Hosur News, ஓசூர் செய்திகள் - ராமநாயக்கன் ஏரி பூங்கா குறித்த ஒரு சிறப்பு பார்வை!

ஓசூர் வளர்ச்சியின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று, ராமநாயக்கன் ஏரிக்கரையோரம், பசுமை சூழலில் அமைந்துள்ள, குழந்தைகள் பூங்கா. ஆயிரக்கணக்கான மக்கள், காலை மாலை வேலைகளில் நடை பயிற்சிக்கும், உடற்பயிற்சிக்கும், மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். 

ஓசூரில் வரலாற்றுத் தொன்மை அடையாளங்களில் ஒன்றான, ராமநாயக்கன் ஏரி, 1980 களில், சுமார் 152 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது.  கடந்த 40 ஆண்டு ஓசூர் வளர்ச்சியின் பயனாக, தன்னலம் சார்ந்த மனிதர்களின் ஆக்கிரமிப்பிற்கு தன்னை உட்படுத்தி, இப்போது, சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. 

1987 ஆம் ஆண்டு, அப்போதைய ஓசூர் சாராட்சியர், அசோக் வரதன், ராமநாயக்கன் ஏரி கரையில், குழந்தைகள் பூங்கா, நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைத்தார். அதைத் தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு வாக்கில், அப்போதைய ஓசூர் சாராட்சியர், ஆனந்தகுமார், ராமநாயக்கன் ஏரியை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, ஏரியை சுற்றிலும் கரையைத் திடப்படுத்தி, நடை பயிற்சி பாதை அமைக்கும், திட்டத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்தார். 

அவரது கனவு திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு வாக்கில், ஏரி மற்றும் பூங்காவை அழகு படுத்தும் பணி முழு வீச்சில் மேற்கொள்ள துவங்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டில், ஏரிக்கரையின் தளி சாலையை ஒட்டிய பூங்கா பகுதியில், இருபத்தெட்டு இலட்சம் செலவில் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடை பயிற்சி பாதை அமைக்கப்பட்டது.  பூங்காவினுள், உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள் அமைக்கப்பட்டன.  சுமார் 49 லட்சம் ரூபாய் செலவில் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான கூடம்,  அமைக்கப்பட்டது.  மேலும், 2 கோடி ரூபாய் திட்டத்தில், படகு சவாரிக்கான கட்டுமானங்களும் துவங்கப்பட்டன.

துவக்கத்தில் டிவிஎஸ் மோட்டார் மேலாண்மையும், தொடர்ந்து, டைட்டான் தொழிற்சாலை மேலாண்மையும், பூங்காவை மேலாண்மை செய்து வந்தனர்.  அப்போது பூங்கா சிறப்புடன் விளங்கியதாக, நாள்தோறும் நடைப்பயிற்சிக்கு பூங்காவை பயன்படுத்துபவர்கள் ஓசூர் ஆன்லைனிடம் தங்களது கருத்தை எடுத்துரைத்தனர். 

ஓசூர் மாநகராட்சி, சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராமநாயக்கன் ஏரியை, மேற்கொண்டு அழகு படுத்துவதற்கும், சுற்றிலும், நடைபயிற்சிக்கான தடம் அமைப்பதற்கும் திட்டம் வகுத்து, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.  அதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறி, மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சினேகா இ ஆ ப அவர்கள், கட்டுமான பணியை முடக்கியதாக, தன்னார்வலர்கள் தெரிவித்தனர். 

பூங்காவினுள் நூற்றுக்கணக்கான மரங்கள், கழிவறை வசதி, அமர்ந்து இளைப்பாறுவதற்கு நாற்காலிகள், இருக்கை மட்டங்கள் என ஒரு பூங்காவிற்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளும், இங்கு ஒருங்கே அமையப்பட்டுள்ளன.

பூங்கா குறித்து, தன்னார்வலர் ஒருவர் ஓசூர் ஆன்லைனிடம், ஆயிரக்கணக்கான மக்கள், நாள்தோறும் பூங்காவை பயன்படுத்தும் நிலையில், பூங்கா நேரம் தவிர்த்த பகல் வேலைகளில், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், பள்ளி சிறுமிகளை அழைத்து வந்து பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள், சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்கள், என ஏராளமானோரின் புகலிடமாக இந்த பூங்கா விளங்குகிறது. 

இரவு நேரங்களில், விளக்குகளோ அல்லது காவலாளியோ இல்லாத நிலை இருப்பதால், பாலியல் தொழிலுக்கும், பிற குற்றச் செயல்களுக்கும் இந்த பூங்காவின் பகுதி பயன்படுத்தப்படுவதாக, தெரிவித்தார்.

பூங்காவினுள், காய்ந்த இலை சருகுகளை உரமாக மாற்றுவதற்கு, சேகரிப்பு கிடங்கு இருப்பினும், இலைகளை ஊழியர்கள் முறையாக அப்புறப்படுத்தாததால், ஆங்காங்கே சேகரித்து நெருப்பூட்டுகின்றனர்.  இதனால் மரங்கள் கருகி, பூங்கா தனது பசுமை சூழலை இழந்து வருகிறது. 

ஏராளமான நாய்கள், பூங்காவினுள் சுற்றி திரிவது, பூங்காவை பயன்படுத்தும் குழந்தைகளுக்கும், நடை பயிற்சியாளர்களுக்கும், அச்சுறுத்தலாக விளங்குகிறது. 

உடற்பயிற்சி கருவிகள் பல, கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகி வருவது, அதிர்ச்சி அளிப்பதாக, பூங்காவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக வரும் பெரும்பாலான மக்கள் வருந்துகின்றனர். 

ஏரிக்கரையோரம் பூங்கா அமைந்து இருந்தாலும், செடிகளுக்கும், மரங்களுக்கும், தண்ணீர் ஊற்றாததால், செடிகளும், மரங்களும், காய்ந்து, கொண்டை சரிந்து காட்சியளிக்கின்றன. பூங்காவினுள் இருந்த இரண்டு ஊழியர்களிடம் இது குறித்து நாம் விணவியதற்கு, அவர்கள் இருவரும் ஒரு சேர, தண்ணீருக்கு, பம்பு இல்ல.  பம்பு இருந்தால் Valve இல்லை. Valve இருந்தால் Hose இல்லை, தங்கள் கடமையை தட்டிக் கழிப்பதில் கடமையாக இருந்தனர்.

கழிவறை ஒப்பந்தத்தை இந்தி மட்டுமே தெரிந்த நபர்களுக்கு ஒப்பந்தம் விட்டிருப்பது, ஓசூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவசரத்திற்கு வருபவர்களை இந்திக்காரர்கள், இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்திய நிலையில், கழிவறை பயன்பாடு இன்றி, இப்போது பூட்டிய நிலையில் உள்ளது.

ஓசூர் மாநகராட்சிக்கும், அதன் மேயருக்கும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பூங்காவை நாள்தோறும் பயன்படுத்தும் மக்கள் என அனைவரது கோரிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டுகளைப் போல, பூங்காவின் மேலாண்மையை, தனியார் நிறுவனங்களின் பொறுப்பில் ஒப்படைத்து, பேண வேண்டும் என்பதாகும்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: