படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒசூர் அருகே மிலிதிக்கி என்ற மலை ஊரில் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசய மணி ஒசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இசைப்பாறையில் அக்கா தங்கைகள் ஆகிய தெய்வங்கள் பல்லாங்குழி விளையாடினர் எனவே இது தெய்வப்பாறை எனவும் ஊர் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஒசூரிலிருந்து 80 கிமீ தொலைவில் தேன்கனிகோட்டை வட்டத்திற்குட்பட்ட காட்டு உயிரினினங்கள் வாழும் ஜவளகிரி மலைகளுக்கு அருகில் உள்ள மலை ஊர் மிலிதிக்கி,

இந்த ஊரிலிருந்து அருகிலுள்ள காட்டுப்பகுதியை நோக்கி நடந்து சென்றால் 3 கிமீ தொலைவில் காப்புகாட்டிற்குள் இந்த இசைப்பாறை உள்ளது.

முற்றிலும் மற்ற பாறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிறு சிறு பல்லாங்குழிகள் வடிவத்துடன் இந்த பாறை அமைந்துள்ளது.

இந்த பாறையில் கல்லால் அடித்ததால் மணி ஒசை எழும், இந்த இசைப்பாறை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஊர் மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

இந்த பாறை 4 அடி அகலமும், 3 அடி உயரமும் உடையதாக பெரிய பாறைகற்கள் மீது அமர வைக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க வரும் பொதுமக்கள் இந்த இசைப்பாறையை கற்களால் தட்டிச்செல்வது வழக்கமாகும், மணி ஒசை எழும்புவதால் இந்த பாறை அங்குள்ள கிராமமக்களுக்கு தெரிந்த ஒரு பாறையாகும்.

ஆனால் மணி ஒசையை கொடுக்கும் பாறை மிலிதிக்கி காட்டுப் பகுதிக்குள் உள்ளது என்ற செய்தி சுற்றுப்புற ஊர்களுக்கும் பரவியதை தொடர்ந்து நாள்தோறும் 100க்கணக்கான ஊர் மக்கள் பல்வேறு ஊர்களிலிருந்து இதனை காண இங்கு வந்து செல்கின்றனர்.

சித்தி, பெரியம்மா என்ற அக்கா தங்கையை தெய்வமாக வணங்கப்படும் இவர்கள் இந்த இசைப்பாறையில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடியதாக ஊரில் வயது முதிர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் வழிபாடு செய்யும் தெய்வ நம்பிக்கை என்றால் மறுபுறம் இந்த இசைப்பாறை மேய்ச்சலுக்கு காட்டுபகுதிக்கு வரும் ஆடு, மாடுகள், அதனை மேய்க்கும் ஊர்மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது.

காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில் சிறுத்தை, காட்டு எருமைகள், காட்டுப்பன்றிகள், உள்ளிட்ட அச்சுறுத்தும் காட்டு விலங்குகளும் வாழ்கின்றன.

கால்நடைகளை கொடிய காட்டு விலங்குகளிமிருந்து பாதுகாக்க பொதுமக்கள் இந்த பாறையின் இசையை கற்களால் தட்டி இசையை காடு முழுக்க அதிர வைத்து வருகின்றனர்.

இங்குள்ள மற்ற பாறைகளை தட்டினால் கல் ஒலியும் இந்த இசைப்பாறையின் ஒலி மட்டும் மணி ஒசையும் எழுப்புகின்றது.

கிருட்டிணகிரி மாவட்டம் எண்ணற்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், கற்திட்டைகள், நடுக்கற்கள், கல்வட்டங்கள் ஆகியவற்றை தற்கால மனிதர்களுக்கு கற்கால மனிதர்களின் வாழ்வை சான்றுகளாக விடையளித்துள்ளது.

இதுபோன்ற அதிசய ஒசை எழுப்பும் இசைப்பாறை போல பல கண்டெடுப்புகளும் தேடினால் கிடைக்கும், வரலாற்று ஆர்வலர்களும், தமிழக அரசும் அதற்கு முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.

பேட்டி : 1, மகாருத்ரன், மிலிதிக்கி ஊர்
2, செயந்தி, அஞ்செட்டி ஊர்