ஓசூருக்கு தேவை, துணை நகரங்களின் வளர்ச்சி! டெல்லிக்கு ஒரு நொய்டா, மும்பைக்கு ஒரு பூனே, சென்னைக்கு தாம்பரம் மற்றும் ஆவடி என எல்லா பெருநகரங்களுக்கும் துணை நகரங்கள் அமைவது கட்டாய தேவை.
இரண்டாயிரமாவது ஆண்டு துவக்கம் வரை, ஓசூரை பெங்களூருவின் துணை நகரமாகவே பெரும்பாலான தன்னார்வலர்கள் கருதினர். ஓசூரின் வளர்ச்சி, பெங்களூருவின் வளர்ச்சியை சார்ந்து அமைந்துள்ளதாக, பெங்களூருவைச் சார்ந்த பலர், ஓசூர் மீது குற்றம் சாட்டினர்.
இன்றைய சூழலில், ஓசூரின் வளர்ச்சியை தடுத்து, வளர வேண்டிய சூழலில் பெங்களூரு நகர் இருப்பது, ஓசூர் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, விமான நிலையம் மற்றும் மெட்ரோ சேவை தொடர்பில் கர்நாடக அரசின் செயல்பாடுகள் திகழ்கின்றன!
ஓசூரின் விரைவான தொழில்துறை சார்ந்த வளர்ச்சியால், ஓசூர் அருகே அமைந்துள்ள, பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி ஆகிய பேரூர்கள், வேகமான வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகின்றன. அவை பலவற்றில் தற்சார்பு நிலையை அடைந்துள்ளது, முன்னேற்றத்தின் முதல் அறிகுறி.
தமிழ்நாடு அரசு, ஓசூர் நகர் வளர்ச்சிக்கான இரண்டாயிரத்து நாற்பத்தி ஆறு ஆண்டு வரையிலான திட்டத்தில், இந்த நான்கு நகரங்களையும், ஓசூர் மாநகராட்சி எல்லையுடன் இணைத்து, பொதுவான, வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கோரிக்கை என்னவென்றால், ஓசூர் வளர்ச்சியை ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு, பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி ஆகிய பேரூர்களுக்கு தனித்தனி திட்டங்கள் வகுத்து, அவற்றையும், தன்னாட்சியுடன் கூடிய பெருநகரமாக வளர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும், என்பதாகும்.
அதற்கு முதல் படியாக, இந்த நான்கு பேரூர்களிலும், அனைத்து வசதி வாய்ப்புகளுடன் கூடிய, Satellite Bus stand அமைத்து, பிற தமிழ்நாட்டின் பெருநகரங்களையும், இந்தியாவின் பிற பெருநகரங்களையும் இணைக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது. மேலும், Sub Urban Train போக்குவரத்து வசதியை, இந்நகரங்களுக்கு ஓசூருடன் இணைத்து விரிவுபடுத்துவது.
வரும் ஆண்டுகளில், பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி, ஆகிய பேரூர்களும், அதைச் சார்ந்துள்ள பகுதிகளும், ஏராளமான தொழிற்சாலை முதலீடுகளை ஈர்க்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.
ஓசூரின் வளர்ச்சி என்பது தொழில், வணிகம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட முதன்மையான இடமாக மாற்றி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, திட்டமிடாத வளர்ச்சியை ஓசூர் எதிர்கொண்டதால், நெரிசல் மிக்க குடியிருப்பு பகுதிகள், போக்குவரத்து நெரிசல், சாலை வசதியின்மை, அடிப்படையாக விளங்கக்கூடிய குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் போன்ற இடர்பாடுகளை மக்கள் நாளொரு பொழுதும் சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு, ஓசூரில் அருகே துணை நகரங்கள் Satellite Cities உருவாக்க வழி வகை செய்வது. இது ஓசூரின் வளர்ச்சிக்கு துணைபுரிந்து, அதன் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
இதனால், இப்பகுதிகளுக்கு ஓசூரில் தங்கி வேலைக்கு செல்வோர், சாலைகளில் போக்குவரத்து அழுத்தம் தராமல், துணை நகரங்களில் தங்கி வேலைக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். இந்நகரங்களில் தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால், ஓசூர் தொழில் வளர்ச்சி, மேலும் மேம்படும்
பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி ஆகிய பேரூர்கள் துணை நகரங்களாக வளர்ந்தால், புதிய தொழில்கள், வணிக நடுவங்கள் மற்றும் முதலீடுகள் இப்பகுதிகளில் கிடைக்கப்பெறும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகி, மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும், இதனால் ஓசூர் எனும் ஒரே நகரத்தில் பொருளாதார வளர்ச்சி சுமந்து வைக்கப்படாமல், பல்வேறு இடங்களில் சமமாக பரவுகிறது.
தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.