கோடை மழை நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. கோடை வெப்பத்திலிருந்து நம்மை தப்பி வைப்பதும் இந்த மழை தான். இதே மழையால் சில ஆபத்துக்களும் ஏற்படத்தான் செய்கிறது. பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம். கோடை மழை நாட்களில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டு விடும், அதை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில நாட்களில், ஓசூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில், பலர், பாதிப்படைந்து மருத்துவ உதவி பெற்று சென்றுள்ளனர்.
கோடை மழை நாட்களில், மண் வெப்பமடையும் போது, நிலத்தடியில் வாழும் பூச்சிகள், எடுத்துக்காட்டாக, கரையான், எறும்பு வகைகள், சிறு வண்டு வகைகள் என ஏராளமானவை, இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்புக்காக புவிக்கு மேலே வந்து சேர்கின்றன. இவை இரவில் பெருமளவில் செயலில் இருப்பவை. இருள் சூழ்ந்த நேரத்தில் இவை வெளியில் வருவதால், இயற்கையாகவே வெளிச்சம் நோக்கிச் செல்வது அவற்றின் இயல்பு.
இருட்டும் வேளையில், வீடுகளில் வெளிச்சம் இருப்பதால், இவை அதனை நோக்கி பறந்து, திறந்த ஜன்னல், கதவுகள் வழியாக உள்ளே நுழைகின்றன.
காதுகள் வெப்பம் வெளியேறும் இடமாக இருப்பதாலும், தூங்கும் மனிதர்கள் நகராமல் அமைதியாக இருப்பதால், அவற்றுக்குப் பாதுகாப்பான இடம் போல தோன்றும் காதுக்குள் சென்று விடுகின்றன.
இதுகுறித்து ஓசூர் ஆன்லைனிடம் கருத்து தெரிவித்த தன்னார்வலர் திரு உமேஷ், ஓசூர் அரசு மருத்துவமனை, காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் மருத்துவர் அமுதா, postgraduate Diploma in Otorhinolaryngology மற்றும் Fellowship in Clinical Diabetology பயின்று இருப்பதாகவும், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு காதுக்குள் பூச்சி, மூச்சுக்குழாய் மற்றும் தொண்டையில் தவறுதலாக வெளி புகுந்த நிலையில் வரும் நோயாளிகளுக்கு, அவற்றை அகற்றி, திறம்பட மருத்துவ பணி செய்து வருவதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஓசூர் ஆன்லைனிடம் கருத்து தெரிவித்த கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவர் மேலும் கூறுகையில்
ஒரு பூச்சி காதுக்குள் சென்றுவிட்டால், உடனடியாக பாதிப்புக்கு உள்ளான நபருக்கு கடுமையான காது வலி, அதாவது, திடீரென மண்டையை துளைப்பது போன்ற கடுமையான வலி ஏற்படலாம்.
காதுக்குள் நுழைந்த பூச்சி, செவி அறையில் நடமாடுவதால், பல வகையான கரடு முரடான ஒலிகள் காதுக்குள் ஏற்படுத்தும். இது அச்ச மனநிலையை ஏற்படுத்துகிறது.
பெரிய அளவிலான பூச்சியாக இருப்பின், அவற்றின் செயல்பாட்டினால் காதுக்குள் சிராய்ப்புகள் கடுமையாக ஏற்பட்டு, காது வழியாக குருதி வழியலாம்.
காது அடைப்பு உணர்வு பொதுவாக ஏற்படும். இதனால், மூளையில் சமநிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு சிலருக்கு மயக்கம் ஏற்படும்.
மருத்துவ அடிப்படையில், காதுக்குள் பூச்சிகள் இருப்பதை "காதுக்குள் வெளிப்பொருட்கள்" என்ற தலைப்பில் அடங்கும். இதுவொரு உயிருக்கு அச்சுறுத்தலான நிலை இல்லை என்றாலும், சில நேரங்களில், இது உடனடியாக கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கும். மனிதனுடைய காதுக்குள் outer ear canal, ear drum, மற்றும் middle ear என மூன்று முதன்மை பகுதிகள் உள்ளன. பூச்சி இவற்றை பாதிப்பது, கேட்கும் திறனை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
சிறிய பூச்சிகள் காதுக்குள் நுழையும் போது, காதினில் இருக்கும் பிசின் போன்ற மெழுகு தன்மையால் இவை பொதுவாக காதுக்குள் ஒட்டிக் கொள்ளும். தன்னை விடுவிக்க அவை போராடுவதால், காதினுள் கடுமையான இரைச்சல் ஏற்பட்டு, மன பாதிப்பை ஏற்படுத்தலாம்.
காதுக்குள் பூச்சி செல்வதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எத்தகைய முதல் உதவி வழங்க வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முதலில் செய்ய வேண்டியது, பாதிக்கப்பட்ட நபரை அமைதிப்படுத்துவது. காதுக்குள் வேறு எந்த பொருளையும் திணித்து, உள்ளே சென்ற பூச்சியை வெளியே எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். அத்தகைய முயற்சிகள், பல நேரங்களில், மேற்கொண்டு ஆழமான பகுதிக்கு பூச்சியை இட்டுச் செல்லும். இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, செவித்திறன் இழப்பு ஏற்படலாம்.
பூச்சி உள்ளே சென்ற காதை, சாய்வாக வைத்து, ஆடாமல் அசையாமல், ஒரு நிமிடம் வரை பொறுமை காக்கவும். உள்ளே சென்ற பூச்சி தானாக வெளியே வர இது வாய்ப்பு ஏற்படுத்தலாம்.
காதுக்குள் தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது சமையலுக்கு பயன்படுத்தப்படாத சமையல் எண்ணெயை காதுக்குள் விட்டால், பூச்சி மூச்சு விட முடியாமல் இறக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இத்தகைய முயற்சிகளை, மருத்துவம் பயின்ற மருத்துவர் அல்லது செவிலியர் உதவியுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்ட பின் மருத்துவம் என்பதை காட்டிலும், பாதிப்பை தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாளரங்களுக்கு தடுப்பு வலைகள் அமைத்துக் கொள்வது முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கை.
தூங்கச் செல்வதற்கு முன்பு படுக்கையறை மற்றும் படுக்கையில் பூச்சிகள் உள்ளனவா என்பதை ஒரு முறைக்கு இருமுறையாக ஆய்வு செய்து அதன் பின் பயன்படுத்தவும்.
காதுக்குள் பூச்சி செல்வதை, பாதிப்பு ஏற்படுத்தாத ஒன்றாக கருத வேண்டாம். சிறிய தவறான நடவடிக்கையும், கவனிக்காமல் விட்டு விடுவதும், நிரந்தரமான செவித்திறன் இழப்பிற்கு வழிவகை செய்து விடும்.