Hosur News, ஓசூர் செய்திகள் - Devarabetta Hill Temple near Hosur – Hidden Chola-Era Wonder You Must Visit!

The Forgotten Chola Temple of Devarabetta | A Thousand-Year-Old Spiritual Marvel near Hosur & Thally Just 32 km from Hosur, near Thally, lies Devarabetta, a sacred hill temple that echoes the glory of the Chola Empire. Known as the “Thalai Kaveri of the South,” this ancient temple — dedicated to Mallappa Swamy (Lord Shiva) — offers spiritual peace, scenic beauty, and architectural brilliance. 🏔️ Highlights: Built by the Cholas over 1,000 years ago 328 steps leading to the hilltop shrine Two Nandi statues — a rare temple feature Hidden in serene forest near Thally A perfect one-day spiritual trip from Hosur 📍 Location: Devarabetta, near Thally, Krishnagiri District 🛕 Best Time to Visit: Morning hours, clear skies 🎥 Drone Footage & Coverage: HosurOnline 👉 Visit, reflect, and rediscover Tamil Nadu’s forgotten heritage. 💬 Share your thoughts or experiences from Devarabetta in the comments!

ஓசூர் அருகே தலைக் காவேரிக்கு ஒப்பாக புனிதமாக கருதப்படும் இடம்.  ஓசூரில் இருந்து 32 கிலோ மீட்டர் பயண தொலைவில். சோழர்கள் கட்டிய கோவில். ஆன்மீகம், அமைதி, கண்கொள்ளாக் காட்சிகள், ஒரு நாள் ஆன்மீகம் கலந்த சுற்றுலா பயணத்திற்கு சிறந்த இடம். தளி அருகே  தேவாரப்பட்டா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஓசூரில் இருந்து தளி சாலையில் பயணித்து, மதகொண்டபள்ளி மற்றும் சின்ன உப்பனூர் ஆகிய ஊர்களை தாண்டிய பின்பு கும்மளாபுரம் செல்வதற்கான சாலை சந்திப்பு வரும்.  அதில் வலது புறமாக திரும்பி, கும்மளாபுரம் சாலையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.  சங்கேபள்ளியில் தேவாரப்பட்டா கோவிலுக்கான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.  இடது புறமாக திரும்பி, நுழைவாயில் வழியாக சென்றால், நேர் எதிர்ப்புறம் தேவாரப்பட்டா மலைக்கோவிலை காணலாம். 

இங்கு மொத்தம் மூன்று குன்றுகள் அமைந்துள்ளது.  முதலாவது உயரமான குன்றின் மீது, சோழர்கள் கட்டி எழுப்பிய மல்லப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமர்ந்துள்ளதால் மலையப்ப சுவாமி மருவி மல்லப்ப சுவாமி என்று அழைக்கப்படுகிறார். ஓசூரில் அமைந்துள்ள பெரும்பாலான கோவில்களில் துவக்கம் சோழர்களால் என்றாலும், அடுத்தடுத்து வந்த கங்கவர்கள், ஒய்சாளர்கள், விஜய நகர அரசர்கள் என தொடர்ந்து ஆலய பணி செய்து வந்துள்ளனர்.  ஆனால், இந்த தேவாரப்பட்டா மல்லப்ப சுவாமி கோவிலில், சோழர்களின் சுவடுகள் மட்டுமே உள்ளது.  மேலும், கோவில் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளதால், கல்வெட்டுக்கள் எதுவும் நமக்கு புலப்படவில்லை. 

மலை மீது உள்ள கோவிலுக்கு சென்று வர, சுமார் 328 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பிற்கு, படிக்கட்டின் இரண்டு பக்கவாடுகளிலும் இரும்பு பிடிமானம் கொடுக்கப்பட்டுள்ளது. 

கோவிலின் முகப்பு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தாலும், உட்புறம் சோழர் காலத்து தூண்களை கொண்டுள்ளது.  மல்லப்ப சுவாமி, லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.  அருகில் பார்வதி அம்மையாரும் எழுந்தருளியுள்ளார். 

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு, சாமியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன.  ஒன்றிற்கு கொம்பும் காதும் இல்லை. இதுபோன்று, மூலவரின் முன்பாக இரண்டு நந்திகள் அமையப் பெற்ற கோவில்கள் வேறு எங்கும் இல்லை என சைவ சித்தாந்த ஆன்மீகத்தில் நன்கு ஈடுபாடு உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோவில், பொதுவாக அரசர்கள் வந்து செல்லும் வழி தடத்தில் அமைந்திருக்கவில்லை என்பது இதன் மற்றொரு சிறப்பு.  சோழ அரசன் இங்கு எதற்காக வந்தார், இங்கு ஏன் ஆலயம் அமைத்தார் என்பதற்கான வரலாற்று சுவடுகள் அழிந்துள்ளன.  அடர்ந்த காட்டின் அருகே அமைந்துள்ளது. அதனாலேயே, பிற அரசர்கள் இந்த ஆலயத்திற்க்கான பணியை மேற்கொள்ள இயலாமல் போயிருக்கலாம். 

குன்றின் மீது தட்டையான பரப்பளவு உள்ளது.  அங்கிருந்து இயற்கையை நன்கு ரசிக்கலாம்.  கோவிலின் பின்புறத்தில் ஒரு சிறு குட்டை ஒன்றை காணலாம்.  அதுவே சின்னாறு தோன்றும் புனித இடம்.  காட்டுக்குள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குவது இல்லை.  காட்டுக்குள்ளே செல்லக் கூடாது என கண்டிப்புடன் கூறப்படுகிறது.  ஆலயத்திற்கு வந்த இடத்தில், சட்டத்தை மற்றும் அரசு துறையினரின் கட்டளைகளை மீறுவது பண்பாக அமையாது. ஆகவே மீறிய முயற்சிகளை மேற்கொள்ளாதீர்கள்.  

நாம் வரும் வழியில் இந்த ஆற்றின் ஓடையை காணலாம்.  இந்த ஆறு சங்கனப்பள்ளி ஏரி வழியாக தளி ஏரியைச் சென்றடைகிறது.  தளி ஏரியிலிருந்து, பஞ்சப்பள்ளி அணையை அடைந்து, அங்கிருந்து தர்மபுரி மாவட்டத்தின் விளை நிலங்களுக்கு பாய்கிறது.

இந்த முதன்மையான குன்றின் அருகே, மற்றொரு குன்று அமைந்துள்ளது.  அதில் குகை போன்ற அமைப்பில் சுனை ஒன்று உள்ளது.  இயற்கை சூழலில், தேன்கூடுகளும், குளவி கூடுகளும் குகையில் அமைந்திருப்பதால், அருகில் செல்வதற்கு சற்று தயக்கமாகவே உள்ளது. அருகில் குட்டை ஒன்று உள்ளது.

இரண்டு குன்றுகளுக்கும் நடுவே பாறை போன்ற அமைப்பின் மீது ருத்ர முனீஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது.  முனீஸ்வரன் கோவில் என்றால், முன்ன ஈஸ்வரன் கோவில், அதாவது பழமையான கோவில் என்று பொருள்படுகிறது.  அப்படியானால் இந்த கோவில் முதலில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.  புதிதாக மலைமீது கட்டியதால், பழைய கோவிலை முன்ன ஈஸ்வரன் கோவில் என்று அழைத்திருப்பார்கள்.  அதுவே மருவி முனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம்.  மிகப்பெரிய அளவில் அதை மேம்படுத்தி கட்டுகிறார்கள்.  பாண்டியர்களின் கட்டுமான முறையில் ஆலயத்தில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.  சிவன் இந்த ஆலயத்திலும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். 

ஆலயத்தை சுற்றி மதில் கட்டுகிறார்கள்.  ஏராளமான சிற்ப வடிவமைப்புகளுடன் அழகாக கட்டப்பட்டு வருகிறது. அருகில் மடாலயம் ஒன்றும் உள்ளது.

மூன்றாவது குன்று சற்று உயரம் குறைந்ததாக காட்சியளிக்கிறது.  தொலைவிலிருந்து மூன்று குன்றுகளையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

இந்த இடத்திற்கு ஒரு நாள் சென்று வருவது இன்பக் சுற்றுலாவாக அமைவதுடன் மன அமைதி மற்றும் ஆன்மீக பலன்களைத் தரும்.  ஒரு நாள் சென்று வந்து உங்கள் அனுபவங்களை இங்கே பதிவிடுங்கள்.



Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: