Hosur News, ஓசூர் செய்திகள் - விமான நிலையம் அமைப்பதில், ஓசூருக்கும் பெங்களூருவிற்கும் போட்டி! வெல்லப் போவது யார்?

விமான நிலையம் அமைப்பதில், ஓசூருக்கும் பெங்களூருவிற்கும் போட்டி! வெல்லப் போவது யார்?  இந்தப் பதிவில், அழகான உலகத்தையும், உழவர் பெருமக்களின் கருத்துக்களையும், பெங்களூருவிற்கான இரண்டாம் விமான நிலையம் அமைப்பதில், கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் குறித்தும் தெரிந்து கொள்ளலாம், வாங்க!

தமிழ்நாடு அரசு, ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, தீவிர முனைப்புடன் செயல்படுவதாக, நாடாளுமன்றத்தில், ஒன்றிய அரசின், விமான போக்குவரத்து துறை அமைச்சர், திரு கிஞ்சராபு ராம் மோகன், தெரிவித்திருந்தார். 

கடந்த மார்ச் திங்களில், ஓசூர் விமான நிலையம் அமைப்பதன் முதற்கட்டமாக, Airport Authority of India, தனது வரைவு ஆய்வு அறிக்கையை, தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது.  இது ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முதல் படி. 

இரண்டாம் கட்ட அறிக்கையானது, ஏப்ரல் கடைசிக்குள், தமிழ்நாடு அரசிடம் வழங்கப்படும் என்றும், இந்த அறிக்கையில், Obstacle Limitation Surface Survey, அதாவது, தடை வரம்பு மேற்பரப்பு மதிப்பாய்வு மற்றும் வான்வெளி - Air Space, குறித்த முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முழு அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தமிழ்நாடு அரசை பொருத்தவரை, Taneja Aerospace and Aviation Limited அமைந்துள்ள பகுதி முதன்மையான தேர்வாகவும், சூளகிரி - ராயக்கோட்டை இடையே அமைந்துள்ள, உலகம் அருகே அமைந்துள்ள பகுதி இரண்டாவது தேர்வாகவும் கருதப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இரு பகுதிகளைச் சார்ந்த உழவர் பெருமக்களும், விமான நிலையம் தங்கள் பகுதியில் அமைப்பதற்கு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  குறிப்பாக Taneja Aerospace அமைந்துள்ள பெலகொண்டபள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதி ஊர் மக்கள், கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

உலகம் ஊரைப் பொறுத்தவரை, இங்கே முழுமையாக மாறுபட்ட நிலை, நிலவுகிறது. இவ் ஊரைச் சார்ந்த, நிலம் வைத்து, உழவுத் தொழில் செய்து வரும், மக்கள், விமான நிலையம் வந்தால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்கிற மனநிலையில் உள்ளனர். 

அதே வேளையில், அருகில் அமைந்துள்ள ஊர் பகுதிகளைச் சார்ந்த மக்கள், விமான நிலையம் இப்பகுதியில் அமைந்தால், தங்களுக்கு வாழ்வாதாரம் மேலும் சிறக்கும், என்கிற மனநிலையில் உள்ளனர். 

மேலும், பெலகொண்டபள்ளி பகுதியை பொருத்தவரை, விளைநிலங்கள் பெருமளவு கையகப்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.  ஆனால், உலகம் ஊர் அருகே, ஏராளமான அரசு நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  குறிப்பாக, ஹெப்பாளம் காட்டுப்பகுதி இருப்பதால், பெருமளவு விளை நிலங்கள், கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படாது, என்கிற கருத்து இப்பகுதியில் பரவலாக நிலவுகிறது. 

ஓசூர் ஆன்லைன் இடம், உலகம் ஊரைச் சார்ந்த சிலர், தங்களது கருத்தை பதிவு செய்த போது, அலேசீபம், B கொத்தப்பள்ளி, எட்டிப்பள்ளி, உலகம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த நிலங்கள், விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர். 

இது தொடர்பாக ஓசூர் ஆன்லைன் சார்பில், சூளகிரி வட்டாட்சியரை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து விளக்கம் கேட்ட பொழுது, அப்படியான தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என கூறினார்.  இவை வெற்று வதந்திகள், என்று எடுத்துரைத்தார். 

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் இடையே, யாருடைய தொகுதியில், பெங்களூர் இரண்டாம் விமான நிலையம் அமைப்பது என்பது குறித்து, கடுமையான போட்டி இருப்பதாக, The Print செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது. 

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நெருங்கியவராக கருதப்படும், அம் மாநில உள்துறை அமைச்சர், G பரமேஸ்வரர், வட பெங்களூரு கொரத்தகரை பகுதியில், அதாவது அவரது சட்டமன்ற தொகுதி அருகே, பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் அமைய வேண்டும் என அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

அம் மாநில துணை முதலமைச்சர் D K சிவக்குமார், தனது நில புலன்கள் அமைந்துள்ள, தெற்கு பெங்களூர் அருகே உள்ள கனகபுரா தொகுதியில், விமான நிலையம் அமைய வேண்டும் என, முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  இவரது தரப்பில், ஓசூர் ஆன்லைன் இடம் கருத்து கூறிய சிலர், இவ்வாறு, தெற்கு பெங்களூரு கனகபுரா பகுதியில் விமான நிலையம் அமைந்தால், தமிழ்நாடு அரசு ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை, முறியடிக்க இயலும் என்று கூறினர்.  

இதற்கிடையே, நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களை தனக்கு ஆதரவாக கொண்ட, T B ஜெயசந்திரா, டுமுக்குரா மாவட்டத்தில் உள்ள, சிரா பகுதியில் விமான நிலையம் அமைய வேண்டும் என விரும்புகிறார். 

Airports Authority of India சார்பில், தெற்கு பெங்களூரு பகுதியில் இரண்டு இடங்கள், மற்றும் ஒரு இடம், ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கிடையே, ஜெயச்சந்திரா, தலையீட்டால், மும்முனைப்போட்டி நிலவுகிறது. 

இங்கே குறிப்பிடத்தக்கது என்னவெனில், கடந்த 1990களில், கனகபுரா பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கை, கர்நாடக மாநில அரசு சார்பில் வைக்கப்பட்டாலும், இந்திய விமான நிலைய ஆணையம், அப்பகுதி ஏற்புடையது அல்ல என, ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

மேலும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த, அரசியல் தலைவர்கள் பலர், தெற்கு பெங்களூருவிற்கு பெருமளவு முதன்மை கொடுத்து, வளர்ச்சிகளை மேற்கொள்வது, கர்நாடகாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும் என கருத்து கூற துவங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஓசூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து, தமிழ்நாடு அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, உண்மையாக, முழுமையான மனநிலையுடன், முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது, ஓசூர் மக்களாகிய நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: