Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூருக்கு விரைவில் வர இருக்கிறது பறக்கும் மேம்பாலம்!

ஓசூருக்கு விரைவில் வர இருக்கிறது பறக்கும் மேம்பாலம்! சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு, பறக்கும் மேம்பாலம் அமைக்க நூற்று நாற்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்து பல ஆண்டுகளாகியும், நடைமுறைக்கு வராமல் இருப்பதால், ஓசூரில் முதன்மைத் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகின்றன. தமிழ்நாடு அரசு, விரைவில் ஓசூர் பறக்கும் பாலம் அமைத்து தரச் சொல்லி தன்னார்வலர்கள் கோரிக்கை.

இந்தியாவின் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் முதன்மையாக திகழும் தமிழ்நாட்டில், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஓசூர் முதலிடம் வகித்து வருகிறது. சுமார் ஐந்நூறு பெரும் தொழிற்சாலைகள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள், என ஓசூர் தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி வகிக்கிறது. 

ஓசூரின் உள் வட்டச் சாலை, சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.  E S I மருத்துவமனை அருகே, தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி நான்கில்  துவங்கி, மத்தம் அக்கிரகாரம் சாலை சந்திப்பு, A S T C அட்கோ   பெரியார் சதுக்கம் சந்திப்பு, தளி சாலை சந்திப்பு, தேன்கனிக்கோட்டை சாலை சந்திப்பு, தொடர்வண்டி சாலை சந்திப்பு, ராயக்கோட்டை சாலை சந்திப்பு, என ஓசூரின் சாலை போக்குவரத்திற்கு அடிப்படையாக திகழும் முதன்மையான சாலைகள் வழியாக கடந்து, சீதாராம் மேடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி நான்கில் முடிவடைகிறது. 

பல ஆண்டுகளாக, உள் வட்டச் சாலை அமைக்கப்படாமல், திட்ட வடிவிலேயே விடப்பட்ட நிலையில் இருந்தது.  இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டில், உள் வட்டச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  உள் வட்டச் சாலை அமைக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் கடந்த பின்,தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி நான்கு அருகில் அமைந்துள்ள E S I மருத்துவமனை முதல், தளி சாலை வரை, சுமார் ஐந்து கிலோ மீட்டர் சாலை, நான்கு வழிச்சாலையாக, நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய் திட்டத்தில் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டமாக, தளி சாலை முதல் சீதாராம் மேடு வரையிலான உள் வட்டச் சாலை பகுதி, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில், சில பகுதிகள் மட்டும் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  ராமநாயக்கன் ஏரியின் கரை முதல், ராயக்கோட்டை அட்கோ பிரிவு சாலை வரை, தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.  இதுகுறித்து நன்கறிந்த வட்டாரங்களில் ஓசூர் ஆன்லைன் சார்பில் வினவய போது, இந்த ஒன்று புள்ளி எட்டு கிலோமீட்டர் பகுதி, Elevated Bridge எனப்படும் பறக்கும் மேம்பாலம் அமைக்க, நூற்று நாற்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.

பறக்கும் மேம்பாலம் என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகளின் மேலே கட்டப்படும் ஒரு உயரமான பாலம் ஆகும். இது இரண்டடுக்கு போக்குவரத்திற்கு வழிவகை செய்யும். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து ஓட்டத்தை சீரமைக்கவும் உதவுகிறது. பொதுவாக, நெரிசல் மிக்க பகுதிகளில் இத்தகைய மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. பறக்கும் மேம்பாலம், சாலையின் மேலே கட்டப்படுவதால், வாகனங்கள் நெரிசல் மிக்க பகுதிகளை விரைவாக தாண்டி செல்ல முடியும்.

இந்த மேம்பாலம் அமைந்தால், தளி சாலை சந்திப்பு, தேன்கனிக்கோட்டை சாலை சந்திப்பு மற்றும் தொடர்வண்டி சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கும் ஒரு பெரிய திட்டமாக கருதப்படுகிறது. 

சாலைகளில் நெரிசல் குறைவதால், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்வோரின் பயண நேரத்தை குறைப்பதோடு, களைப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும்.  இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி மேம்பட வாய்ப்புள்ளது. 

ஓசூர் மக்கள், பறக்கும் மேம்பாலம் குறித்து பெரும் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். நெரிசல் குறைவதால், அவர்களின் நாளது பயணம் எளிதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். மேலும், இந்த திட்டம் ஓசூரின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஒரு பெரிய உந்துதலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் நகரத்தின் அழகை மேலும் பெருக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், ஓசூர் ஒரு மேம்பட்ட மற்றும் புதிய நகரமாக மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: