பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கும் இடமாக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் ஊர் ஒசூர். பெரும்பாலான முதலீடுகள் பன்னாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
தரை போக்குவரத்தை பொருத்தவரை, ஓசூரில் சாலை வசதிகள் ஏராளம். தொடர் வண்டி பாதை, இப்போது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 20 விரைவு ரயில்கள் ஓசூர் வழியாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக பகல் நேரத்தில் இயக்கப்படும், எர்ணாகுளம் அதிவிரைவு தொடர் வண்டி மற்றும் கோயம்புத்தூர் வந்தே பாரத் சிறப்பு அதிவிரைவு தொடர்வண்டி.
நமோ பாரத் தொடர்வண்டிகள் என்பது Rapid X, வட்டார விரைவு போக்குவரத்து சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்திய மின்சார பல அலகு, E. M. U. தொடர் வண்டியாகும். Regional Rapid Transit System R.R.T.S. என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய தொடர்வண்டிகளை பிரெஞ்சு ரோலிங் ஸ்டாக் உற்பத்தியாளரான ஆல்ஸ்டோம், தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள அதன் பொறியியல் நடுவத்தில் வடிவமைத்து, குஜராத்தின் சவ்லியில் உற்பத்தி செய்கிறது.
நமோ பாரத் தொடர் வண்டிகளின் சிறப்பு, விரைவான நகர் போக்குவரத்திற்கு ஏற்புடையதாக அமைக்கப்பட்ட அதன் செயல்திறன். குறிப்பாக மின் சேமிப்பு மற்றும் காற்று மிதப்படுத்தும் வசதி.
பெங்களூருவை நடுவாக வைத்து, நான்கு திசைகளுக்கும் இத்தகைய தொடர்வண்டிகளை இயக்குவது என்றும், அதில் ஒரு திசையில், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியை இணைக்கும் விதமாக வழித்தடம் அமைத்து, தொடர்வண்டி இயக்குவது.
ஓசூர் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதால், உற்பத்தியாகும் சரக்குகளை கையாள, சாலைகளை தாண்டி இருப்புப் பாதையும், அதன் வளர்ச்சி ஒரு பகுதியின் கட்டாய தேவையாக இருந்து வருகிறது.
பிற நகர்களை நகரங்களை பொருத்தவரை, தொழிலாளர்கள் பயணிப்பதற்கு, தொடர்வண்டிகள் முதன்மை பங்கு வகிக்கின்றன. அதே போன்ற தேவை ஓசூருக்கும் இருப்பதால், இருப்புப் பாதை வசதிகளை மேம்படுத்துவது கட்டாயமாகிறது.
ஓசூர் நகர், இந்தியாவின் பிற நகரங்களுடன், அதிவிரைவு தொடர்வண்டிகளால், குறிப்பாக பிசினஸ் கிளாஸ் தொடர்வண்டிகளால் இணைக்கப்பட்டால், ஓசூரின் தொழில் வளர்ச்சி, மேலும் விரைவுபடுத்தப்படும்.
விரைவு தொடர்வண்டிகளின் திட்டங்கள், அரசியல் பேச்சிலும், காகிதங்களிலும் நின்று விடாமல், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே ஓசூருக்கு அது பயன் தரும். இல்லையேல், ரியல் எஸ்டேட் மாயாஜாலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு, பின் நாட்களில் ஓசூரின் வளர்ச்சிக்கும் அது பாதிப்பு ஏற்படுத்தலாம்.
விரைவு தொடர்வண்டி இணைப்புகள், தொழில் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதால், கல்வி அறிவு பெற்றவர்களுக்கும் கல்வியறிவு அற்றவர்களுக்கும், ஏராளமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தும்.
பிற நகரங்களை பொருத்தவரை, அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள், ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பெங்களூருவின் சென்ட்ரல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், கூறிய கருத்துப்படி, அதிவிரைவு ரயில் திட்டங்கள், பெங்களூருவின் சில பகுதிகளில், ரியல் எஸ்டேட் விலை ஏற்றத்திற்கு வழிவகை செய்து விடுகிறது. ஆனால் இத்தகைய சூழல், ஓசூர் பொறுத்த வரை இல்லை. ஓசூரின் திட்டமிடப்பட்ட வேகமான வளர்ச்சி, உண்மையான வளர்ச்சியாக திகழ்வதால், ரியல் எஸ்டேட் விலை ஏற்றம் இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு தொடரும்.
கோயம்புத்தூர், தூத்துக்குடி, பெங்களூர், மும்பை போன்ற வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரங்களுடன், ஓசூர் அதிவிரைவு தொடர்வண்டிகள் மூலம் இணைக்கப்படுவதால், தொழில் முனைவோரும், தொழிலாளர்களும், வேகமாக பயணிக்க இயலும். மேலும், சரக்குகளை கையாள தனி வழித்தடம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் தொழில் வளர்ச்சி பல மடங்கு உயரும்.
அதிவிரைவு தொடர் வண்டிகள், ஓசூருடன் இணைக்கப்படுவதால், ஓசூரில் மருத்துவமனைகளின் தரம் மேலும் உயரும். பல்வேறு வகையான கல்விக் கூடங்களும் ஓசூரில் தோன்றும்.
ஓசூரின் வேகமான வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே வேளையில், இங்கிருக்கும் அடர்ந்த காடுகளும், அதில் வாழும் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், தாவரங்களும், பறவைகளும் பூச்சிகளும் பாதுகாக்க அரசு முறையான திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இது தொடர்பில், கசகசா விதைகளின் அளவிற்கு கூட கவனம் செலுத்துவது இல்லை என தன்னார்வலர்கள் வருந்துகின்றனர்.
பழங்குடியின மக்களின் பண்பாடும் காக்கப்பட வேண்டும். அவர்களின் வழிபாட்டு முறைகள் சூறையாடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அஞ்செட்டி அருகே மல்லிகார்ஜுனதுர்க்கம் என்ற இடத்தில், பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்த பழங்குடியினரின் தேவதை, முன்னேறிய வகுப்பினரின் வற்புறுத்தலால், அப்புறப்படுத்தப்பட்டு, வேறு ஒரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளார்.
இந்த காணொளியை பார்க்கும் பொதுமக்கள், ஓசூர் வேகமான வளர்ச்சி, எத்தகைய தாக்கத்தை தங்களது வாழ்வில் ஏற்படுத்துகிறது? உண்மையான வளர்ச்சியை தான் ஓசூர் முன்னெடுத்துச் செல்கிறதா? அல்லது, வளர்ச்சி என்கிற போர்வையில், விளைநிலங்களும், காடுகளும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றனவா? என்பது தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடுங்கள். உங்களது குரலை ஓங்கி ஒலிக்க என்றென்றும் ஓசூர் ஆன்லைன் ஆயத்தமாக உள்ளது.