போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் ஓசூர். திறம்பட திட்டமிட்டு செயலாற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர். முழு ஒத்துழைப்பு நல்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர். காவல்துறை மற்றும் காவல்துறையுடன் ஒத்துழைத்து செயல்படும் டிராபிக் வார்டன் செயல்பாடுகளும், இக்கட்டான இச்சூழலில் அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளும் பாராட்டத்தக்கது.
முதலில் நாம் கவனிக்க இருப்பது, பாலத்தில் ஏன் பழுது ஏற்பட்டது, என்பது குறித்த ஒரு பார்வை...
கடந்த நாள் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் வட்டார மேலாளர் வீரேந்தர் சாம்பியர், 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பாலம், பல ஆண்டுகள் ஆனதால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், மல்டி ஆக்சில் கனரக வண்டிகள் பெருமளவில் இந்த பாலத்தை பயன்படுத்துவதால், பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பியரிங் உடைந்து பாலத்தின் பலகை விலகி விட்டதாக கருத்து தெரிவித்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய தன்னார்வலர் மூர்த்தி, பாலம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது என்பது ஊரறிந்தது. இத்தகைய பாலங்கள் ஏராளமானவை மீது தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று பாலம் பழுதடைந்து பயணிப்போரை அச்சுறுத்தியது. ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஏன் முறையான பராமரிப்புகளை நெடுஞ்சாலையில் மேற்கொள்வது இல்லை? பிரேக் பிடிப்பதால் பாலம் விலகும் என்றால், எத்தகைய மராமத்து பணிகள் பாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது விளங்குகிறது. இதை விட பெரிய விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியான பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏதாவது சட்ட நடைமுறை ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உள்ளதா? பொறுப்பற்ற இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கருத்து தெரிவித்தார்.
மேலும் கருத்து கூறிய அவர், இந்தியா முழுவதும் பாலங்களில் பழுது ஏற்பட்டால், அதை பார்வையிட நிபுணர் டெல்லியில் இருந்து வர வேண்டும் என்று இருக்கும் நிலை உடனடியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். சாலை போக்குவரத்து என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொண்டு, வட்டாரத்திற்கு ஒரு குழு என்ற வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கு இணங்க, தருமபுரி மாவட்ட ஆட்சியர், திறம்பட போக்குவரத்தை அம்மாவட்டத்தின் எல்லையிலே காவல்துறை உதவியுடன் திசை திருப்பி விட்டு வருவதால், பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஓசூரில் குறைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகளை தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிறந்த அர்ப்பணிப்புடன் காவல்துறை மற்றும் டிராபிக் வார்டன்கள் சீதாராம் மேடு துவங்கி, உள் வட்டச் சாலை கடந்து செல்லும், ராயக்கோட்டை சாலை அசோக் தூண் சந்திப்பு, தொடர்வண்டி நிலையம் சாலை சந்திப்பு, தேன்கனிக்கோட்டை சாலை சந்திப்பு, தளி சாலை சந்திப்பு என எல்லா சந்திப்புகளிலும் ஈ எஸ் ஐ மருத்துவமனை வரை திறம்பட போக்குவரத்தை திசை திருப்பி, மக்களுக்கு பெரிய அளவில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும், பேருந்து நிலையத்தை சுற்றி இயங்கி வரும் ஆக்கிரமிப்பு சாலையோர கடைகள், வழக்கம் போல தனது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தலையீடுகளே இதற்கு காரணம் என காவல்துறையைச் சார்ந்து பணியாற்றும் தன்னார்வலர் ஒருவர் எம்மிடம் கருத்து தெரிவித்தார்.
மேம்பாலத்தின் பாதிப்படையாத பகுதியை, கடந்த நாள் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி, இருவழிப்பாதையாக மாற்றி அமைத்து, பாலத்தின் மீது போக்குவரத்து இயங்கி வருகிறது. அனைத்து தூண்களையும், அதன் இணைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
பாதிப்படைந்த பகுதியில், சிறிது நேரம் இலகுரக வண்டிகளை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடிக்கடி தளிசாலையின் இருப்புப் பாதை கதவுகள் மூடப்படுவதால், தளி சாலை உட்பட்ட சாலை சந்திப்பு பகுதியில் மட்டும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.