ஓசூர் அருகே, ஏழாம் வகுப்பு பள்ளிச் சிறுமையை, 30 வயது ஆணுக்கு திருமணம் முடித்து, கதற கதற அள்ளி தூக்கிச் செல்லும் காணொளி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, மலைப்பகுதிகளில் ஊர்கள் உள்ளன.
மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஊர்களில் வாழும், பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களை பொருத்தவரை, தமிழ்நாடு அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
மேலும், பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்வும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னேறிய வகுப்பினராக கருதப்படும் மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது இல்லை.
தமிழ்நாடு அரசின் தொடர் கண்காணிப்பில் இல்லாத சமூகத்தினர் சிலரிடையே, மூட பழக்க வழக்கங்களும், பின்தங்கிய மனநிலையும், நிலவுவதாக தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அடுத்த, அஞ்செட்டி அருகே மலை பகுதியில் அமைந்துள்ள ஊர் பகுதியில், சுமார் 14 வயதுடைய சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நிகழ்வு நடந்தேறி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் கிடைக்கப்பெற்ற காணொளி காட்சியில், சிறுமி, தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை எனவும், பள்ளிக்குச் சென்று தொடர்ந்து கல்வி கற்க விரும்புவதாகவும் கூறி கதறிகளும் காட்சி, காண்போரை பதற வைத்துள்ளது.
இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற காளிக்குட்டை ஊரைச் சேர்ந்த மாதேஷ், அவரது உடன்பிறப்பு மல்லேஷ் மற்றும் சிறுமியின் அம்மா நாகம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலை ஊர் பகுதிகளில், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு, தமிழ்நாடு அரசினால் கொடுக்கப்படும் விழிப்புணர்வு பரப்புரை, பிற சமூக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தன்னார்வலர்களும் பகுதி மக்களும் தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.