150 ஆண்டு ஓசூர், ராயக்கோட்டை, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மொரப்பூர், தருமபுரி ரயில்வே வரலாறு! 150 ஆண்டுகள் கடந்தும், திட்ட வடிவிலேயே விடப்பட்டு கிடக்கும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும், ஓசூர் ராயக்கோட்டை பாலக்கோடு கிருஷ்ணகிரி, இருப்புப் பாதை (Railway) இணைப்பு திட்டம்! இந்த பெருநகரங்கள், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டு, மக்களின் போக்குவரத்துக்கு ஏற்பாடாகுமா? வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க!
ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மொரப்பூர் மற்றும் தருமபுரி இடையிலான இருப்புப் பாதை வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன்னால், அன்றைய நாட்களில் இப்பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஓசூர் வட்டத்தில், தென்பெண்ணை ஆற்றை கடக்க, 2 படகு போக்குவரத்தும், ஊத்தங்கரை பகுதியில் 4 படகு போக்குவரத்தும், கிருஷ்ணகிரியில் 2ம் செயல்பட்டு வந்துள்ளது. இப்பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மதராஸ் ரயில்வே 1845 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தெற்கு மகரட்டா ரயில்வே, தார்வாரை தலைமை இடமாக கொண்டு 1882 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
The Great Southern of India Railway Company என்ற நிறுவனம், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு 1853 ஆண்டு நிறுவப்பட்டது. 1869 ஆம் ஆண்டு Carnatic Railway Company என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இவை இரண்டையும் 1874 ஆம் ஆண்டு ஒருங்கிணைத்து, தென்னிந்திய ரயில்வே துவங்கப்பட்டது.
இந்த சூழலில், மதராஸ் ரயில்வே மற்றும் தெற்கு மகரட்டா ரயில்வே, ஆகியவை தொடர்ந்து இயங்கி வந்துள்ளது.
தென்னிந்திய ரயில்வே சார்பில், வடகிழக்கு பகுதியில் இருந்து தென்மேற்கு பகுதிக்கு, மேற்கு கடற்கரை கிளை அகல ரயில் பாதை, சென்னையில் இருந்து ஊத்தங்கரை மற்றும் மொரப்பூர் வழியாக, சேலம், சங்ககிரி, போத்தனூர், மலப்புறம் வரை அமைக்கப்பட்டது.
திருப்பத்தூர் முதல் சென்னை வரையிலான இருப்புப் பாதை, போக்குவரத்திற்கு 1860 ஆம் ஆண்டு மே, 23-ம் நாள் திறந்து விடப்பட்டது.
மேலும், 1861 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 1-ம் நாள், திருப்பத்தூர் சேலம் இடையே, ரயில்வே போக்குவரத்து துவங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகள், மதராஸ் ரயில்வேயின் பெங்களூர் கிளை மற்றும் தெற்கு மகரட்டா ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அடிக்கடி, இப்பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்படும் நிலைமை இருந்து வந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரியை இணைக்கும் விதமாக, 41 கிலோமீட்டர் நீளத்திற்கு, இருப்புப் பாதை அமைத்தனர். இந்த இரண்டு நகர்களுக்கு இடையே, மூன்று ரயில்வே நிறுத்தங்கள் இருந்துள்ளது.
மொரப்பூர் மற்றும் தருமபுரியை இணைக்கும் விதமாக, 30 கிலோமீட்டருக்கும், தருமபுரியில் இருந்து, ஓசூர் வரை, சுமார் 88 கிலோமீட்ருக்கும் இருப்புப் பாதை அமைத்தனர். மொரப்பூர், தருமபுரி மற்றும் ஓசூர் இடையேயான வழித்தடத்தில், 10 ரயில் நிறுத்தங்கள் இருந்துள்ளது.
பொது மக்களின் பயன்பாட்டிற்காக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் இடையேயான இருப்புப் பாதை 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18 ஆம் நாள் திறந்து விடப்பட்டுள்ளது.
மொரப்பூர், தருமபுரி மற்றும் ஓசூரை இணைக்கும் இருப்புப் பாதை, 1906 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள், 18 ஆம் நாள், பொது மக்களின் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்பட்டது.
இந்த இரு ரயில்வே பாதைகளும், வருவாய் ஈட்டக்கூடிய பாதைகளாக அமைக்கப்படவில்லை.
பஞ்சம் ஏற்பட்டால், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதை முதன்மையான கருத்தாக கொண்டு இவை அமைக்கப்பட்டன. இந்த இரண்டு பாதைகளும், இரண்டடி, ஆறு அங்குலம், Narrow Gauge கொண்டவையாக அமைக்கப்பட்டன.
மொரப்பூர், தருமபுரி, ஓசூர் பாதையானது யூகலிப்டஸ் மரம் வகையைச் சார்ந்த மரக்கட்டைகளால் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி திருப்பத்தூர் இடையேயான இருப்புப் பாதைக்கு, தேக்கு மரக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி இடையேயான பாதை, பெரியகாரம் வரை சென்று, அதன் பின், சாலையை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஓசூரை பெங்களூருடன் இணைப்பதற்கு, மைசூர் தர்பாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தருமபுரியை, பாலக்கோடு மற்றும் காவேரிப்பட்டினம் வழியாக, கிருஷ்ணகிரியுடன் இணைப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது.
1903 ஆம் ஆண்டு முதல், சேலம் மாவட்ட ஆட்சியாளர்கள், இருப்புப் பாதை பயன்படுத்திய நிலத்திற்கான ஆண்டு வாடகைக்கு, மூன்று விழுக்காடு என்ற அளவில், தீர்வை வரி விதித்தனர். இதனால், ரயில்வே துறை, சேலம் மாவட்ட மேலாண்மைக்கு, 1913 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் வரைக்கும் ரூபாய் 43,223 நிலுவைத் தொகை பழு ஏற்பட்டது. அரசு பத்திர நிதிகள் மூலம், 5,31,100 ரூபாய் சுமை ஏற்பட்டது.
நாம் ஏற்கனவே முந்தைய தொகுப்பில் (https://hosuronline.com/hosur-news-detail.php?nid=844&catid=5) பதிவு செய்தது போன்று, 1942 ஆம் ஆண்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் மொரப்பூர், தருமபுரி, ஓசூர் இடையேயான, இருப்புப் பாதை, அன்றைய தேவையை கருதி, பிரித்தெடுக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு, பெங்களூருவில் இருந்து, ஓசூர் மற்றும் தர்மபுரி வழியாக, தென்னிந்திய ரயில்வேயுடன் இணைக்கும் விதமாக, சேலம் வரையிலான இருப்புப் பாதை, தெற்கு மகரட்டா ரயில்வே சார்பில், Meter Gauge பாதையாக அமைக்கப்பட்டது. பொதுமக்கள், இப்பகுதியில், தொடர் வண்டிகளில் பயணிப்பதை பெரிதும் விரும்பவில்லை. ஏனெனில், தொடர்வண்டி பயணம், பேருந்து பயணத்தைக் காட்டிலும், கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதாக இருந்தது.
இதற்கிடையே, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரை இணைக்கும், இருப்புப் பாதை வழித்தட நிலங்கள், 1963ம் ஆண்டு வாக்கில், தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டில், அவை பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தண்டவாளப் பயன்பாட்டை நிறுத்தி நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், அப்போது அமைக்கப்பட்ட கட்டுமானங்களில், மனிதர்கள் அகற்றியதை தவிர்த்து மீதமுள்ள பகுதிகள், சிறிதளவும் இயற்கையாக சிதிலமடையாமல் காட்சியளிக்கின்றன.
தருமபுரி, மொரப்பூர் இடையேயான, இருப்புப் பாதை திட்டம், 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களால், திட்டம் இந்நாள் வரை நடைமுறைக்கு வராமல் திண்டாடி வருகிறது.
ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் இடையேயான, இருப்புப் பாதை திட்டம், சுமார் 50 ஆண்டுகளாக, பல்வேறு கள ஆய்வுப் பணிகளுக்கு பணம் ஒதுக்கும் நிலையோடு, தன்நலம் சார்ந்த அரசியல் தலையீடுகளால் தடைபட்டு நிற்கிறது!
ஓசூர், ராயக்கோட்டை, பாலக்கோடு வழி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வழித்தடம் மற்றும் மொரப்பூர் தர்மபுரி இருப்புப் பாதை வழித்தடம், என இரண்டும், ஆட்சியாளர்கள் மனம் வைத்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள் என நம்பிக்கையுடன், வாக்காளப் பெருமக்களாகிய நாம், நமது வாழ்க்கையை தொடருவோம்.
1. IRFCA - https://www.irfca.org/members/trips/manning/salem.html
2. By Mr Maddy - https://historicalleys.blogspot.com/2013/01/the-madras-railways-western-terminus.html
3. Madras District Gazetteers – Salem, Valume 1 – Part 1 By F. J. Richards, Indian Civil Service, Published : 1918
4. Grace s Guide To British Industrial History https://www.gracesguide.co.uk/Madras_Railway