Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur - Bagalur Road Work Delay Reason? ஓசூர் பாகலூர் சாலை, கைவிடப்பட நிலை தொடர்வது எதனால்?

ஓசூர் பாகலூர் சாலை, பொதுமக்கள் பல ஆண்டுகளாக  கோரிக்கை விடுத்தும், கைவிடப்பட்டுள்ள நிலை தொடர்வது எதனால்?  அரசியல் தலையீடா? அல்லது இந்த சாலையில் கடை நடத்தும் பெரிய நிறுவன முதலாளிகளின் குறுக்கீடா? அல்லது அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா? ஒரு சிறப்பு பார்வை. 

ஓசூர் பாகலூர் சாலை, ஓசூர் நகரின் முதன்மையான சாலைகளில் ஒன்று.  

ஓசூர் மாநகராட்சி மேயர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என அனைவரும் தமிழ்நாடு அரசின் ஆளுங்கட்சி மற்றும் சார்புடைய அமைப்புகள் சார்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மூன்று கிலோமீட்டர் சாலையை சரி செய்வதற்கு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போக்கு காட்டி வருவது, சாலையை பயன்படுத்தும் பொதுமக்களை, கடும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளதாக, இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஓசூர் மாநகராட்சி, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், எல்காட் தொழிற்பேட்டை உள்பட, பல்வேறு அரசு அலுவலகங்களையும், தொழிற்சாலைகளையும், குடியிருப்பு பகுதிகளையும் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தையும் தாங்கி நிற்பது ஓசூர் பாகலூர் சாலை.

தேசிய நெடுஞ்சாலை 648, இதன் பழைய எண் 207, ஓசூரில் துவங்கி, கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம், ஒசக்கோட்டை, தேவனஹள்ளி, தொட்டபெல்லாபூர், வழியாகச் சென்று, தபஸ்பேட்டையில் முடிவடைகிறது.  இதன் நீளம் சுமார் 139.18 கிலோமீட்டர்.  இதில், 122.38 கிலோமீட்டர் நீளம், கர்நாடகாவில் பயணிக்கிறது.  மீதமுள்ள 16.8 கிலோமீட்டர் சாலை, தமிழ்நாடு பகுதியில் பயணிக்கிறது.

தமிழ்நாடு பகுதியில் அமைந்துள்ள, 16.8 கிலோமீட்டரில், சுமார் 13.8 கிலோமீட்டர் நீளத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்து விட்டது. அதாவது, ஓசூர் சமத்துவபுரம் தாண்டியபின், சாலை அகலமான சாலையாக அமைந்துள்ளது.  சமத்துவபுரம் முதல் ஓசூர் பேருந்து நிலையம் அருகில் வரை உள்ள, மீதமுள்ள 3 கிலோமீட்டர் குண்டும் குழியுமாக, பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

இத்தகைய சூழலில், நாளொரு பொழுதும், இச்சாலையில் பயணிப்பவர்கள் தொடர் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த பாகலூர் சாலையை பொருத்தவரை, அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு, முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதற்கிடையே நம்மிடம் பேசிய தன்னார்வலர் ஒருவர், பதினாறு கோடி ரூபாய், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை, இச்சாலையை சரி செய்வதற்கு ஒதுக்கிய பின்னரும், தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த பொறியாளர் ஒருவர் அரசியல் சார்பு கொண்டு, தமிழ்நாடு அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த சாலையை, சரி செய்யாமல், நாட்கள் கடத்தி வருவதாக கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த நாள், சமூக வலைதளத்தில், தமிழ்நாடு அரசு, பாகலூர் சாலை மேம்பாட்டிற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும், அதற்கான பணிகள் துவங்க, பூமி பூஜை நடத்தப்பட்டதாகவும், தகவல்கள் பகிரப்பட்டன.  இல்லாத ஒன்றை இருப்பது போன்று சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்புவது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது என சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் ஆறாம் நாள் உறுதியளித்தபடி, பாகலூர் சாலை சீர் செய்யும் பணிகள் துவங்காதது குறித்து, தமிழ்நாடு அரசின், தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஓசூர் உதவி கோட்ட பொறியாளர், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, தேசிய நெடுஞ்சாலை துறையின் சென்னை வட்டார அலுவலகத்தில்,  ஒப்பந்ததாரருக்கான ஆவணங்கள் ஏற்படுத்தும் பணி நிறைவடையவில்லை என்றும், அதனால் நாட்கள் கடந்து செல்வதாகவும், தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

அரசியலும், அரசியல் சூழ்ச்சிகளும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடத்திக் கொள்ளட்டும்.  இந்த மூன்று கிலோ மீட்டர் சாலையை சரி செய்வதற்கு, நான்கு ஆண்டுகளுக்கு மேல் நாட்கள் கடத்துவது, ஓசூர் தலைவர்களின் தலைமை பண்பை எடுத்துக் கூறுவதாக இல்லை என ஓசூர் பொதுமக்களும், தன்னார்வலர்களும், அரசியல் நோக்கர்களும், கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்று காரிக்கிழமை அல்லது வருகிற திங்கட்கிழமை, பாகலூர் சாலையின் சீர்கேட்டால், கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பொதுமக்கள், ஏதாவது ஒரு வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர், என ஓசூர் ஆன்லைனுக்கு கிடைக்கும் நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

damaged Bagalur highway road, resembles death trap, accident zone, pothole road, motor bike riders suffer, agitated public.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: