பெங்களூரு கோவை இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் மாறநாயக்கனபள்ளி ரயில் நிலையத்தில் மராமத்து பணிகள் நடப்பதால் ஜூலை 6 அன்று இரு மார்க்கத்திலும் காட்பாடி வழியாக பயணிக்கும். கோயம்புத்தூர் முதல் ஓசூர் வழி மும்பை செல்லும் லோக்மானிய திலக் விரைவு வண்டி, அதே போன்று மாற்றுப்பாதையில் அன்றைய நாளில் மட்டும் திருப்பி விடப்படுகிறது. இதனால் அன்றைய நாளில், ஓசூர் மற்றும் தர்மபுரி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இந்த தொடர்வண்டிகளின் சேவை இல்லை.
கெலமங்கலம் அரசு துவக்க மக்கள் நல நடுவத்தின் கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 13 அரை இலட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முறையாக நிறைவேற்றப்படாததால் சுவர்களில் நீர் கசிவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் மின் கசிவு ஏற்பட்டு நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் உதவியாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென, கிருஷ்ணகிரி பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றப்பட்டதால், மாவட்ட மக்கள் குழப்பம். பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பதிவாளர் அலுவலகம், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே மா குளிர் பதன கிடங்கு வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே குந்துகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, ஏணிப்பண்டை, வீரசட்டி ஏரி மற்றும் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையான பேருந்து வசதி வேண்டும் எனக் கூறி, குந்துகோட்டையில் பதாகை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.