படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி.  இவர் ஒசூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தற்போது பணி ஓய்வுபெற்று இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ராமமூர்த்தி தனது இருசக்கர வண்டியில் சூதாளம் ஊரில் இருந்து ஒசூருக்கு சென்றுள்ளார். அவருடன் கொத்தகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த பசவலிங்கப்பா என்ற பொறித்துறை வினைஞரும் (மெக்கானிக்) உடன் சென்றுள்ளார்.

ஒசூர் அருகேயுள்ள அச்செட்டிப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது கெலமங்கலத்திலிருந்து ஒசூர் நோக்கி வேகமாக சென்ற சிமெண்ட் ஏற்றிய சரக்குந்து ராமமூர்த்தியின் இருசக்கர வண்டியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சிமெண்ட் சரக்குந்தின் சக்கரத்தில் சிக்கி ராமமூர்த்தியும் அவருடன் சென்ற பொறித்துறை வினைஞர் பசவலிங்கப்பாவும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலே பலியாயினர்.

இந்த சாலை விபத்து குறித்து அறிந்த மத்திகிரி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் விபத்தில் உயிரிந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

அச்செட்டிப்பள்ளி பகுதியிலுள்ள சிமெண்ட் கிடக்கிற்கு அதிக அளவில் சரக்குந்துகள் வந்து செல்கின்றன. இந்த சரக்குந்துகளால் அப்பகுதிகளில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பகுதி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மத்திகிரி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.