படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

எப்படி எப்படியெல்லாம் ஏமாத்துராங்கையா?

சிறிய காற்றாலை திட்டம் என்ற போர்வையில் வாடகை நிலம் பிடிப்பது தொடர்பாக பல கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை, பாதிக்கப்பட்ட முகவர்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

சிறுய காற்றாலை அமைப்பதாக கூறி 5 செண்ட் நிலம் கொடுத்தால், முன் பணமாக ரூ.10 லட்சம் தருவதாகவும், மாத வாடகையாக ரூ.10ஆயிரம் தருவதாகவும் கூறி திண்டுக்கல் மாவட்டத்தில் பல லட்சம் மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

சென்னை கோபாலபுரம் பகுதியில் கிளை அலுவலகம் இருப்பதாக தெரிவித்த மகாரச்டிர மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த அணில்ராகுல் சர்மா, சிறிய காற்றாலை அமைப்பதற்காக முகவர்கள் சேர்க்கும் பணியை மதுரையில் நடந்தியுள்ளார்.

நிலம் கொடுப்போர், மண் ஆய்வு நடத்துவதற்கு ரூ.10ஆயிரத்திற்கு வரைவோலை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். பணம் கட்டி பல நாள்களுக்கு பின்னும், மண் ஆய்வு நடைபெறாததால் சந்தேகம் அடைந்த முகவர்கள், சென்னை கிளை அலுவலகம் மற்றும் சோலாப்பூர் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிறிய காற்றாலை மொள்ளமாரி திட்டத்தின் உரிமையாளர் அணில்ராகுல் சர்மா, அவரது கூட்டாளிகள் விசயகுமார், தாமோதரன், சுரேச்குமார், சஞ்சய்மார்டின், நூரல் பேகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தனர்.

காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ஈரோடு இருப்புப்பாதை நிலையம் பகுதியில், அணில்ராகுல் சர்மாவின் கூட்டாளி விசயகுமார்(45) வட்டி நிறுவனம் நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற பாதிக்கப்பட்ட முகவர்கள் அண்ணாதுரை (திண்டுக்கல்), கணேச்குமார் (சேலம்), ராசேந்திரன் (ஈரோடு) ஆகியோர், விசயகுமாரை பிடித்து ஈரோடு குற்றப்பிரிவு காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், காவல் பாதுகாப்புடன் விசயகுமார் திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வைத்து, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.