ஒன்னல்வாடி இரட்டைக் கொலையை தொடர்ந்து, கடந்த நாள், ஒன்னல்வாடி கொலை போன்றே, சூளகிரி அருகே அட்டக்குறுக்கி ஊரில், மூதாட்டி மர்ம முறையில் கொலை மற்றும் வீடும் எரிப்பு! கொலைக்கான பின்னணி குறித்து, துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!
அடுத்தடுத்து மர்மக் கொலைகளால் திக்கு முக்காடும் ஓசூர்! பொதுமக்கள் மட்டுமல்லாது, காவல்துறையினரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் தொடர் கொலை நிகழ்வுகள்!
அடுத்த கொலை எங்கே? எப்போது? என அச்சத்தில் ஓசூர் மக்களை இந்த தொடர் கொலை நிகழ்வுகள் உறைய வைத்துள்ளன!
ஓசூர் ஒன்னல்வாடி ஊரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, எழுபது வயது லூர்துசாமி மற்றும் வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்த, அவரது மனைவியின் தங்கை, அறுபது வயதுடைய எலிசபத் என இருவர் வெட்டுக் காயங்களுடன், வீடும் தீப்பற்றி எரிந்த நிலையில், உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், லூர்துசாமியும், எலிசபெத்தும் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவர்கள் இருவரையும் அறிவாளால் வெட்டி கொலை செய்ததும், கொலை மற்றும் கொள்ளை நிகழ்வை திசை திருப்ப, கொலையாளிகள் வீட்டில் இருந்த மெத்தை மற்றும் துணிகளுக்கு தீ வைத்து விட்டு சென்றதும் தெரிய வந்தது.
இந்த இரட்டை கொலைகள், நடந்து பல நாட்கள் ஆகியும், கொலைக்கான பின்னணி குறித்த துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் தொடர்ந்து புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நாள், ஓசூர் அடுத்த அட்டக்குறுக்கி என்னும் ஊரில், எழுபத்தைந்து வயதுடைய மூதாட்டி ஒருவரை, கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு, ஒன்னல்வாடியில் நடந்த நிகழ்வு போன்றே, வீட்டிற்கும் மர்ம நபர்கள் நெருப்பு வைத்து சென்றுள்ளனர்.
இரண்டு கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகளும், பிற்பகல் வேளையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்னல்வாடி, தேசிய நெடுஞ்சாலை 844 அருகே அமைந்துள்ளது. அட்டகுறுக்கி, தேசிய நெடுஞ்சாலை 44 -ல் அமைந்துள்ளது.
Inspector general of police, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏராளமான காவல்துறை உயர் அலுவலர்கள் இரண்டு இடங்களிலும் நேரடி ஆய்வில் ஈடுபட்டு, புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பலாக இருக்குமா? அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்குமா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் செயலாக இது இருக்குமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தங்களது புலனாய்வை முழு அளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர், விரைவில் கொலையாளிகளை கண்டறிந்து, தொடர் குற்ற நிகழ்வுகளை தடுத்து, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவர் என பொதுமக்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.