Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Book Festival - ஓசூர் புத்தகத் திருவிழா - நிகழ்ச்சி 03 July 2025

ஓசூரில் வருகிற ஜூலை 11 முதல் 22 வரை 14 வது ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.  மூகண்டபள்ளியில் உள்ள ஹோட்டல் ஹில்ஸ் இன் கன்வென்ஷன் சென்டர் வளாகத்தில் ஒவ்வொரு நாளும் காலை பதினோரு மணி முதல் இரவு 9 மணி வரை என தொடர்ந்து 12 நாட்களுக்கு புத்தகத் திருவிழா நடைபெறும். 

14 ஆவது ஆண்டு ஓசூர் புத்தகத் திருவிழாவின் பரப்புரை வண்டிகளை, பச்சைக் கொடி அசைத்து, துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, ஓசூர் அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் வட்டாட்சியர் குணசிவா, தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் TNROA மாவட்ட தலைவர் சக்திவேல், வட்டாட்சியர் மற்றும் TNROA மாநிலச் செயலாளர் பெருமாள், ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை குறள் வாசுகி அவர்கள் தலைமை தாங்கினார். 

ஓசூர் புத்தகத் திருவிழா செயலாளர் சந்துரு வரவேற்புரை வழங்கினார்.  ஓசூர் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  ஓசூர் புத்தகத் திருவிழா பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.

ஓசூர் வட்டாட்சியர் குணசிவா பச்சைக்கொடி அசைத்து, பரப்புரைக்கு பயன்படுத்த இரண்டு வண்டிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். 

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழா வளாகத்திற்கு நேரில் வருகை புரிந்து புத்தகங்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  ஓசூர் புத்தகத் திருவிழா குழுவினர், புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக புத்தகம் வாங்குவதற்கு என்று சிறுசேமிப்பு திட்டங்களையும் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

புத்தகத் திருவிழா குழுவினரை பொறுத்தவரை, அதை ஆண்டொன்றுக்கு நடைபெறும் 12 நாள் நிகழ்ச்சி என்று இல்லாமல், ஆண்டு முழுவதும் மாணாக்கர்களிடையே பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை நடத்தி, இளைய சமூகத்திடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று பேராசிரியர் இரா காளீஸ்வரன் அவர்கள் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்துகிறார்.  இரண்டாம் நாள் ஜூலை 12 அன்று இரா நடராசன் வாசிப்பே வெல்லும் என்கிற தலைப்பில் சொற்பொழிவு.  ஜூலை 13 கவிஞர் யுகபாரதி காற்றும் கவிதையும் தலைப்பில். ஜூலை 14, பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், புத்தகம் எனும் போதிமரம் என்கிற தலைப்பில். ஜூலை 15 மனவளக்கலை பேராசிரியர் ஆர். கோபால் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திருச்சி முனைவர் திலகவதி ஆகியோரின் சொற்பொழிவுகள்.  ஜூலை 16 அறிவன் கிழமை பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் சொற்பொழிவு.  ஜூலை 17 வியாழன் கிழமை, எழுத்தாளர் - சூழலியலாளர்  -  குழந்தை இலக்கியவாதி  - மொழிபெயர்ப்பாளர்  - பேச்சாளர்  - செயல்பாட்டாளர் திருமிகு நக்கீரன் அவர்கள் இயற்கையே இனிய அறிவியல் என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார். 

ஜூலை 18 வெள்ளிக்கிழமை ஊழலற்ற நிர்வாகத்திற்கு மக்களின் பங்களிப்பு தேவை என்பது குறித்து மாண்புமிகு முனைவர் நீதி அரசர் வி ராமராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். 

ஜூலை 19 காரிக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர் ஆளூர் ஷாநவாஸ் மானுடம் வெல்லும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். 

ஜூலை 20 ஞாயிற்றுக்கிழமை நியூஸ் 18 ஆசிரியர் கார்த்திகை செல்வன், அறிவே அழகு - அதுவே அதிகாரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 

ஜூலை 21 திங்கள் கிழமை அன்று, அனைத்திந்திய வானொலியின் மேனாள் நிகழ்ச்சி இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் எது நாகரீகம் என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார்.  என்றென்றும் புத்தகங்கள் என்ற தலைப்பில், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாசிரியர், கதை சொல்லி பவா செல்லதுரை அவர்கள் ஜூலை 22 அன்று சொற்பொழிவாற்றுகிறார். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: