Hosur News, ஓசூர் செய்திகள் - Bagalur Road - பாகலூர் சாலை!. மூன்று கிலோ மீட்டர் சாலை முழுவதும் மரண குழிகள்!

பாகலூர் சாலை!. மூன்று கிலோ மீட்டர் சாலை முழுவதும் மரண குழிகள்!.  ஓசூர் பேருந்து நிலையம் துவங்கி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரை, சாலை விபத்தை ஏற்படுத்தும் குண்டும் குழியுமான சாலை! 

மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், ஏராளமான அரசு அலுவலர்கள், மென் பொறியாளர்கள், என ஏராளமான, ஓசூரின் பொறுப்பு மிக்க, உயர்மட்ட மனிதர்கள் பயன்படுத்தும் இந்தச் சாலை, நடந்து செல்வோருக்கும், இரு சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கும், சாவதற்கான குழி! 

கடந்த ஆறு ஆண்டுகளாக, ஓசூரில் முதன்மையான சாலைகளில் ஒன்றான பாகலூர் சாலை, சீர் செய்யப்படாமல், குண்டும் குழியுமாக, ஓசூர் மக்களின் உயிரை காவு வாங்கும் சாலையாக கைவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின், தேசிய நெடுஞ்சாலை துறை, ஓசூர் உதவி கோட்ட பொறியாளரிடம், பாகலூர் சாலையின் அவல நிலை குறித்து ஓசூர் ஆன்லைன் சார்பில் விளக்கம் கேட்டபோது, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆக தரம் உயர்த்தினால், ஆறு ஆண்டுகளுக்கு அதை சீர் செய்ய மாட்டோம் என,  புதியதொரு சாலை தொழில்நுட்ப விளக்கத்தை வழங்கினார். 

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டதே? எப்போது தான் சீர் செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, விரைவில் சீர் செய்யப்படும் என கடந்த டிசம்பர் திங்களில் கூறியிருந்தார்.  கடந்த நான்கு திங்கள்களில், பலரது கை கால்களை இந்தச் சாலை முறித்த நிலையில், மார்ச் ஏழாம் நாள், சாலையை மேம்படுத்துவதற்கான, 16 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒப்பந்தம் கோரப்பட்டது.

இதற்கிடையே ஓசூர் மாநகராட்சியின் ஏழாவது வார்டு பகுதி இளைஞர்கள், தங்களது சொந்த பணத்தில், சாலையை சீர் செய்யும் பணியை, கடந்த ஜனவரி திங்களில் மேற்கொண்டனர்.

கடந்த நாள், ஓசூர் ஆன்லைன் சார்பில், ஒப்பந்த கோரிக்கை மீதான நடவடிக்கை குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது, ஒப்பந்த கோரிக்கை குறித்த தகவல்கள், சென்னை வட்டார அலுவலகத்தில் இருப்பதாகவும், இதுகுறித்து மேற்கொண்டு முடிவெடுக்க, சேலம் கோட்டப் பொறியாளர், சென்னை அலுவலகத்திற்கு நேரில் சென்று இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். 

வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள், சாலை மேம்படுத்தும் பணிகள் துவங்கும் என அவர் உறுதியாக தெரிவித்தார். 

இதற்கிடையே தன்னார்வலர் ஒருவர், தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ், பாகலூர் சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறையின் சேலம் கோட்ட பொறியாளரை  வினவியதற்கு, 2023 ஆம் ஆண்டு, மே திங்களில், இரண்டு லட்சத்து ஐம்பத்தேழாயிரம் ரூபாய் செலவில், சீர் செய்ததாக, பதிலளித்துள்ளார்.

பாகலூர் சாலை தேசிய நெடுஞ்சாலை எண் 648 (207), தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகிறது. சாலைகள் என்று வந்துவிட்டால், அது மூன்று பிரிவுகளை கொண்டதாகவும், நான்கு துறைகளை சார்ந்ததாக உள்ளது.  முதலாவது வகைச் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகள்.  இரண்டாம் வகை சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பண உதவி செய்யப்பட்டு, அந்தந்த மாநிலங்களின், தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள்.  மூன்றாவது வகை, மாநில நெடுஞ்சாலைகள்.  இவை அந்தந்த மாநில அரசுகள் திட்டம் வகுத்து, மாநில வருவாயில் இருந்து அமைக்கப்படும் சாலைகள்..  நான்காவது வகை, உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள். அவை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஓசூர் பாகலூர் சாலையை பொருத்தவரை, இது இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும்.  அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், பண உதவி வழங்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

பலரது உயிரை காவு வாங்கி, கை கால்களை முறித்து, மரணக் குழியாக காட்சியளிக்கும் பாகலூர் சாலை, விரைவில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையில், பொறுமை காப்போம்!


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: