Hosur News, ஓசூர் செய்திகள் - One-Day Journey to Three Historic Temples Through Hosur s Elephant Forest

ஓசூரின் யானைகள் நடமாடும் அடர்ந்த காடுகள் வழியாக, மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களுக்கு ஒரு நாள் பயணம்.

இந்தப் பயணத்தில், 1600 ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தில்லால்லான மாரியம்மன் சிலை...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய சிவாலயம்...

இளநீரில் விளக்கு எரியும் ஆன்மீக நம்பிக்கை...

இவை அனைத்தையும் பார்க்கப் போகிறோம்.

போகும் வழியில், காமராஜர் திறந்து வைத்த துவக்கப்பள்ளி... .

இந்தப் பயணத்திற்காக நாம் தேர்ந்தெடுத்தது, அஞ்செட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக, குந்துக்கோட்டை ஊரை கடந்தவுடன், வடக்கு காவேரி அடர்ந்த காடுகள் நம்மை வரவேற்கத் துவங்குகிறது.

இந்தச் சாலையின் கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்லும் போது இடப்புறத்தில், அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் அழகிய அருவியை காணலாம்.

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை, இந்த அருவி பயணிகளுக்கு அழகிய காட்சியை பரிசளிக்கிறது.

நமது முதல் நிறுத்தம்... அஞ்செட்டி.

சோழர்களின் ஆட்சியில் "அஞ்சிட்டம்" என்று அழைக்கப்பட்ட இந்த ஊரை, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கங்கவர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கான கல்வெட்டு அணுசோனை ஊரில் உள்ளது.

1961ஆம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் மாநில முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்த துவக்கப்பள்ளி, இன்றும் வரலாற்றை அமைதியாக சுமந்து நிற்கிறது.

இந்தக் கட்டிடம் இன்னும் வலுவாக இருக்கும் நிலையிலும், அதை அகற்ற முயற்சி நடைபெறுவதாக தகவல்.

அதற்குப் பதிலாக, கூரைத் தட்டோடுகளை சீரமைத்து, இந்த வரலாற்று அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பம்.

அஞ்செட்டியை விட்டு, உரிகம் சாலையில் சற்று தொலைவு பயணித்தவுடன், தேவே-கவுண்டன்-தொட்டி நம்மை வரவேற்கிறது.

இங்கு, சோழர்கள் கட்டிய சிவ-லிங்கேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது.

கருவறைக்குள் இருக்கும் சிவலிங்கம் அளவில் சிறியதாக தோன்றினாலும், பக்தர்களின் நம்பிக்கையில் அதன் பெருமை அளவற்றது.

ஆலயத்தின் மரக்கதவுகளில் செதுக்கப்பட்டுள்ள கலைப்பணிகள் பார்வையாளர்களை நீண்ட நேரம் ரசிக்க வைக்கின்றன.

தூண்களில் வேலைப்பாடுகள் இல்லாத அமைப்பு, இந்த ஆலயத்தின் பழமையை நினைவூட்டுகிறது.

ஆலயத்தின் வெளிப்புறத்தில், சோழர்கள் கட்டியதாக, பழந்தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

சிவ-லிங்கேஸ்வர சுவாமி கோவிலுக்கு அருகிலேயே வீரபத்திரர் தனி சிற்றாலயத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஆலயத்தின் முகப்பில், பாம்பு சிற்பங்கள் மற்றும் இரண்டு நடு கற்களும் உள்ளன.  ஆலயத்தின் உள்ளே, வீரபத்திரர் கம்பீரமாக காட்சி தருகிறார். 

இந்த ஆலயங்களுக்கு பல ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அவை தனியார் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்ததாக, மீண்டும் காட்டுப்பாதைக்குள் நுழைகிறோம்.

யானைகள் மற்றும் காட்டு எருமைகள் நடமாடும் மலைப்பாங்கான சாலையை கடந்து உரிகம் சென்றடைந்தோம்.

அங்கிருந்து சுமார் பதினைந்து நிமிடப் பயணத்தில், ஜீன்மானத்தம்.

இங்கு நம்மை வரவேற்பது, மாரியம்மன் அவருடைய அண்ணனுடன் எழுந்தருளியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம். 

மரத்தில் வடிவமைக்கப்பட்ட மாரியம்மன் சிலை மற்றும் அவரது அண்ணனின் சிலை, பல நூற்றாண்டுகளுக்கு முன், சேலம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பிக்கை உள்ளது.

இன்றளவும் சேலம் அருகே தம்மம்பட்டியில்மரத்தில் சிலை செதுக்கும் கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆலயத்தில் இன்னொரு வியப்பும் காத்திருக்கிறது.  மரச்சிலை நிறுவுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கும் பழமையான  மாரியம்மன் சிலை உள்ளது.  இதில்  கும்பம் வடிவில் மாரியம்மன் காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  வேண்டுதல்கள் நிறைவேறுமா? முயற்சியை தொடரலாமா? என்பதை அறிந்து கொள்ள, சாமிக்கு பூ போட்டு கேட்கின்றனர்.

நீண்ட நெடுங்காலமாக, ஆலயத்தில் எருமை பலி கொடுக்கும் வழிபாட்டு முறை இருந்த நிலையில், நூறு ஒந்து சாமிகள், இந்த ஆலயத்தில் வழிபட துவங்கியதை தொடர்ந்து, விலங்குகளை பலி கொடுக்கும் பழக்கம் கைவிடப்பட்டுள்ளது.

ஜீன்மானத்தம் ஊரில் இருந்து அடர்ந்த காடுகளுக்கு இடையே பயணித்தால், நூறு ஒந்து சாமி மலை.

இங்கே குகை கோவிலுக்குள் நுழைந்த உடன் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தை மற்ற ஆலயங்களிலிருந்து தனித்துவமாக்குவது, இளநீரில் விளக்கு ஏற்றும் வழிபாடு.

ஆன்மீக ஈடுபாட்டுடன், இந்த வழிபாட்டில் பங்கெடுப்பது, மன அமைதியையும், நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றி பாதைக்கும் இட்டுச் செல்லும்.

"இளநீரில் விளக்கு எரியுமா?"... என்ற  கேள்வியுடன், ஆராய்ச்சி ஊக்கத்துடன் செல்ல முனைபவர்கள், இங்கே செல்லாமல் இருப்பது, உங்களுக்கும், பிறரின் ஆன்மீக வழிபாட்டு நம்பிக்கைக்கும் நல்லது.

"நூறு ஒந்து சாமி" என ஏன் அழைக்கப்படுகிறார்?.  இதற்கான விடை…, இப்பகுதியில் ஒரு சாமியார் வாழ்ந்து வந்தாராம்.  திடீரென ஒரு நாள், அவரை தேடி 100 சாமியார்கள் ஒரே நேரத்தில் வந்துள்ளனர். அந்த நூறு துறவிகளுக்கும், தாம் ஒருவருக்கு வைத்திருந்த உணவை போதுமான அளவாக, தம் அருளால் பெருக வைத்து வயிறார உணவு வழங்கினாராம்.  அதனால், அந்த சாமியார் "நூறு ஒந்து சாமி" என்று அழைக்கப்படுகிறார் என அப்பகுதி பெரியவர் ஒருவர் எமக்கு எடுத்துரைத்தார்.

அடர்ந்த காடுகளுக்கு நடுவே மறைந்து கிடக்கும் இத்தகைய வரலாறுகளையும், ஆன்மீக மரபுகளையும் பதிவு செய்வதே எங்கள் பயணத்தின் நோக்கம். அடுத்த பயணத்தில் மீண்டும் சந்திப்போம்

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: