காவிரி நீரில் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் 4 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் விவரம்:

* காவிரி நீரில் எந்த மாநிலத்துக்கும் தனிப்பட்ட உரிமை இல்லை

* தமிழ்நாட்டில் காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.

* கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

* கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* கர்நாடகத்துக்கு காவிரி நீர் 284.75 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு:

காவிரி நீரில் தமிழ்நாடு 70 டி.எம்.சி. கூடுதலாக கேட்டிருந்தது. கூடுதலாக பதில், ஏற்கனவே வழங்கியதை விட தண்ணீர் குறைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

காவிரி நதி நீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றதில் கடந்தாண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் மற்றும் ஏஎம்.கன்வீல்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனுக்களை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் அப்போது மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரித்த நீதிமன்றம், “காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்நாடக அரசு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்கு தொடர்ந்து திறக்க வேண்டும் என தெரிவித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி முதல் காவிரி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் வாரத்தில் மூன்று வேலை நாட்கள் என்ற வீதம் மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு மட்டும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் காவிரி வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான உச்சநீதிமன்ற நீதிபதி அமித்தவராய் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஓய்வு பெறவிருப்பதால் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பு இந்த மாதம் 23ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதில் காவிரி வழக்கில் இன்று இறுதி உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நான்கு மாநிலங்களுக்கிடையே இருந்த மிகப்பெரிய நதிநீர் பங்கீடு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. நான்கு மாநிலங்களுக்கு இடையே மிகவும் முக்கிய பிரச்னையாக உள்ள காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையால் நான்கு மாநிலங்களிலும் பதற்றம், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தது…

* பல மாநில நதி நீர் வழக்குச் சட்டம் 1956 உட்பிரிவு 6ன்படியே மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை கடந்த 02-06-1990ல் அமைத்தது. இதன் உட்பிரிவு 6ஏ(1) – காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வழிவகை செய்கிறது.

* காவிரி நடுவர் மன்றம் கடந்த 1990 முதல் 2007 வரையில் 17 ஆண்டுகள் தீர விசாரணை நடத்தி கடந்த 05-02-2007ல் தீர்ப்பை வெளியிட்டது. தீர்ப்பில், காவிரி நதி நீர் படுகையில் கிடைக்கும் 740 டிஎம்சி தண்ணீரில் (50% நம்பகத்தன்மை) கர்நாடகா 270 டிஎம்சி, தமிழ்நாடு 419 டிஎம்சி / (192 டிஎம்சி கர்நாடகாவிலிருந்து), கேரளா 30 டிஎம்சி, புதுச்சேரி 7 டிஎம்சி. என்ற வகையில் பங்கீடு செய்து கொள்ள வேண்டும்.

* நடுவர் மன்ற தீர்ப்பில் நதி நீர் பங்கீட்டை உறுதி செய்து நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியது.

* நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையத்தை கடந்த 12-12-1979ல் அரசிதழில் வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பாமலேயே கடந்த 1980 டிசம்பரில் மேலாண்மை வாரியத்தை அமைத்தது.

* காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு விவரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 19-02-2013ல்தான் 6 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு – அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட்டது. இடைப்பட்ட காலத்தில் நடுவர் மன்ற தீர்ப்பு பற்றி மத்திய அரசு ஏதும் செய்யவில்லை. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதாலேயே மத்திய அரசு நடுவர் மன்ற அறிவிக்கையை முழுவதும் ஏற்றுக் கொண்டதாகவே பொருள். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தின் ஆய்வு இன்றியே அமைத்திருக்க வேண்டும்.

* அதைபோல கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியத்தையும் நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பாமலேயே காலதாமதமின்றி கடந்த 29-05-2014ல் மத்திய அரசு அமைத்தது. (நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது கடந்த 28-05-2014). உண்மை நிலை இப்படியிருக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.