எப்படி இருந்த ஓசூர், எப்படியான ஓசூராக ஆகப்போகிறது? இரண்டாயிரத்து நாற்பத்தாறாம் ஆண்டுக்குள், எத்தகைய வளர்ச்சியை ஓசூர் எட்ட போகிறது? ஏராளமான சாலை வசதிகள்! இருப்புப் பாதை திட்டங்கள்! விமான நிலைய திட்டங்கள்! என ஏராளமான திட்டங்கள் ஓசூர் நகர் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. ஓசூர் வளர்ச்சி குறித்து ஒரு அலசல்!
பன்னிரண்டாம் நூற்றாண்டில், செவிடபாடி என்று அழைக்கப்பட்ட நிலையில், பதிமூன்றாம் நூற்றாண்டில், முரசு நாடு என்ற பெயர் பெற்றது. தமிழகத்தின் வட பகுதிகளிலிருந்து, பதினாறாம் நூற்றாண்டு வாக்கில், பிற மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையில் குடியேறிய நிலையில், ஓசூர், அதாவது புதூர், என்று பொருள்படும்படியான பெயரை பெற்றது.
இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஓசூரில் மக்கள் தொகை எண்பத்து நாலாயிரம். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டு தொழில்துறை வளர்ச்சி சூழலில், ஓசூரின் இப்போதைய மக்கள் தொகை, சுமார் ஆறு லட்சம் என தன்னார்வலர்கள் கணக்கிடுகின்றனர்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி இரண்டாம் ஆண்டு, தேர்வு நிலை ஊராட்சியாக, ஓசூர் அறிவிக்கப்பட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு, இரண்டாம் நிலை ஊராட்சியாகவும், ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டாம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக, மெல்ல மெல்ல வளர்ந்தது.
இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு, ஓசூருடன், மத்திகிரி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர், மூகொண்டபள்ளி மற்றும் அதனுடன் சேர்த்து மொத்த அக்ரகாரம், சூசுவாடி மற்றும் அதனுடன் சேர்த்து சாந்தாபுரம் மற்றும் அனுமேப்பள்ளி அக்ரகாரம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, ஓசூர், தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு, சிறப்பு நிலை நகராட்சியாக ஓசூர் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு, ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்திக் கொண்டது.
கடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்து நான்காம் ஆண்டு, ஓசூர் நகர் வளர்ச்சியை திட்டமிடும் பொருட்டு, ஓசூர் நகர் வளர்ச்சித் திட்டத்தில், மத்திகிரி, அச்சட்டி பள்ளி, சென்னத்தூர், நல்லிகாபேட்டை அக்கரகாரம், மூகண்ட பள்ளி, மோரண பள்ளி, மத்தம் அக்கரகாரம், ஒன்னல்வாடி, ரங்க பண்டித அக்கரகாரம், சாந்தாபுரம் அக்கரகாரம் ஆகிய ஊராட்சிகளையும் உள்ளடக்கி, வளர்ச்சித் திட்ட வரைவு வெளியிடப்பட்டது. இது சுமார் தொண்ணூற்று நான்கு சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியதாக இருந்தது.
அதன் பின் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு வாக்கில், ஓசூர், மத்திகிரி இணைக்கப்பட்டு, மேற்கொண்டு ஐம்பத்தைந்து ஊர்களை உள்ளடக்கி, ஓசூர் நகர் வளர்ச்சித் திட்டம் வரைவு வெளியிடப்பட்டது. இது சுமார் இருநூற்றுத் தொண்ணூற்று இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாக இருந்தது.
ஓசூரின் வேகமான வளர்ச்சியை கணக்கில் எடுத்து, எழுநூற்று முப்பத்து நான்கு சதுர கிலோமீட்டர் உள்ளடக்கிய, ஓசூர் நகர் வளர்ச்சிக்கான வரைவுத் திட்டம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு திட்டத்தின் படி, சுமார் எட்டு புதிய திடச்சாலைகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள சாலைகளில், பதினோரு சாலைகள் விரிவுபடுத்தப்படும்.
புதிதாக எங்கெல்லாம் சாலைகள் வருகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
சூசூவாடி மோர்ணபள்ளி இடையே, சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு, நூறு அடி அகலம் கொண்ட சாலை.
சாத்தனூரிலிருந்து, தேவாரப்பள்ளி வரையிலான S T R R எனப்படும், தேசிய நெடுஞ்சாலை எண் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு A. இந்த சாலை, சுமார் இருநூற்று முப்பது அடி அகலம் கொண்டதாகவும், சுமார் நாற்பத்தி ஆறு கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும் அமைகிறது.
ஆளுர் முதல் அந்தேவனப் பள்ளி வரையிலான, சுமார் ஆறு கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை. இது நூறு அடி சாலையாக அமைகிறது.
சென்னத்தூரில் இருந்து, கெலமங்கலத்திற்கான சுமார் ஆறு கிலோ மீட்டர் நீளம் கொண்ட இணைப்பு சாலை. இதுவும் நூறு அடி சாலையாக அமைகிறது.
தளி சாலையில் இருந்து, பூனப்பள்ளி அருகே துவங்கி, தேன்கனிக்கோட்டை சாலையை இணைக்கும் இணைப்பு சாலை. இது சுமார் இரண்டரை கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும், நூறு அடி அகலம் கொண்டதாகவும் அமையும்.
தளி சாலையில் இருந்து, அத்திப்பள்ளி கெலமங்கலம் இடையேயான சாலையை இணைக்கும் சாலை. தளி சாலையில் இருந்து, தமிழக எல்லை பகுதி வரை. இது சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும் நூறு அடி அகலம் கொண்டதாகவும் அமைகிறது.
பாகலூரில் இருந்து திண்ணப்பள்ளி வரையிலான, வட்டச் சாலை. இது ஏழரை கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும், நூறு அடி அகலம் கொண்டதாகவும் அமைகிறது.
கொத்த கொண்ட பள்ளியில் இருந்து துப்பு காண பள்ளி வரை, சுமார் இருபத்தி இரண்டு கிலோமீட்டருக்கு, நூறு அடி அகலம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்ணூற்று நாற்பத்தி நான்கு. இது சுமார் இருநூறு அடி அகலம் கொண்டதாக அமைகிறது.
சூசூவாடி முதல் மோர்ணப்பள்ளி வரை, மத்திகிரி முதல் தண்டரை வரை, அச்சட்டி பள்ளி முதல் போடிச்சி பள்ளி வரை, ஒன்னல் வாடி முதல் துப்புகாணப்பள்ளி வரை, விஸ்வநாதபுரம் முதல் பாகலூர் வரை, பாகலூர் முதல் காகனூர் வரை, பாகலூர் முதல் பெலத்தூர் வரை, லிங்காபுரம் முதல் பேரிகை வரை, கொலதாசனபுரம் முதல் அந்துவானப்பள்ளி ஊர் வரை, என, ஏற்கனவே உள்ள சுமார் 11 சாலைகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.
இந்தச் சாலை திட்டங்கள், திட்ட வடிவிலேயே நீண்ட நாட்கள் விடப்படாமல், விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும், பகுதி மக்களும், பொதுமக்களும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
அடுத்த காணொளி தொகுப்பில், ஓசூருக்கு தேவை மேம்பட்ட சாலை வசதிகளா, அல்லது சிறந்த பொதுப் போக்குவரத்து திட்டங்களா என்பது குறித்து அலசலாம்!