தமிழ்நாடு முழுவதும், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள், இரும்பு வார்ப்பு ஆலைகள் அமைத்திருந்தனர் என்பதற்கான தடயங்கள், தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இந்த ஆலைகள் மூலம், உழவு மேற்கொள்வதற்கான கருவிகள், ஆயுதங்கள் மற்றும் அணிகலன்கள் என பல்வேறு விதமான பொருட்களை, உற்பத்தி செய்து வந்துள்ளார்கள்.
திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை அருகே, ராஜ கோபாலபுரம் பகுதியில்,
திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டி அடுத்த, கண்ணநல்லூர் அருகே, விளாங்காடு பகுதியில்,
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே சிவகளை பகுதியில்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த, மயிலாடும்பாறை அருகே, மீன்குட்டபாறை பகுதியில்,
என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், இரும்பு உருக்கு ஆலை அமைந்ததற்கான சுவடுகளும், எச்சங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.
ஓசூர் அருகே, கெலமங்கலம் அடுத்த, அனுசோனை பகுதியில் அமைந்துள்ள ஊர், பாவடரப்பட்டி (https://maps.app.goo.gl/fGrCqa7ehME2htV99). இந்த சிறிய ஊரை தொட்டடுத்து அமைந்துள்ளன, அடக்கம் மற்றும் சின்னுள்ளு குறிக்கி, என்கிற இரு சிற்றூர்கள்.
பாவடரப்பட்டி ஊரில் அமைந்துள்ள ஒரு மலைக்குன்றின் மீதும், அருகில் உள்ள நிலங்களிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்றது போன்று, இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான, ஏராளமான, எச்சங்களும் கழிவுகளும் சிதறி கிடக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே, சிவகளை பகுதியில், இதே போன்ற, வரலாற்றுக்கு முந்தைய இரும்பு தொழிற்சாலை கழிவுகளை, அது எத்தனை பழமையானது என, Radiometric முறையில், ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவை, கிமு 3000க்கு முந்தையவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள், இரும்பு தொழிற்சாலை நடத்தியுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.
பாவடரப்பட்டி ஊரில் கிடைத்த இரும்பு தொழிற்சாலை எச்சங்களும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்கப் பெறும் தடயங்களும், ஒரே மாதிரியானவகையாக இருப்பதால், இத்தகைய தொழிற்சாலைகள் அனைத்தும், ஒரே குழுவினர்களால் நடத்தப்பட்டு வந்துள்ளது என்பது நமக்குத் தெரிய வருகிறது.
இரும்பு தொழிற்சாலை நடத்திய தமிழர்கள், தங்களது இரும்பு தொழிற்சாலையை, ஒரே இடத்தில் அமைக்காமல், ஏன் பல்வேறு இடங்களில் அமைத்தனர் என்கிற கேள்வி நம்முள் எழ வேண்டும்!
இந்த கேள்விக்கான விடை, ஹிட்டைட் பண்பாட்டை கொண்ட, அனதோலியா பகுதியில் வாழ்ந்த மக்கள், அதாவது இன்றைய துருக்கி பகுதியில் வாழ்ந்தவர்கள், விண்ணில் இருந்து கொட்டிய இரும்பு உலோகப் பொருள் குறித்து எழுதி வைத்துள்ளனர். விண்ணில் இருந்து விழுகிறது என்றால், இன்றைய அறிவியல் புரிதலில், அது விண்மீன் கற்கள் என்பதை குறிப்பிடுகிறது.
அதாவது, வரலாற்றுக்கு முந்தைய ஊழியில் வாழ்ந்த தமிழர்கள், மண்ணுக்கு அடியில் இருந்து, இரும்பு தாது பொருட்களை வெட்டி எடுத்து, தூய்மைப்படுத்தி, அதை பயன்படுத்தவில்லை.
மாற்றாக, விண்கற்கள் வானத்திலிருந்து, குவியலாக விழுந்த இடங்களை தேடி, இவர்கள் அலைந்து திரிந்து கண்டறிந்து இருக்க வேண்டும். ஏனெனில், மண்ணில் விழும், விண்கற்கள், முழுமையான இரும்பு வடிவிலேயே பெரும்பாலும் கிடைக்கும். ஆகவே அவற்றை எடுத்து பயன்படுத்துவது எளிய முறை.
அதனால்தான், அன்றைய ஊழி தமிழர்கள், தங்களது இரும்பு தொழிற்சாலையை ஒரே இடத்தில் நிறுவாமல், பல்வேறு பகுதிகளில் அமைத்துள்ளனர்.
இதன் மூலம், தமிழர்கள், ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய ஹிட்டைட்ஸ், Hittites பண்பாட்டிற்கு ஒப்பாக, சிறந்த அறிவாற்றலுடன், பண்பட்ட நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
மேலும், வட தமிழ்நாட்டில் இத்தகைய இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளம், ஓசூர் அருகே பாவடரப்பட்டி ஊரில் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாவடரப்பட்டியில், கல் ஊழி மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன. கல்லில் உருவங்களை வரைவதற்கோ செதுக்குவதற்கோ ஆயுதங்கள் இல்லாத நிலையில், கடவுள் வழிபாட்டை, தங்களது கல் கருவிகளை கடவுளர்களாக நட்டு வழிபாடு நடத்தியுள்ளனர். அதற்கான தடயங்களும் இந்த ஊரில் உள்ளது.
அதாவது, இந்த ஊர் பகுதியில், இரும்பு தொழிற்சாலை அமைவதற்கு முன்பே, மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ளது. இப்பகுதியில் இரண்டு ஊர்கள் இருந்ததாகவும், அவை பின்னாளில் அழிந்து விட்டதாகவும், இந்த ஊரில் வழிவழியாக வந்த கதைகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி, கண்டிப்பாக அகழாய்விற்கு உட்படுத்த வேண்டிய, ஆர்வம் மிக்க பகுதி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.
பாவடரப்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு, கள ஆய்வு மேற்கொள்ள, ஓசூர் ஆன்லைன் சார்பில் சென்ற யாம், கண்டறிந்த பல்வேறு தகவல்களை, அடுத்த காணொளியில் வழங்குகிறோம்.