ஓசூர் ரயில் நிலையம் அருகே, ரயில் விபத்து! பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி வரக்கூடிய, சரக்கு தொடர் வண்டி, விபத்துக்குள்ளானதால், ஓசூர் ரயில் நிலையம் மற்றும் இருப்புப் பாதை பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சம்.
பிரிட்டிஷார், இருப்பு பாதை அமைக்கும் பொழுது, தொடர்வண்டி விபத்து ஏற்பட்டால், இரும்பு பாதை அருகே குடியிருக்கும் மக்களை பாதிப்படைய விடக்கூடாது என்கிற திட்டத்தின் கீழ், தொடர்வண்டிகள் தடம் புரண்டாலும், தொடர்வண்டி துறையின் இடத்திலேயே தடம் புரள வேண்டும் என்கிற அடிப்படையில், தேவையான, நிலங்களை கையகப்படுத்தி, இருப்புப் பாதை அமைத்தனர்.
ஓசூர் ரயில் நிலையம் அருகே, அரை கிலோ மீட்டர் தொலைவில், தேன்கனிக்கோட்டை சாலை மேம்பாலம் அருகே, எரிபொருள் ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓசூர் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த பெட்ரோலிய டேங்கர் சரக்கு ரயில் தடம் புரண்டது.
ரயில் வலது புறமாக தடம்புரண்டது. இடது புறமாக தடம் புரண்டு இருந்தால், பெரும் விபத்தை இது ஏற்படுத்தி இருக்கும் என நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இருப்புப் பாதை அருகே, இடது புறத்தில், ஏராளமான வணிக நிறுவனங்களும் குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன.
மேலும், சரக்கு ரயிலில் விபத்து நடக்கும் பொழுது, பெட்ரோலிய பொருட்கள் எதுவும் அதன் டேங்கர்களில் இல்லை. ஓசூர் தொடர் வண்டி நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு ரயில், தடம் புரண்டதால், ஓசூர் வழியாக செல்லக்கூடிய ரயில்களின் பாதை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
சரக்கு ரயில், பெங்களூரில் இருந்து தர்மபுரி மாவட்டம் சிவாடி பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஓசூர் நிலையம் அருகே வந்து கொண்டிருந்ததால், ரயில் மிதமான வேகத்தில் வந்துள்ளது. இதனால், ஒரு சரக்கு டேங்கர் தடம் புரண்ட உடன், ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
சரக்கு தொடர்வண்டியில், மொத்தம் 52 பெட்டிகள் இருந்த நிலையில், அதில் 18வது பெட்டி தடம் புரண்டு உள்ளது. பெட்ரோலிய டேங்கர் பெட்டி ஒவ்வொன்றிலும், 8 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன் பகுதிக்கு நான்கு, பின் பகுதிக்கு நான்கு என பிரித்து பொருத்தப்பட்டுள்ளது. மெயின் லைனில் வந்த சரக்கு தொடர் வண்டி, லூப் லைனிற்கு மாறிய பொழுது, முன் பகுதியில் இருந்த நான்கு சக்கரங்கள் தடம்புரண்டு உள்ளன.
எச்சரிக்கை உணர்வுடன் இருந்த ஓட்டுநர், தடம் புரண்டு சுமார் 150 மீட்டர் அளவில், ரயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தியுள்ளார். ஓட்டுநர், சரியான நேரத்தில், சரியான முடிவை, விரைவாக எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக, விபத்து ஏற்பட்ட பகுதிக்கு, உடனடியாக சென்று கண்காணிப்பவர்கள் கூறுகிறார்கள்.
இப்பகுதியில், இரட்டை ரயில்வே தடம் உள்ளதால், ஒரு தடத்தில் மட்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. மற்றொரு தடத்தின் மூலம், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான ரயிலை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ரயில்வேத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.