Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மாநகராட்சி வரி குறித்து, பிற மாநகராட்சிகளுடன் ஒரு ஒப்பீடு!

கடந்த சில நாட்களாக, ஓசூர் மாநகராட்சி, கடுமையாக வரி விதிப்பதாக கூறி, ஓசூரில் தொழில் முனைவோரும், கட்டிட உரிமையாளர்களும், குடியிருப்போர் நலச் சங்கங்களும், தங்களது எதிர்ப்பை, வலுவாக முன்னெடுத்து வைத்து வருகின்றனர். 

ஓசூர் மாநகராட்சி வரி குறித்து, பிற மாநகராட்சிகளுடன் ஒரு ஒப்பீடு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், வரி அளவு குறைக்கப்படும், என உறுதி அளித்து வந்த இன்றைய மேயர் தலைமையிலான ஓசூர் மாநகராட்சி ஆளுமை, ஆட்சிக்கு வந்தபின், மேற்கொண்டு, கூடுதல் வரிவிதிப்பை முன்னெடுத்து வருவது, ஓசூர் மக்களிடையே, ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. 

தண்ணீர் வரி விதிப்பில், ஓசூர் மாநகராட்சிக்கும், மதுரை மாநகராட்சிக்குமான வரி வேறுபாடு குறித்து ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம்.  மதுரை மாநகராட்சியில், ஆண்டொன்றுக்கு, தண்ணீர் வரி ரூபாய் தொள்ளாயிரம் விதிக்கப்படுகிறது. ஓசூர் மாநகராட்சியில், ஆண்டொன்றுக்கு, தண்ணீர் வரி ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு.  கிட்டத்தட்ட அறுபத்தைந்து விழுக்காடு அளவிற்கு கூடுதலாக உள்ளது. இதேபோன்று, அனைத்து விதமான வரி விதிப்புகளும், பிற மாநகராட்சிகளை ஒப்பிடுகையில், மிகக் கடுமையான அளவு, உயர்த்தி விதிக்கப்படுகிறது.

கூடுதல் வரி விதிப்பிற்கு, முந்தைய ஆட்சியாளர்களையும், மாநகராட்சியில் பணிபுரியும் அரசு அலுவலர்களையும் பழி சொன்னால், மக்கள் நம்பி விடுவார்கள், என்கிற தவறான சிந்தனையில், மாநகராட்சி ஆளுமை, செயல்படுவதாக, தன்னார்வலர்களும் அரசியல் தெளிவு பெற்றவர்களும் ஓசூர் ஆன்லைன் இடம் கருத்து பகிர்கிறார்கள். 

ஜப்தி நடவடிக்கை, கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைப்பது, மாநகராட்சி ஊழியர்களை கூட்டமாக செல்ல வைத்து மிரட்டுவது போன்ற தவறான வழிகாட்டுதல்களை, இப்போதைய ஓசூர் மாநகராட்சி ஆளுமை மேற்கொண்டு வருவது, ஓசூர் மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதற்கிடையே கடந்த நாள், ஓசூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் S A சத்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இதில், பல உறுப்பினர்கள், வரிவிதிப்பு குறித்து, தங்களது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தனர். 

வரி விதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் R சென்னீரப்பா அவர்கள் பேசும்பொழுது, இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு முதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வசூலிப்பதை, ஓசூர் மாநகராட்சி உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறினார். 

மேலும், இதுகுறித்து பேசிய அவர், கடந்த நிதியாண்டில் இருந்து மட்டுமே தூய்மை இந்தியா வரி, மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட வேண்டும், என தனது கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்தார். 

வீடுகளுக்கான வரி விதிப்பு குறித்து  பேசிய R சின்னீரப்பா அவர்கள், வீடுகளை பொருத்தவரை, பயன்படுத்தும் இடங்களுக்கு மட்டுமே, வரி விதிக்கப்பட வேண்டும் என்றும், பொது இடங்களாக கருதப்படும் படிக்கட்டு, வண்டிகள் நிறுத்துமிடம் ஆகியவற்றிற்கு வரி விதிக்க கூடாது என, எடுத்துரைத்தார். 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  உள்ள வரி நிலுவை தொகையை தள்ளுபடி செய்வதன் மூலம், கட்டிட உரிமையாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, சுமார் ரூபாய் நூற்று முப்பது கோடி வரி நிலுவை தொகை மாநகராட்சிக்கு உடனடியாக  கிடைக்கும், என ஓசூர் மாநகராட்சி ஆளுமைக்கு, தனது கருத்தை முன்மொழிந்தார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: