Hosur Hill Temple Festival - ஓசூர் தேர் திருவிழா, பால் கம்பம் நட்டு தேர் கட்டும் பணிகள் துவக்கம்
ஓசூரின் மலைக்கோவில் என்று அழைக்கப்படும் சந்திர சூடேஸ்வரர், மரகதாம்பிகை திருக்கோவிலானது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில், சோழர்களின் ஆட்சியின் போது இக்கோவில் எழுப்பப்பட்டுள்ளது. ஓசூரில் முதன்மையான அடையாளமாக கருதப்படுவது, இந்த மலை கோவில்.
இக்கோவில் முழுவதும் ஏராளமான தமிழ் எழுத்துக்களை கொண்ட கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இன்று, தொழில் நகரமாக அறியப்படும் ஓசூர், பத்தாம் நூற்றாண்டு வாக்கில், சூடவாடி என்ற பெயரை கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. இன்றளவும், ஓசூர் மலைக்கோவிலின் மாசி திங்களில் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவானது, தேர்பேட்டை, என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள, சூடவாடி தெருக்கள் வழியாகவே தேர் பவனி வருகிறது.
இந்த ஆண்டு, மார்ச் 14ஆம் நாள் மலைக்கோவில் தேர் திருவிழா ஓசூரில் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள், விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தேர் திருவிழாவில், அண்டை மாநிலங்களான, கருநாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை புரிவார்கள்.
திருவிழாவின் துவக்கத்தை அறிவிக்கும் விதமாக, முதல் நிகழ்வாக, இன்று தேர் பேட்டையில் பால் கம்பம் நடுவிழா மற்றும் தேர் கட்டும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திர சூடேஸ்வரர் தேர் மற்றும் மரகதாம்பிகை தாயார் தேர் ஆகிய இரண்டு தேர்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, திருஷ்டி பூசணிக்காய் மற்றும் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, பால் கம்பத்துக்கு பூஜைகள் செய்து, ஊர்வலமாக தேர்பேட்டை தெருக்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் இரண்டு பால் கம்பங்களும், ஒவ்வொரு தேரிலும் கட்டப்பட்டு, தேர் திருவிழாவிற்கான தேர் கட்டும் பணிகள் துவங்கியது.