பாகலூர் சாலை பணிகள் இப்போது எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள, பருந்து பார்வை காட்சிகளை, உங்களுக்கு வழங்குகிறோம்.
ஓசூரின் முதன்மையான சாலைகளில் ஒன்று பாகலூர் சாலை. இந்த சாலை, ஓசூர் பாலாஜி திரையரங்கம் அருகே துவங்கி, தேசிய நெடுஞ்சாலை 44 ஐ கடந்து, பாகலூர் வரை செல்கிறது.
ஓசூர் பேருந்து நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பு துவங்கி, சமத்துவபுரம் ஓடை வரையிலான தொலைவு, சுமார் ஒன்றே முக்கால் கிலோமீட்டருக்கும் குறைவாக உள்ளதாக, காணொளி காட்சி பதிவு செய்த போது அளந்தோம்.
சுமார் ஏழு ஆண்டுகளாக பல்வேறு தடங்கல்களால், இந்த ஒன்றே முக்கால் கிலோமீட்டர் பகுதி சாலையை மேம்படுத்த இயலாத சூழல் நிலவி வந்த நிலையில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இப்போது சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சாலையை, ராமநாயக்கன் ஏரி ராஜ கால்வாய், தனஞ்செயா ஹோட்டல் அருகே கடந்து செல்கிறது. தளி பகுதியில் துவங்கி, சுமார் 8 ஏரிகளின் மறுகால் தண்ணீரை, அலசநத்தம் ஏரிக்கு எடுத்துச் செல்கிறது. அடுத்ததாக, கே சி சி நகர் அருகே, சந்திரம்பிகை ஏரி உள்ளிட்ட, அத்திப்பள்ளி வரை உள்ள ஏரிகளின் மறுகால் தண்ணீரை எடுத்துச் செல்கிறது.
நான்கு இடங்களில், சாலையின் குறுக்கே தண்ணீர் ஓடுவதற்கு சிறிய அளவிலான பாலங்கள் கட்டப்படுவதை நாம் பருந்து பார்வை காணொளி காட்சியில் காண இயல்கிறது.
ஓசூர் பேருந்து நிலையம் சந்திப்பு துவங்கி, என் ஜி ஜி ஓ காலனி வரை, ஒரு பகுதி சாலையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதே வேகத்தில் வேலைகள் தொடர்ந்தால், அடுத்த பத்து நாட்களுக்குள், ஒரு பகுதி சாலை பணிகள் முழுமையாக நிறைவேறி விடும்.
விரைவாக பணிகள் நடப்பது, பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் ஓசூர் ஆன்லைனிடம், கேட்ட முதன்மையான கேள்வி, பாதாள சாக்கடை திட்டம், இப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் பொழுது, இந்த சாலை மீண்டும் உடைக்கப்படுமா? என்பதாக இருந்தது.
சாலையின் ஓரத்தில், வடிகால் ஓடை, சாலையைக் காட்டிலும் சுமார் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை, உயரமாக அமைக்கிறார்கள். அப்படியானால், சாலை ஒன்றிய அடி உயரம் உயர்த்தப்பட போகிறதா? மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் வினவிய போது, ஆம் என்று பதில் வந்தது. ஆனால் இப்பதில், அலுவல் முறையில் வந்ததல்ல.
அடுத்ததாக மக்கள் கேட்கும் கேள்வி, சமத்துவபுரம் முதல் என் ஜி ஜி ஓ காலனி வரை, சாலையின் மீது புதிதாக தார்சாலை போடப்பட்டுள்ளது. அப்படியானால், இப்பகுதியில் சாலை அமைக்கும் பணி முடிந்து விட்டதா?
காணொளியில், இப்பகுதியில் புதிதாக தார் சாலை குறுகிய அளவில் போடப்பட்டிருப்பது தெளிவாகிறது. சாலை முழு அகலத்திற்கு அமைக்கப்படுமா? அல்லது இதே அளவில் விடப்படுமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகள், எம்மிடம் கேட்கப்பட்டன.
தெளிவான தகவல்களை தருவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதால், Comment section-ல் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள், இது குறித்து பதிவிட்டு பிறருக்கு உதவ வேண்டுகிறோம். இந்த சாலை பணிகள் குறித்து வேறு ஏதாவது கேள்விகள் இருந்தாலும், பதிவிடுங்கள்.