற்று நாற்பத்து நான்கு, அத்திப்பள்ளி ராயக்கோட்டை நான்கு வழிச்சாலை, என இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி, ராயக்கோட்டை வரை சென்று, அங்கிருந்து இந்த இடத்தை அடையலாம். உலகம், பகுதியில் விமான நிலையம் அமைந்தால், ஓசூர் நகரில் நிலங்களின் மதிப்பு உயர்வதை காட்டிலும், சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில், ரியல் எஸ்டேட் மிக வேகமாக உயரும்.
ஓசூரில் விமான நிலையம் அமைந்தால், ஓசூர் தொழிற்சாலைகளை வாடிக்கையாளர்களாக பார்வையிட வருபவர்களும், தொழில்முறையில் வருபவர்களும் பயன்பெறுவார்கள். ஓசூரில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, தொலைவில் உள்ள ஊர்களுக்கு ஓசூரில் இருந்து செல்லும் தொழிலதிபர்களும் பயனடைவார்கள். ஓசூரில் உற்பத்தியாகும் பொருட்களை, விரைவாக அனுப்பிக் கொடுக்கலாம். குறிப்பாக, கொய்மலர்கள் மற்றும் தோட்டக்கலை துறை பெருமளவில் ஓசூர் பகுதியில் முன்னேற்றம் அடையும்.
சாலை வசதிகளை பொருத்தவரை, ஓசூர் சாலை கட்டமைப்பு, சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய கட்டமைப்பு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டுமானால், ஓசூர் விமான நிலையம் விரைவாக கட்டப்பட வேண்டும். மென்பொருள் மற்றும் மின்னணு சார்ந்த தொழில்கள், ஓசூர் விமான நிலையத்தால், சிறந்த வளர்ச்சி அடையும்.
இதனால், ஓசூர் ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சிப்பாதை, ஓசூர் நகர் கட்டமைப்பில், ஓசூரை முதன்மை நகரமாக மாற்றுவதில் பெருமளவு தமது பங்கினை ஆற்றும். முதலீடுகளை ஈர்ப்பதற்கு, அடிப்படை கட்டமைப்பாக, ஓசூர் விமான நிலையம் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என, ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களும், தொழில் முனைவோரும், உயர் வருவாய் பிரிவினரும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.