Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Industry workers & salary திறன் வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை

ஓசூர் தொழிற்சாலைகள்... ஒருபுறம் திறன் வாய்ந்த தொழிற்சாலை ஊழியர்கள் வேலைக்கு கிடைப்பதில் பற்றாக்குறை.  மறுபுறம் ஊழியர்களுக்கு போதிய வசதிகள் இல்லாத சூழல்.  ஓசூர் தொழிற்சாலைகளின் தேவை தான் என்ன?

ஏராளமான பெரிய அளவிலான தொழிற்சாலைகள்... எண்ணில் அடங்காத சிறு மற்றும் குறு, தொழிற்சாலைகள்…  பெரிய தொழிற்சாலைகளின் பணிகளை, துணை ஒப்பந்தங்கள் மூலம் எடுத்து  நிறைவேற்றி, அதன் மூலம் வருவாய் ஈட்டி கொள்பவை இந்த சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள். 

இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருபவை இந்த சிறு குரு தொழிற்சாலைகள். பெரும்பாலும் இத்தகைய தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், தொழிலாளியாக இருந்து உரிமையாளராக மாற்றம் அடைந்தவர்கள்.  கடன் மற்றும் குறைந்த வருவாய் சூழலில் சிக்குண்டு கிடப்பவர்கள்.

ஓசூரை பொறுத்தவரை, இத்தகைய தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கான ஊதியம்,  குறைந்த அளவு ரூபாய் பத்தாயிரம். திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் முப்பதாயிரம். 

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை பொருத்தவரை, தொழிற்சாலை உற்பத்தியில், சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு இணையாக போட்டி போட வேண்டும் என்று கற்பனை செய்கின்றனர். 

சீனா போன்ற பிற நாடுகளை பொறுத்தவரை, ஓசூரை போன்றே தொழிலாளர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது.  பொது வழங்கல் திட்டத்தின் கீழ், மானியத்தில் உணவுப் பொருள் வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது. 

மேலும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் திறம்பட அரசினால் செய்து கொடுக்கப்படுகின்றன.  அதனால் அவர்களின் வாழ்க்கை மகிழ்வாக அமைகிறது.  தொழிலாளர்களின் மகிழ்வான வாழ்க்கை, உற்பத்தித்திறனை மேலும் பெருக்குகிறார்.  அதனால் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன் மேம்படுகிறது. 

ஓசூரை பொறுத்த வரை, தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தில் பெருமளவு வருவாயை, வீட்டு வாடகைக்கு செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.  மேலும், ஆறு கடந்தாற் போன்ற அகலமான சாலைகள் ஓசூரில் இருந்தாலும், பொது போக்குவரத்து என்பது, இல்லை என்று ஒற்றை வார்த்தையில் கூறி விடலாம். இதனால், தொழிலாளர்கள், இருசக்கர வண்டி வாங்குவதற்கு கடன் பட வேண்டிய சூழலும், எரிபொருளுக்கு பெருமளவில் செலவினங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

பெரிய நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் தங்கும் அறைகளை, குறிப்பாக வட இந்தியர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து, வட இந்தியாவை வாழ வைக்கும் தங்களது பணியை சிறப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர் தொழிற்சாலைகளை பொருத்தவரை, குறைந்த ஊதியத்திற்கு வட இந்திய தொழிலாளர்களை அழைத்து வந்து பணி அமர்த்தினாலும், அவர்களால் அறிவு சார்ந்த வேலைகளை திறம்படச் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.  உள்ளூர் இளைஞர்கள், ஓசூரில் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளில் பணிபுரிய தயங்குவதற்கு முதன்மையான கருத்தாக விளங்குவது, வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்திற்கான செலவினங்கள்.

ஓசூர் விரைவாக வளர்வதில் பெருமை கொள்ளும் தமிழ்நாடு அரசு, சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்களின் நலனை கருதி, வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடியிருப்புகளையும், சிறு குறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளுக்கு, பொது போக்குவரத்து பேருந்துகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும்.  

ஊழியர்களுக்கு குடியிருப்புகளை நேரடியாக வழங்காமல், சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் மூலம் வழங்குவது மற்றும் தொழிலாளர்களின் பேருந்து கட்டணங்களை, தொழிற்சாலைகளிடமிருந்தே நேரடியாக பெற்றுக் கொண்டு, பேருந்துகளை பெருமளவு இயக்க வேண்டும். 

என, வேலை வாய்ப்பை தேடி அலையும், தமிழ்நாட்டு இளைஞர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும், தமிழர் நலனில் அக்கறை பேணும் தன்னார்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: