ரூ 324 லட்சம் மதிப்பீட்டில், ஓசூரில் வர இருக்கிறது அறிவியல் பூங்கா! ராமநாயக்கன் ஏரிக்கரையோரம், தளி சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்காவில், அடிக்கல் நாட்டு விழா, மற்றும் அதற்கான பூஜைகள் கடந்த நாள் காலை 9 மணி அளவில் நடைபெற்றது. அறிவியல் பூங்கா என்றால் என்ன? அதனால் ஓசூர் மக்களுக்கு என்ன பயன் குறித்த தகவல்கள்!
மார்ச் 29 ஆம் நாள் காலை, 9 மணி அளவில், மாநகராட்சி மேயர் S A சத்யா, துணை மேயர் ஆனந்தையா ஆகியோர் முன்னிலை வகிக்க, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ், மரம் நட்டு, ஓசூரில், 324 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான திட்டத்தை துவக்கி வைத்தனர்.
ஓசூர் அறிவியல் பூங்கா, சுமார் ஒன்றேகால் ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதியான இடம் என்று எதுவும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து தெரிவித்த செந்தில் அவர்கள், அறிவியல் பூங்காவானது, செயல் விளக்க ஆய்வுக்கூடம், நூலகம் உள்ளடக்கிய கட்டிடம் மற்றும், திறந்தவெளியில், மாணாக்கர்களுக்கு அறிவியல் தெளிவு ஏற்படுத்தும் விதமாக, கருவிகளுடன் கூடிய மாதிரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழிக்கு ஏற்ப, மாணாக்கர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு பாடநூல் அறிவு, அறிவியல் சார்ந்த அறிவாற்றல் வளர்ச்சிக்கு முழுமையான பயன் தராது என்பதால், தமிழ்நாடு அரசு பல்வேறு பெருநகரங்களில், அறிவியல் பூங்கா அமைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூரில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த நாள் துவங்கப்பட்டுள்ளன.
ஓசூர் ஆன்லைனிடம் கருத்து தெரிவித்த பெரும்பாலானவர்கள், ஓசூர் அறிவியல் பூங்கா தொடர்பாக முழுமையான தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்றும், ஓசூர் மாநகராட்சி சார்பில், திட்ட வடிவங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
ராமநாயக்கன் ஏரிக்கரையோரம், தளி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சியின் சிறுவர் பூங்காவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இருந்தாலும், பூங்காவை, வேறு பயன்பாட்டிற்கு மாற்றி அமைக்கும் உரிமை, மாநகராட்சி மற்றும் அரசுக்கு இல்லை என ஏற்கனவே பல வழக்குகளில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பூங்காவினுள், எத்தகைய கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படாது என்று தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற பூங்காவின் அருகில் அல்லது எதிர்ப்புறம் அமைந்துள்ள அரசு நிலத்தில் இந்த பூங்கா அமைந்தால், மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.