Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur - Thally Road needs Not just a bridge! But, Cloverleaf Interchange or Stack Interchange or Trumpet Interchange Flyover!

தளி, ஓசூர் சாலையில், சிச்யா பள்ளி அருகே, ஓசூர் உள் வட்டச் சாலைக்கு நேர்கோட்டில் அமைந்துள்ள இருப்புப் பாதை வழித்தடத்திற்கு, சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க இருப்பதாக, கர்நாடக மாநிலம், கூப்லியில் அமைந்துள்ள தென்மேற்கு இருப்புப் பாதை தலைமை அலுவலகத்தில் இருந்து நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க!

கிடைக்கின்ற தகவல்களின் படி, மேம்பாலம் தளி சாலையில், பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை அலுவலகம் அருகே துவங்கி, துணை மின் நிலையம் கடந்து முடிகிறது.  

திட்டமிடப்பட்டுள்ள பாலம் வடிவமைப்பானது, தளிசாலையில் பாலத்தில் ஏறி, ஓசூர் உள்வட்ட சாலையில், நேரடியாக இறங்க இயலாத நிலையில் உள்ளது.  

இதுகுறித்து, ஓசூர் ஆன்லைன் சார்பில், இருப்புப் பாதை மேம்பால திட்டத்தின் பொறியாளர் ஒருவரிடம் வினவிய போது, உள் வட்டச் சாலையில் பயணிக்க உள்ளவர்கள், தளிசாலை பாலத்தில் ஏறி, மறு மார்க்கத்தில் இறங்கி, தளி சாலையில் அமைந்துள்ள, T V S தொழிலாளர் அலுவலகம் எதிரே, தளி குடியிருப்பு வழியாக புகுந்து, A S T C 100 அடி சாலை வழியாக, பெரியார் சதுக்கத்தை வந்தடைந்து, அதன் பின் உள்வட்ட சாலையை பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். 

இது குறித்து ஓசூர் தன்னார்வலர்களிடம், ஓசூர் ஆன்லைன் சார்பில் கருத்து கேட்டபோது, இப்படியான ஒரு வடிவமைப்பில் பாலம் அமைக்கப்படுமேயானால், அது எவ்விதத்திலும், தளி சாலை மற்றும் உள் வட்டச் சாலையை பயன்படுத்தும் மக்களுக்கு பயனளிக்காது என திட்டவட்டமாக எடுத்துரைத்தனர். 

நான்கு வழி மாநில நெடுஞ்சாலை, நான்கு வழி உள் வட்டச் சாலை, மற்றும் இரட்டை வழி இருப்புப் பாதை என முதன்மையான போக்குவரத்து வழித்தடங்கள் இந்த சந்திப்பில் கூடுவதால், குறுக்கிடா மாற்றுப்பாதை Cloverleaf Interchange அல்லது வெகுமட்ட இடைமாற்றுச்சந்தி Stack Interchange அல்லது எக்காள வடிவில் இடைமாற்றுச்சந்தி Trumpet Interchange  போன்ற முறைகள் பயன்படுத்துவது மட்டுமே தீர்வாக அமையும். 

தன்னார்வலர்களின் கோரிக்கையின் படி, முழுமையான Butterfly Flyover அமைக்க இயலாவிட்டாலும், குறைந்த அளவு, ஒரு பகுதியிலாவது, உள்பட்ட சாலையிலிருந்து, திட்டமிடப்பட்டுள்ள தளி சாலை மேம்பாலத்தில், பயணிக்கும் விதமாக, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

குறிப்பாக, A S T C குடியிருப்பு பகுதியில் கடந்து செல்லும் 100 அடி சாலையானது, நெருக்கமான குடியிருப்பு பகுதி வழியாக செல்வது மட்டுமல்லாமல், ஏராளமான வளைவு நெளிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. 

மேலும், 100 அடி சாலையுடன், தளி சாலையை இணைக்கும் இணைப்பு சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியே, குறுகலான பாதையாக அமைந்துள்ளது. 

100 அடி சாலையையும், உள் வட்டச் சாலையையும் இணைக்கும் பெரியார் சதுக்கம், ஏற்கனவே பல விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.  ஏனெனில் இந்தப் பகுதியில், முனீஸ்வரன் நகர், வ உ சி நகர், துவாரகா நகர் என ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் இருந்து, உள் வட்டச் சாலையை பயன்படுத்தும் மக்கள், இந்தச் இந்தப் பகுதி வழியாக, உள் வட்டச் சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது.

இப்படிச் சுற்றிச் செல்வதாக பாலத்தின் வடிவமைப்பு அமைந்தால், பாலத்தை பயன்படுத்தபவர்கள், சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு, குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றிச் செல்ல வேண்டிய, கட்டாயம் ஏற்படும். 

இதனால், தளி சாலை மற்றும் உள் வட்டச் சாலையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: